அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2021

இப்படியும் பக்தர்கள்!


ண்டு தவறாமல்  குடும்பத்துடன் கோயிலுக்குக் சென்று வழிபட்டுவருவதை வழக்கப்படுத்திக்கொண்டிருந்தார் துரைசாமி. பிரபலமான கோயில்களுக்கான பட்டியலொன்றத் தயாரித்து வைத்திருந்தார் அவரின் மனைவி மணிமேகலை. செல்லவேண்டிய கோயிலைத் தேர்வு செய்வதும் அவர்தான்.

அன்றைய தினத் தேர்வு சேலம் அருகேயுள்ள தாரமங்கலம் கைலாசநாதர் ஆலையம்.

மாசி 9,10,11 ஆகிய தேதிகளில் சூரிய ஒளி நந்தியின் கொம்பு வழியே சென்று சிவலிங்கத்தின் மீது மூன்றாம் பிறை போல் விழுதலும், ரதி சிலையிலிருந்து பார்த்தால் மன்மதன் தெரியாத வகையிலும் மன்மதன் சிலையிலிருந்து பார்த்தால் ரதி தெரியும்படியும் அமைந்த அற்புதமும், சிற்பக் கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் கல் சங்கிலி, கல் தாமரை, வாயில் உருளும் கல்லுருண்டை கொண்ட சிங்க முகம்  போன்றவையும் இக்கோயிலுக்குப் பெரும் புகழ் சேர்ப்பவை.

முன்மண்டபத் தூண்களில் ஒன்றில் இராமன் உருவமும், மற்றொரு தூணில் வாலி உருவமும் செதுக்கப்பட்டுள்ளன. வாலி சிலையில் நம் கண்களை வைத்துக்கொண்டு பார்த்தால் இராமன் உருவம் தெரியாது. இராமன் சிலையில் நம் கண்களை வைத்துக்கொண்டு பார்த்தால் வாலி உருவம் தெரியும். இப்படிப்பட்ட இதிகாசக் கதை சொல்லும் இங்குள்ள கலைப்படைப்பும் வருகையாளரைக் களிப்பூட்டுவனவாகும்.

துரைசாமி தம்பதியர், இரு மகள்கள், ஒரு மகன் அடங்கிய தம் குடும்பத்துடன் அதிகாலையில் புறப்பட்டு, இரண்டு மணி நேரப் பயணத்தில் கைலாசநாதர் கோயிலை அடைந்தார்கள்.

"முதலில் வழிபாட்டை முடிச்சுடுவோம். அப்புறம் கோயிலைச் சுத்திப் பார்க்கலாம்" என்றார் மணிமேகலை. தலையசைத்தார் துரைசாமி.

அர்ச்சனைச் சீட்டை வாங்கிக்கொண்டு, உடன் கொண்டுசென்ற தேங்காய், பழம், பூ அடங்கிய தட்டை அர்ச்சகரிடம் கொடுத்தார்கள்.

பூர்வாங்க ஏற்பாடுகளைச்  செய்து முடித்து பூஜையைத் தொடங்கிய அர்ச்சகர், "பேர் சொல்லுங்க" என்றார்.

"சண்முகம். இந்த ஒரு பேருக்கு மட்டும் அர்ச்சனை பண்ணுங்க போதும்" என்றார் மணிமேகலை.

'யார் இந்தச் சண்முகம்? நம் குடும்பத்தைச் சேர்ந்தவராகத் தெரியலையே' என்று தனக்குள் சொல்லிக்கொண்டார் துரைசாமி.

வழிபாடு முடிந்து கோயிலைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டபோது மனைவியிடம் கேட்கவும் செய்தார். "சண்முகம் யாரு?"

"இதுவரை, நாம் போன கோயில்களில், நம் குடும்பத்தைச் சேர்ந்தவங்க பேருக்குப் பல தடவை அர்ச்சனை பண்ணிட்டோம். இப்போ சண்முகம். இவன் நம் வீட்டு வேலக்காரி மகன். தேர்வு நேரத்தில் கொரோனாத் தொத்துல மருத்துவமனையில் சேர்த்திருக்காளாம். சீக்கிரம் குணமாகட்டும்னுதான்....."

அவர் சொல்லி முடிப்பதற்குள், "நல்லதே நினைச்சிருக்கே. இனியும் இதுமாதிரி நமக்குத் தெரிஞ்ச ஏழைகள் பேருக்கே அர்ச்சனை செய்யலாம். சொந்தபந்தங்களுக்கும் இதைச் சொல்வோம்" என்றார் துரைசாமி, மகிழ்ச்சி ததும்பும் தொனியில்.

====================================================================================

இம்மாதிரி அர்ச்சனை ஆராதனைக்கெல்லாம் பலன் கிடைக்கும் என்பதில் அடியேனுக்கு நம்பிக்கை இல்லை. இது உண்மைச் சம்பவம் என்பதால் கதையாக்கிப் பதிவு செய்திருக்கிறேன்.