2015இல் அமெரிக்காவில் உள்ள அரிசோனா பல்கலைக்கழகம், வடமேற்குப் பல்கலைக்கழகம் ஆகிய கல்வி நிறுவனங்களின் சமூகவியல் ஆராய்ச்சி மாணவர்கள் மதங்கள் குறித்த ஓர் ஆய்வை மேற்கொண்டார்கள்.
அந்த ஆய்வு, விரைவில் ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, கனடா, செக் குடியரசு, ஃபின்லாந்து, அயர்லாந்து, நெதர்லாந்து, நியூசிலாந்து, சுவிட்சர்லாந்து ஆகிய ஒன்பது நாடுகளில் மதங்கள் அடியோடு அழிந்து போகும் என்கிறது.
கலிஃபோர்னியாவின் க்ளேர்மோன்ட்டில் உள்ள பிட்சர் கல்லூரியில் சமூகவியல் மற்றும் மதம் சார்பற்ற கல்வித்துறைப் பேராசிரியராகப் பணியாற்றும் 'ஃபில் ஜாக்கர்மேன்', "வாழ்க்கை என்பது மரணத்துடன் முடிந்துவிடக்கூடியது என நம்புபவர்கள் எண்ணிக்கை கோடிக்கணக்கில் அதிகரித்துக்கொண்டே வருகிறது. பல நாடுகளில் முன் எப்போதும் இல்லாத அளவுக்குக் கடவுள் மறுப்புக் கொள்கை பெருகியிருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது. கடவுள் இல்லை; வாழ்க்கை என்பது நிச்சயம் ஒருமுறைதான் என இவர்கள் உறுதியாக நம்புகின்றனர்" என்கிறார்.
செக் குடியரசில் நடந்த கணக்கெடுப்பு ஒன்றில், அறுபது சதவீதம் பேர் தாங்கள் எந்த மதத்தையும் சாராதவர்கள் எனத் தெரிவித்துள்ளனர்.
மதங்களின் நிலை குறித்து 57 நாடுகளில் 50,000 பேரிடம் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 2005இல் 77% பேர், தங்களுக்கு மத நம்பிக்கை உள்ளது எனக் கூறிய நிலையில், 2011இல் இது 68% ஆகக் குறைந்துவிட்டது. அதே சமயம் கடவுள் மறுப்பாளர்கள் என அடையாளப்படுத்தியோர் எண்ணிக்கை 3% அதிகரித்துவிட்டது. கடவுள் இல்லை என நம்புபவர்கள் தொகை உலகளவில் 13% ஆக அதிகரித்திருப்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது.
ஆக, மேற்கண்டவை போன்ற ஆய்வு முடிவுகளின்படி, மதங்கள் அழிந்துகொண்டிருப்பதற்கான காரணங்களாகக் கீழுள்ளனவற்றைச் சொல்லலாம்.
*மதங்களின் மீதான அவநம்பிக்கை அதிகரித்துக்கொண்டிருப்பது.
*மதங்களின் போதனைகளைப் பின்பற்றாமலேயே நல்ல வாழ்க்கை வாழலாம் என்று நம்புபவர்களின் எண்ணிக்கை நாளும் பெருகிக்கொண்டிருப்பது.
*மதங்களின் பெயரால் நடக்கும் நல்ல காரியங்களைக் காட்டிலும் அநீதிகள் அதிகம் நடக்கின்றன என்று பலரும் கருதுதல்.
*'இதைச் செய்; இதைச் செய்யாதே' என்று கட்டளையிட்டு, கடவுளின் பிரதிநிதிகளாகத் தம்மைக் காட்டிக்கொள்ளும் மதத் தலைவர்கள் மீதான வெறுப்பு.
*'நல்லது செய்தால் நல்லது நடக்கும்; மதங்கள் தேவையில்லை' என்பதாக மக்களிடையே பரவிவரும் நம்பிக்கை.
*கடவுள் நம்பிக்கை மனிதனின் தன்னம்பிக்கையைக் குறைக்கிறது என்னும் உண்மையைப் பெரும்பாலோர் அறிய முற்பட்டிருப்பது.
*மத நம்பிக்கை மனிதர்களுக்குள்ளேயே பிளவுகளைத் தோற்றுவிப்பதால் தோன்றும் வெறுப்பு.
*'மனிதாபிமானம்' போற்றி வாழ்வதன் அருமையை மக்கள் உணர்ந்துகொண்டிருப்பது.
*பெரும்பாலான மதத் தலைவர்களின் ஆடம்பர வாழ்க்கையும், அவர்களின் சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளும் ஊடகங்களால் பரப்புரை செய்யப்படுதல்.
*வரலாற்று அறிவு வாய்க்கப்பெற்றவர்கள், மதவாதிகள் நிகழ்த்திய கொடூரக் கொலைகளையும், மதக் கலவரங்களால் நேர்ந்த பேரழிவுகளையும் அறிந்து வருந்துவதோடு, தாம் அறிந்தவற்றைப் பிறரிடமும் பகிர்ந்துகொள்ளுதல்.
* * *
***மேற்கண்ட ஆய்வுகள் தற்சார்பின்றி நிகழ்த்தப்பட்டவை என்பதால், கண்டறியப்பட்ட முடிவுகளின்படி, அடுத்த நூற்றாண்டு முற்றுப்பெறுவதற்கு முன்னதாகவே அனைத்து மதங்களும் முற்றிலுமாய் அழிந்தொழிய, மக்களனைவரும் சுயசிந்தனையாளர்களாக ஆகியிருப்பார்கள் என்று உறுதியாக நம்பலாம்.
=================================================================================