அவள் அழகாக இருந்தாள்; வளர் இளம் பருவத்தில் இருந்தாள்.
கனவுகளும் கற்பனைகளுமாய் இன்பத்தில் சஞ்சரிக்க வேண்டிய இத்தனை இளம் வயதிலேயே அவளுக்கு வாழ்க்கை வெறுத்துப்போனது.
காரணம்.....
நச்சு மனம் படைத்த சித்தி. அவளின் குடிகாரத் தம்பி, அவ்வப்போது அவளிடம் அத்துமீற முயன்ற போதெல்லாம் அதைக் கண்டுகொள்ளாத அவளின் கயமைக் குணம். பல முறை அழுது முறையிட்டும் அவனைக் கண்டிக்கத் தவறிய பெண்டாட்டிக்குப் பயந்த அப்பா.
“உன் தம்பி என்னைத் தொட்டுத் தொட்டுப் பேசுறான். அசிங்கமாப் பேசிட்டுக் கட்டிப் பிடிக்கிறான்” என்று சித்தியிடம் சொன்னால், “அவன்தானே உன்னைக் கட்டிக்கப் போறவன். தொட்டா என்ன?” என்பாள் சித்தி. அப்பாவிடம் முறையிட்டால், “உன் சித்தியிடம் சொல்லி அவனைக் கண்டிக்கச் சொல்றேன்” என்பார்.
இப்படியொரு நிராதரவான நிலையில்தான் தற்கொலை முடிவுக்கு வந்தாள் அவள்.
இரண்டு முறை முயன்றாள்.
முதல் முறை, நைந்துபோன பழைய தாவணியில் தூக்கிட்டுக்கொள்ள, அது அறுந்து விழுந்ததில் அவளின் மரணம் ஒத்திவைக்கப்பட்டது.
இரண்டாவது முயற்சியில், பூச்சி மருந்து குடித்தாள். அது காலாவதி ஆகியிருந்ததால் மரணத்தின் வருகை தாமதப்பட்டபோது, மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டு உயிர் பிழைத்துவிட்டாள்.
அன்று மொட்டை மாடியில் துணிகளை உலர்த்திவிட்டுப் பார்வையை உயர்த்திய போது, எதிரே அந்த மலை தென்பட்டது.
அதை மலை என்பதைவிடக் குன்று என்று சொல்வது சரியானதாக இருக்கும்.
ஒரே கல்லில் உருக்கி வார்த்தது போன்ற அந்தக் குன்று ஊரின் நடுவே இருந்தது. உச்சியில் பழைய கோட்டைச் சுவர்கள்.
தோழிகளுடன் இரண்டு முறை அங்கே போயிருக்கிறாள் அவள்.
கோட்டையின் வடக்குப் பக்கம் சரிவானது. அதில்தான் படிக்கட்டுகள் செதுக்கப்பட்டிருந்தன. மற்றப் பக்கங்கள் செங்குத்தானவை. அங்கிருந்து குதித்தால், வழியில் ஒரு சிறு கீரல்கூட ஏற்பட்டுவிடாமல் தரையை முத்தமிட்டுச் சாவைத் தழுவிக் கொள்ளலாம். சிலர் தவறி விழுந்தும், வேறு சிலர் தற்கொலை முயற்சியிலும் செத்திருக்கிறார்கள்.
சில கணங்கள் தீவிரமான சிந்தனையில் ஆழ்ந்தாள் அவள்.
மீண்டும் தூக்கில் தொங்க நினைத்தாள். "யாரும் வந்துவிடுவார்களோ?." -யோசித்தாள். கோட்டைச் சுவர் ஏறிக் குதித்துவிடுவதே சிறந்தது என்ற முடிவுக்கு வந்தாள்.
வீட்டிலிருந்து வெளியேறினாள். “எங்கே போகிறாய்?” என்று கேட்க அப்போது வீட்டில் எவருமில்லை.
பாறையே உருகி ஆவியாவது போல, அனல் பறக்கும் நண்பகல் நேரம் அது.
மக்கள் நடமாட்டம் இல்லை.
படிகளில் தாவித் தாவி ஏறிக் குன்றின் உச்சியை அடைந்தாள் அவள்.
கோட்டைச் சுவர்மீது ஏறி நின்றாள்.
அவளின் அழகிய வதனம் கற்பாறை போல இறுகிக் கிடந்தது.
சில கணங்கள் அவள் பார்வை எங்கோ நிலைகுத்தி நின்றது. எதிரே, சித்தி மட்டுமே ஓர் அரக்கியாக விஸ்வரூபம் எடுத்து நின்றாள்.
“இந்த முறை என் சாவு நிச்சயம்” என்று அவள் உதடுகள் முணுமுணுக்க, குதித்துவிட முடிவெடுத்து, இரு கண்ணிமைகளையும் இறுக மூடிய போது.....
‘விசுக்’கெனத் தான் பின்னுக்கு இழுக்கப்பட்டதை உணர்ந்தாள். அடுத்த கணமே, இரு கரங்களின் இரும்புப் பிடியில் தான் சிக்குண்டு கிடப்பதையும் அவளால் உணர முடிந்தது.
மீனெனெத் துள்ளி நழுவி விடுபட்டு நின்றாள்.
அவளெதிரே, கார்காலத்துத் தெரு நாய்கள் போல நான்கைந்து முரடர்கள் பல்லைக் காட்டிக்கொண்டு நின்றிருந்தார்கள். களவாடிய பணத்தை வைத்து, அங்கே அந்த நேரத்தில் சூதாடும் ரவுடிக் கும்பல் அது.
“என்னம்மா பொண்ணு, காதல் தோல்வியா?” என்றான் ஒருவன்.
“காதல் பண்ணிக் கதையையும் முடிச்சுட்டுக் கம்பி நீட்டிட்டானோ அவன்?” என்றான் இன்னொருவன்.
“போனாப் போறான். கவலையை வுடு. நாங்க இருக்கோம்” என்று கண்சிமிட்டியபடி அவளை நெருங்கினான் மற்றொருவன்.
“ஐயோ.....” என்று அலற நினைத்தாள் அவள். வறண்டுவிட்ட அவள் நாக்கு ஒத்துழைக்க மறுத்தது.
“கடவுளே...” என்று உள் மனம் அலற, உடல் நடுநடுங்கப் பின்னோக்கி நகர்ந்தாள். கல்லொன்று அவள் கால்களை இடற மல்லாந்து சரிந்தாள்.
சரிந்து விழுந்த அவள் அதன் பிறகு எழவே இல்லை. கரைபுரண்டு வரும் காட்டாறெனப் பெருகிவிட்ட அந்தத் தெரு நாய்களின் வெறியுணர்ச்சி அவளை எழுவதற்கு விடவில்லை.
அந்த இளம் மொட்டு கசக்கிச் சீரழிக்கப்பட்ட போது, தன் முழுச் சக்தியையும் திரட்டி அவள் எழுப்பிய அவலக் குரலைப் பிறர் கேட்கவோ, அழகு கனிந்திட்ட இடங்களெல்லாம் கடித்துக் குதறப்பட்டு அவள் அலங்கோலமாய்க் கிடந்த காட்சியைப் பிறர் காணவோ இயலாதவாறு அந்தப் பழங்கோட்டை காவல் காத்தது!
================================================================================