“ஒரு பக்கக் கதைக்குள் இத்தனை பெரிய கடவுள் தத்துவமா!?” என்று இதைப் படித்த பின் நீங்கள் பாராட்டினால் மகிழ்வேன்! “அடேய்...மூடா!” என்று சாடினாலும் மகிழ்ச்சியே!!
ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்த்திக்கொண்டிருந்த 'மதகுரு' ஒருவர், “........ஆக, கடவுள் இருப்பதை யாரும் யாருக்கும் காட்ட முடியாது; பிறரிடம் கேட்டு அறியவும் இயலாது. சுருங்கச் சொன்னால், ஐம்புலங்களால் கடவுள் இருப்பதை அறிய முடியாது. ஒருவருக்குப் பிறிதொருவர் உணர்த்தவும் முடியாது. ஒருவன் தன்னுள் தானே உணர்வது மட்டுமே சாத்தியம். மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவரும், மனத் தூய்மை பெற ஆண்டவனின் இருப்பை உணர்ந்து, அவனை வழிபடுவது இன்றியமையாத் தேவையாகும். அவனை வழிபடுக... பயன் பெறுக” என்று பேருரையை முடித்து மேடையிலிருந்து இறங்கி நடந்தார்.
அவரை வழி மறிப்பது போல் நின்று கொண்டிருந்த ஒருவன், சிரம் தாழ்த்தி, கை குவித்து வணங்கினான்.
“ஏதும் சந்தேகமா?”என்றார் மதகுரு.
“உணர்தல்னா என்ன? எனக்குப் புரியும்படி சொல்லுங்க” என்றான் அவன்.
அவனைச் சிறிது நேரம் உற்றுப் பார்த்த மதகுரு, ஓங்கி அவன் கன்னத்தில் அறைந்தார்.
அதிர்ச்சியடைந்த அவன், கண்கள் சிவக்க, உதடுகள் துடிக்க, “என்னை ஏன் அடித்தீர்கள்?” என்றான்.
அவன் கேள்வியை அலட்சியப் படுத்திய அவர், “நான் அடித்தவுடன் எதிர்பாராத ஒருவித உணர்ச்சிக்கு ஆட்பட்டாய் அல்லவா? அதுதான் ‘கோபம்’கிற குணம். அதை மத்தவங்களுக்கு விளங்கச் சொல்லிப் புரியவைக்க முடியாது. அது உனக்கு மட்டுமேயான ஓர் அனுபவம். அந்த அனுபவத்தில் ஒன்றிப் போவதைத்தான் உணர்தல் என்கிறோம். புரிந்ததா?” என்றார்.
‘புரிந்தது’ என்பதாகத் தலையசைத்தான் அவன்.
“நீ தெருவில் நடந்து போகும்போது, உனக்கு முன்னால் போன ஒரு வயதானவர் மயங்கி விழுகிறார். “ஐயோ பாவம்”னு ஒருவிதத் துடிப்போட ஓடிப்போய் அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்யுறே. அந்தப் பெரியவர் விழுந்ததைப் பார்த்ததும் உனக்குள் ஒருவித அனுதாபக் குணம் பிறந்தது. அந்தக் குணத்திற்கு நீ ஆட்பட்டிருப்பதை அனுபவித்து அறிந்து கொள்வதுதான் உணர்தல்.....”
“சரிங்கய்யா.”
“அன்பு, பாசம், கவலை, பொறாமைன்னு பல குணங்களும் உணர்வுகளும் நமக்குள் இருக்கு. அன்பின் வசப்பட்டா அதுக்கு அன்புணர்ச்சின்னு பேரு. பாசத்துக்கு உட்பட்டா அது பாச உணர்ச்சி. கொஞ்சம் சிந்தித்தால், நாடி நரம்புகளுக்குள் இம்மாதிரி உணர்ச்சிகள் ஊடுருவியிருப்பதைப் புரிந்துகொள்ள முடியும். இப்போ உணர்தல்னா என்னன்னு உனக்குப் புரிஞ்சுதா?” என்றார் மதகுரு
“புரிஞ்சுதுங்க.”
“அன்பையும் பாசத்தையும் மத்ததுகளையும் உணர்ற மாதிரி, முயன்றால் கடவுளையும் உணரலாம். உன்னால் முடியும்தானே?” என்றார் மதகுரு.
“முடியாதுங்க” என்றான் அவன்.
குரலில் ஏமாற்றம் தொனிக்க, “ஏன்?” என்றார் மதகுரு.
“அன்பு, பாசம் முதலானவற்றைச் சக மனிதர்களுடன் பகிர்ந்துகொள்ளும்போது அவற்றின் 'உண்மை'த் தன்மையை[இருப்பை] நம்மால் உணர முடிகிறது. இதைப்போல, மனிதர்களுடனான பகிர்வுகள் மூலம் கடவுளை உணர்தல் இயலாது. வேறு எதனுடனான தொடர்பின் மூலம், அல்லது பகிர்தல் வாயிலாகக் கடவுளை உணர்தல் சாத்தியமாகும் என்பதைத் தாங்கள் விவரித்தருளல் வேண்டும்" என்றான் அவன்.
முகத்தில் பரவிய சீற்றத்தைக் கட்டுப்படுத்த இயலாத நிலையில், “கடவுள் உன்னைக் காப்பாற்றுவார்” என்று ஆசீர்வதித்து நடையைக் கட்டினார் மதகுரு!
====================================================================================