செவ்வாய், 10 ஆகஸ்ட், 2021

ஜக்கியின் வளர்ச்சி மக்களின் வீழ்ச்சி!!!

[private Pilot Jaggi]

'சத்குரு, காதலில் இருப்பது என்பதற்கும் காதலில் வீழ்வது என்பதற்கும் வேறுபாடு இருக்கிறதா? எப்போதும் எனது முந்தைய உறவில் இணக்கமின்மை ஏற்படுகின்ற காரணத்தால், நான் தொடர்ந்து புதிய உறவைத் தேடுகிறேன்' -இது, தன்னைக் கடவுள்களுக்கெல்லாம் குரு என்று சொல்லிக்கொள்ளும் ஜக்கி வாசுதேவிடம் அவரின் ஒரு விசுவாசி கேட்ட கேள்வி.

ஜக்கி பதில்: நீங்கள் அடிக்கடி புதிய நபர்களுடன் இப்படி காதலில் விழுந்துகொண்டே இருந்தால் சிறிது காலம் கழித்து, உங்களுக்கு உலகத்தில் யாரையுமே பிடிக்காமல் போய்விடும். சார்லஸ் லேம்ப், பிரபலமான ஆங்கிலக் கட்டுரையாளராக இருந்தார். ஒருநாள் அவரது நண்பர், சார்லஸ் லாம்ப்பிடம், யாரோ ஒருவரை தான் அறிமுகம் செய்துவைக்க விரும்புவதாகக் கூறினார். அதற்குச் சார்லஸ் லேம்ப், “இல்லை, அவரைச் சந்திக்க எனக்கு விருப்பமில்லை. அந்த மனிதனை நான் விரும்பவில்லை” என்றார். நண்பர், “அந்த மனிதனைப் பிடிக்கவில்லையா! நீங்கள் இதுவரை அவரைச் சந்தித்ததே இல்லை. பிறகு எப்படி அவரைப் பிடிக்கவில்லை என்று நீங்கள் கூறமுடியும்?” என்று கேட்டார். “அதனால்தான் நான் அவரை விரும்பவில்லை. நான் அவரைச் சந்தித்தது கிடையாது” என்றார் சார்லஸ் லேம்ப்.

!!! 'காதலில் இருப்பதற்கும் வீழ்வதற்கும் என்ன வேறுபாடு என்பது கேள்வி. அதற்கான பதிலை ஜக்கி தரவில்லை. கேள்வியே தவறானது என்றால், அதையாவது சுட்டிக்காட்டுதல் வேண்டும். அதையும் அவர் செய்திடவில்லை.

'காதலில் விழுந்துகொண்டே இருந்தால் சிறிது காலம் கழித்து, உங்களுக்கு உலகத்தில் யாரையுமே பிடிக்காமல் போய்விடும். என்கிறார். இப்படி ஆனவர்கள் எத்தனை பேர்? அதற்கான சிறு பட்டியலேனும் ஜக்கியிடம் உண்டா? இல்லை.

'சார்லஸ் லேம்ப்'பை உதாரணமாகக் காட்டியிருக்கிறார். அவர் ஒரு எழுத்தாளர்தானே தவிர, மேற்கண்ட பாதிப்புக்கு உள்ளானவரா என்பதைக்கூட இவர் தெளிவுபடுத்தவில்லை.

ஜக்கி, இது குறித்துக் கீழ்க்காணும் வகையிலான விளக்கத்தைத் தொடர்கிறார்:

#பலருடனும் இணையும் விளையாட்டை நீங்கள் தொடர்ந்துகொண்டே இருந்தால், சிறிது காலத்திற்குப் பிறகு, நீங்கள் உணர்ச்சியற்று மரத்துப் போய்விடுகிறீர்கள். நீங்கள் யாரையும் விரும்புவதில்லை. இதற்கு ருனானுபந்தம் என்பது காரணமாக இருக்கிறது.

ருனானுபந்தம் என்பது கர்மவினையின் ஒரு குறிப்பிட்ட அம்சம். அது கர்மவினையின் ஒரு குறிப்பிட்ட கட்டமைப்பாக உள்ளது. மனிதர்களிடையே எந்த வகையில் தொடர்பு ஏற்பட்டாலும் அங்கெல்லாம் சிறிதளவு ருனானுபந்தம் உருவாகிறது. குறிப்பாக, இரண்டு உடல்கள் இணையும்பொழுது, ருனானுபந்தம் அதிக ஆழமாக ஏற்படுகிறது. அது உடலில் உண்டாகும் ஒருவிதமான பதிவு. உடல், தனக்கு நிகழ்ந்துள்ள ஒவ்வொன்றைப் பற்றியும் ஒரு பதிவு வைத்திருக்கிறது. ஒரு உடல், இன்னொரு உடலுடன் நெருக்கமான தொடர்பு வைத்துக்கொண்டால், பிறகு அந்தக் குறிப்பிட்ட சக்தியைத் தனக்குள் பதிவு செய்துகொள்கிறது.

உடல் அவற்றை நினைவில் வைத்துக்கொள்ளும் காரணத்தால், பல பேருடன் உடலளவில் கூடும்போது, மெல்ல, காலப்போக்கில் உடல் குழப்பத்திற்கு உள்ளாகிறது. அந்தக் குழப்பம் எண்ணற்ற வெவ்வேறு வழிகளில் உங்கள் வாழ்க்கையில் விளைவுகள் ஏற்படுத்தும். உங்கள் மனமும் குழம்பிவிடுகிறது. ஆனால் எப்படியோ ஒருவாறு அதனுடன் நீங்கள் வாழ்கிறீர்கள். உடல் குழப்பம் அடைகிறதென்றால், அப்போது நீங்கள் ஆழமான தொந்தரவுக்கு உள்ளாகிறீர்கள்.

இன்றைக்குக் காணப்படுகின்ற இந்த அளவுக்குப் பதற்றமும், இவ்வளவு அதிகமான பாதுகாப்பின்மையும், இந்த அளவுக்கான மன அழுத்தமும் பல நிலைகளிலும் இருப்பதற்கு உடல்கள் குழப்பமடைந்திருப்பது முக்கியமான காரணங்களுள் ஒன்றாக இருக்கிறது. சிறிது காலம் கழிந்தபிறகு நீங்கள் பைத்தியமாவதற்கு வேறு எந்தக் காரணமும் உங்களுக்குத் தேவையில்லை. உடலே குழப்பத்தில் இருக்கும் காரணத்தினால் வேறு எந்தக் காரணமும் இல்லாமல், மக்கள் பைத்தியநிலைக்குப் போகிறார்கள்#

!!!உடலில் குழப்பமாம். என்னய்யா குழப்பம்? 

நடத்தை கெட்டு அலைஞ்சா மனசில்தான் குழப்பம் ஏற்படும். உடம்பு பலவீனப்படலாம்; நோய்வாய்ப்படலாம். அதில் குழப்பம் உண்டாவது எப்படி?

இதைப் பற்றியெல்லாம் இவர் விளக்கவுரை தரமாட்டார்; இவரால் தரவும் முடியாது. ருனானுபந்தம் என்னும் சொல்லை வைத்துக்கொண்டு ஜாலாக்குக் காட்டியிருக்கிறார். இல்லாத குழப்பத்தை இருப்பதாகச் சொல்லி மக்களைக் குழப்பி, தன்னை 'யோகி' என்றும், 'ஞானி' என்று நம்ப வைத்துச் சம்பாதிப்பதோடு, மக்களைப் படுமடையர்கள் ஆக்கும் அடாத செயலையும் தொடர்ந்துகொண்டிருக்கிறார் இவர்.

தொடரும் அவரின் விளக்கவுரை.....

#'உடலளவில் பலருடன் உறவு கொள்ளும்போது, இந்த உடல் குழப்பமடைவது ஒரு விஷயம். மற்றொன்று, நீங்கள் உண்ணும் உணவு. சிறிது பணம் வந்துவிட்டாலே, மக்கள் தங்களது ஒருவேளை உணவிலேயே எல்லாவற்றையும் சாப்பிட்டுவிட வேண்டும் என்று எண்ணுகின்றனர். ஆசாரமான மக்கள், ஒருவேளை உணவில் இரண்டு அல்லது மூன்றுவிதமான உணவுக்கு மேல் ஒருபோதும் சாப்பிடவில்லை.....#

!!!பொத்தாம் பொதுவாகப் 'பைத்தியமாகிறார்கள்' என்று சொல்லி, அது குறித்து மேலும் தேவைப்படும் விளக்கங்களைத் தராமல், இப்படி உணவு குறித்துப் பேசித் திசைதிருப்பும் தந்திரத்தையும் கையாள்கிறார் இந்தப் போலி ஞானி. 

உண்மையில், மனம் விரும்புகிற வகையில் உடலுறவு சுகத்தை[ஒருவருடனோ, பலருடனோ] அனுபவிக்காதவர்கள்தான் மனநிலை பாதிக்கப்படுகிறார்கள் என்பதே உளவியல் மருத்துவம் சொல்லும் உண்மை.

தன்னைக் கடவுளுக்கும் மேலாவனவர் என்பதை நம்ப வைக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் இந்த மனிதர், தான் எல்லாம் தெரிந்தவர்; தனக்குத் தெரியாதது எதுவுமே இல்லை என்னும் மிதப்பில், மனம் போன போக்கில் உளறிக் கொட்டுகிறார். இவர் வெளியிட்டுவரும் காணொலிகளும்கூட இதை உறுதிப்படுத்துகின்றன.

சிறப்பான சிந்தனைத் திறனும், கருத்துகளைத் தெளிவுபட எடுத்துரைக்கும் வல்லமையும் இல்லாத இவரைப் போன்ற ஆட்களின் சுயரூபத்தை வெளிச்சமிட்டுக் காட்டுவது நம் போன்றோர் கடமை.

தேவையெனின் இவர் குறித்த விமர்சனப் பதிவுகள் இனியும் தொடரும் என்பது உறுதி.

====================================================================================

https://www.dinamalar.com/news  'ஆனந்த அலை'