அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வெள்ளி, 9 ஜூலை, 2021

'கீழ்க்கொங்கு' மாநிலம்!!!


மேற்கண்ட 'காணொலி'ச் செய்தியின் மூலம் 'கொங்கு[நாடு?] மாநிலம்' உதயமாவது உறுதி என்று தெரிகிறது.

இப்படியொரு மாநிலம் உருவானால், அதன் தலைநகரம் 'கோயம்புத்தூர்' நகரமாகத்தான் இருக்கும் என்பதில் எள்முனையளவும் சந்தேகத்திற்கு இடமில்லை.

நிர்வாகம், நீதித்துறை என்று அனைத்து 'உயர்' தலைமையகங்களும் கோவை மாநகரில் இடம்பெறும் என்பது உறுதி. இவற்றை எங்களூர்க்காரர்கள்[நாமக்கல்] அணுக வேண்டுமாயின் 160 கி.மீ. பயணித்தல் அவசியம்.

இந்த நெடு நெடுந்தொலைவுப் பயணத்தை நாங்கள் தவிர்க்கும் வகையில், அமையவிருக்கும் கொங்கு[நாடு] மாநிலத்தின் தலைநகராக, இடைப்பட்ட நகரமான ஈரோடு நகரைத் தலைநகர் ஆக்குவதே சாலச் சிறந்த நடவடிக்கையாகும். ஆனால்.....

'பாஜக'வின் மிகச் செல்வாக்குள்ள தலைவரும், தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன்[அவர்கள்] போன்ற உள்ளூர்ப் 'பாஜக' பிரமுகர்கள் இதனைச் செயல்பட விடமாட்டார்கள் என்பது 100% உறுதி. 

இதைப் போலவே, நாமக்கல்லைத் தலைநகர் ஆக்குவதற்குக் கரூர்வாசிகளோ, ஈரோட்டார்களோ, கொங்கு நாட்டிலுள்ள ஏனைய நகரங்களைச் சேர்ந்தவர்களோ சம்மதிக்க மாட்டார்கள்.

எனவே, எங்களுக்குள்ள இடர்ப்பாடுகளைத் தவிர்த்திட வேண்டுமாயின், [நடுவணமைச்சர் மாண்புமிகு முருகன் அவர்களின் சுயவிவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள] கொங்குநாட்டைத் தனியொரு மாநிலம் ஆக்காமல், அதை நான்காகப் பிரித்து, மேற்குத் திசையில் உள்ள கோவையையும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளையும் ஒருங்கிணைத்து 'மேல்கொங்கு மாநிலம்' என்றும், கிழக்குத் திசையிலுள்ள நாமக்கல்லையும் அதைச் சுற்றியுள்ள  பகுதிகளையும் ஒன்று சேர்த்துக் 'கீழ்க்கொங்கு மாநிலம்' என்றும், ஈரோட்டையும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளையும் இணைத்து 'வடகொங்கு மாநிலம்' என்றும், கரூரையும் அதைச் சார்ந்த பகுதிகளையும் ஒன்றாக்கிக் 'தென்கொங்கு மாநிலம்' என்றும் பெயரிடலாம்[தர்மபுரியையும் கிருஷ்ணகிரியையும் இணைத்து ஒரு மாநிலமாகவோ, இணைக்காமல் தனித்தனி மாநிலங்களாவோ ஆக்கலாம்].

இவ்வாறு, ஒன்றைப் பலவாகப் பிரிப்பது ஆகச் சிறந்த நிர்வாகத்தை அளிப்பதற்கு வசதியாக இருக்கும் என்பது எம் போன்றோர் எண்ணமும் நம்பிக்கையும் ஆகும்.

இந்த ஆக்கபூர்வமான எண்ணத்திற்கு மாண்புமிகு நடுவணமைச்சர் முருகன் அவர்கள், உரியவர்களிடம், உரிய முறையில் பரிந்துரைத்துச் செயல் வடிவம் தருதல் வேண்டும் என்பது எங்களுடைய கோரிக்கை ஆகும்.

அமைச்சர் அவர்கள், இதை வெளிப்படையாக என்றில்லாமல் ஏதேனும் ஒரு வழியைப் பின்பற்றி மறைமுகமாகவேனும் அறிவிப்பாரேயாயின்.....

'கீழ்க்கொங்கு மாநில ஜனதா கட்சி' என்னும் பெயரில், நாமக்கல் வாசிகளான நாங்கள், ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கத்துடன் தொடங்கவுள்ள, மாநிலக் கட்சிக்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபடுவதற்கு அது உதவியாக இருக்கும் என்பதை மிக்கப் பணிவன்புடன் தெரிவிக்கிறோம்.

கீழ்க்கொங்கு மாநிலத்தைச் சேர்ந்தவரான[கோனூர் கந்தம்பாளையம் நாமக்கல்லுக்கு மிக அருகில் உள்ள ஊர்] தாங்கள்தான், 'பாஜக'வுக்கு என்றென்றும் 'தோள்' கொடுக்கவிருக்கும் கட்சியான இதனைத் தொடங்கிவைத்திடல் வேண்டும் என்னும் கோரிக்கையை இப்போதே தங்கள் முன் சமர்ப்பிக்கிறோம். நன்றி.

வாழ்க கீழ்க்கொங்கு மாநிலம்! வாழ்க... வளர்க 'கீகொஜக'!!
====================================================================================