வெகு அரிதாகத்தான் 'யூடியூப்' செல்வது என் வழக்கம். அதுவும், [அரைகுறை ஆடையுடன் கூத்தடிக்கும் 'குட்டி'கள் இல்லாமல்]நம்மைக் குட்டிக் குட்டித் தீவுகளுக்கு இட்டுச் சென்றோ, மலைக்க வைக்கும் மலைத் தொடர்களைக் காட்சிப்படுத்தியோ இயற்கை அழகைப் பூமாரியெனப் பொழியும் 'காணொலி'களைக் கண்டு கேட்டு இன்புறுவதற்காக மட்டுமே.
அண்மையில் கண்டு களித்துப் புளகாங்கிதப்பட்ட, World's highest Waterfall - the most beautiful Angel Waterfalls of Venez...' கீழே.
[youtube ஐச் சொடுக்கினால் முழுத்திரையில் ரசிக்கலாம்]
* * *
மனதைக் களிப்பில் ஆழ்த்துவது மேலே இடம்பெற்ற காணொலி. கீழே உள்ள உண்மைக் கதை நேர் எதிர்விளைவைத் தரவல்லது. வாசியுங்கள்.
வந்துநின்ற ஆட்டோவிலிருந்து அப்பா இறங்குவதைப் பார்த்துச் சந்தோசப்பட்ட மல்லிகா, அவர் கைத்தாங்கலாகத் தன் புருசனை நகர்த்திவருவது கண்டு வருந்தினாள்.
மிதமிஞ்சிய போதையில் தெருவோரங்களில் விழுந்து கிடக்கும் குடிகாரக் கணவனைத் தெரிந்தவர்கள் வீடு சேர்ப்பார்கள். இன்று அப்பா.
"நான் சம்பாதிக்கிறேன்ல."
"இனிமே கொடுக்காதே."
"ஏற்கனவே அதைச் செய்து பார்த்துட்டேன்பா. கடன் வாங்க ஆரம்பிச்சுட்டார்."
"இது எவ்வளவு நாளைக்கு? கொடுத்த பணம் வரலேன்னா யாரும் கடன் தர மாட்டாங்க. திருந்திடுவாரு."
"அப்படித்தான் நானும் நினைச்சேன். திருந்துவார்னு எதிர்பார்த்த உங்க மருமகன் டாஸ்மாக் கடை முன்னாலயே பிச்சை கேட்க ஆரம்பிச்சுட்டார். வேறு வழியில்லாம நான் வாங்குற சம்பளத்தில் ஒரு தொகையை 'டாஸ்மாக்'குக்குன்னு ஒதுக்கிடுறேன்." -விரக்தியுடன் சிரிக்கவும் செய்தாள் மல்லிகா.
தலையில் கை வைத்துக்கொண்டு அருகிலிருந்த சோபாவில் சரிந்தார் மாதவன்.
* * *
குறிப்பு:
நீங்கள் வாசித்தது கதையல்ல; கதையாயின், 'பிரச்சினை'க்கு ஒரு தீர்வு தந்து முடித்திருக்கலாம். இது உண்மை நிகழ்வு என்பதால் அது சாத்தியம் இல்லாமல்போனது.
====================================================================================