அன்று மாலை, வழக்கமான நடைப்பயிற்சியின்போது, உடனிருந்த நண்பன் நல்லதம்பி, "கல்யாணம் ஆகியும் தினம் தினம் நடைப்பயிற்சி வந்துட்டிருக்கே. ஊட்டி, கொடைக்கானல்னு புதுப் பெண்டாட்டியோடு தேனிலவு போக வேண்டியதுதானே?" என்றான்.
"எல்லாருமா போறாங்க?"
"வசதி உள்ளவன் போறான். உனக்கு வசதி இல்லையா என்ன?"
"கல்யாணம் ஆனா தேனிலவு போறது கட்டாயமா?"
"கட்டாயம் இல்ல. கட்டிக்கிட்டவளோடு இயற்கையழகு நிறைஞ்ச இடங்களைச் சுத்திப் பார்க்குறதில் கூடுதல் சந்தோசம்."
"அது மட்டும்தானா?"
"என்னடா தெரியாத மாதிரி கேட்குறே? புதுப் பொண்ணு தர்ற சுகமும்தான். எப்போ கிளம்பப் போறே?"
"போன வாரமே கொடைக்கானல் போக இருந்தோம். மனசாட்சி சம்மதிக்கல."
"என்னடா உளறுறே?" -குரலில் சினம் துளிர்க்கக் கேட்டான் நல்லதம்பி.
"உளறுல. என் அப்பா அம்மா ரெண்டு பேருமே படிக்காதவங்க. கூலிநாழி செஞ்சி வயிறு வளர்த்தாங்க. வேளா வேளைக்குச் சாப்பிடாம மிச்சம் பிடிச்ச காசுல என் அக்காவைக் கொஞ்சம் வசதியான இடத்தில் கட்டிக் கொடுத்ததோடு என்னையும் படிக்க வைச்சாங்க. அவங்க செய்த தியாகத்தில்தான், நான் படிச்சி வேலைக்குப் போய் நல்ல சம்பளம் வாங்குறேன்....."
கொஞ்சம் அவகாசத்திற்குப் பிறகு தொடர்ந்து பேசினான் செல்வராசு. "இதுவரைக்கும் என்னைப் பெத்தவங்க வேலை தேடி அண்டை அயல் ஊர்களுக்குப் போயிருக்காங்களே தவிர, குற்றாலம், கொடைக்கானல், ஊட்டின்னு எந்தவொரு சுற்றுலாத் தலத்துக்கும் போனதில்ல. அதுல கிடைக்கிற சுகம் பத்தி அவங்களுக்கு எதுவுமே தெரியாது. அதுக்காக அவங்க கவலைப்பட்டதும் இல்ல. புதுப் பெண்டாட்டியோடு தேனிலவு கொண்டாடச் சுற்றுலாப் போகத் திட்டமிட்டபோது, 'பெத்தவங்களுக்குக் கொடுத்து வைக்காத அந்தச் சுற்றுலா தரும் சுகத்தை நாம் அனுபவிக்கப் போறோம்'னு நினைச்சபோது மனசாட்சி உறுத்திச்சி....."
இடைமறித்தான் நல்லதம்பி. "தேனிலவு போறதில்லேன்னு முடிவு பண்ணிட்டியா?"
"ஆமா. அடுத்த வாரமே என் பெண்டாட்டியையும் என்னைப் பெத்தவங்களையும் அழைச்சிட்டுக் கொடைக்கானலுக்குச் சுற்றுலா போறேன். இது முடிஞ்சதுக்கு அப்புறம்தான் எங்களுக்கு முதலிரவும் தேனிலவும். அதைக் கொண்டாடுறதுக்கு ஊட்டி கொடைக்கானல் எல்லாம் அவசியமில்ல. கிராமத்தில் இருக்குற ஓட்டு வீடே சொர்க்கம்தான்" என்றான் செல்வராசு.
விழிகளில் வியப்பு நிறைந்திட நண்பனை ஆரத் தழுவி, ஆறுதலாய் அவன் முதுகு தடவி மகிழ்ந்தான் நல்லதம்பி.
====================================================================================