திங்கள், 2 ஆகஸ்ட், 2021

மகா 'கும்பமேளா'வும் மகா மகா மூடர்களும்!!!

#உத்தரப் பிரதேசத்தில் வாரணாசி நகரில் இடம்பெற்றுள்ள கங்கை ஆற்றில் 'சவான்'[சாவன்?] மாதத்தின்[ஜூலை16-ஆகஸ்டு16] 2ஆவது திங்கட்கிழமையை முன்னிட்டு, பக்தர்கள் திரளாகக் கூடி, புனித நீராடினர்.  இதில், கொரோனாக் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையான சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் காற்றில் பறக்க விடப்பட்டது.

இதேபோன்று, வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் பக்தர்கள் அதிக அளவில் சாமி தரிசனம் செய்ய ஒன்றாகக் குவிந்தனர்.  அவர்கள் முகக் கவசமில்லாமல் தரிசனம் செய்ய வரிசையில் நின்றிருந்தனர்.

கடந்த பிப்ரவரி, மார்ச் ஆகிய மாதங்களில் கொரோனாப் பரவல் குறைந்திருந்த சூழலில், சிவராத்திரி மற்றும் கும்பமேளா ஆகிய நிகழ்ச்சிகளில் லட்சக்கணக்கானோர் சமூக இடைவெளி, முகக் கவசம் அணிவது உள்ளிட்ட விசயங்களை மறந்து குவிந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதன்பின்னர் கடந்த ஏப்ரல் தொடக்கத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சம் எனப் பதிவானது.  அதன்பின்பு அந்த மாத இறுதிக்குள், எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து நாள்தோறும் 4 லட்சம் என்ற அளவில் உச்சம் தொட்டு அதிர்ச்சி ஏற்படுத்தியது.

அண்மைக் காலங்களாகக் கொரோனாவின் 2ஆவது அலை தீவிரம் குறைந்துள்ளது என்றபோதிலும், மக்கள் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிடில் 3ஆவது அலை தோன்றக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மறந்து இன்று காலையிலேயே கங்கையில் புனித நீராடவும், சாமி தரிசனமும் செய்யவும் பக்தர்கள் குவிந்துள்ளனர்# 

-இது செய்தி[https://www.dailythanthi.com/News/TopNews/2021/08/02072928/Devotees-flock-to-the-holy-river-Ganga-in-Varanasi.vpf  [பதிவு: ஆகஸ்ட் 02,  2021 07:29 AM]

***"கொரோனாவையும் இது போன்ற கொடூரக் கொள்ளை நோய்களையும் அழிப்பதற்கான ஆற்றலோ, இரக்கக் குணமோ  இல்லாத கடவுள்களா நமக்குள்ள துன்பங்களை அகற்றப்போகிறார்கள்?" என்று கேட்டுச் சிந்திக்கிற குறைந்தபட்ச அறிவுகூட இல்லாத முட்டாள்கள் இவர்கள். 

பல்லாயிரவர் சாவுக்குக் காரணமான கொரோனாவின் எண்ணிக்கையைப் பன்மடங்காகப் பெருக்கும் இந்த இவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்[தண்டிப்பதற்கான வழிமுறைகள் ஏதுமில்லை என்பது மிகப் பெரிய சோகம்!(பக்தர்களுக்கு அத்தனை பெரிய மரியாதை இந்த நாட்டில்!!)].

தேர்தல்களில் வெற்றி பெறுவதற்காக,  மூடநம்பிக்கைகளைப் பாதுகாத்தும் வளர்த்தும் இவர்களின் மூளைகளில் நாளும் திணித்துக்கொண்டிருக்கும் அரசியல்வாதிகளும், இவற்றை வைத்துப் பிழைப்பு நடத்தும் அவதாரங்களும்கூட, கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டியவர்களே.

இவர்களையெல்லாம் தண்டித்தால் மட்டுமே நாட்டில் மூடநம்பிக்கைகள் குறையும்; மேற்கண்டவை போன்ற செயல்பாடுகளும் மட்டுப்படும்.

இன்றைய அரசியல்வாதிகள் பலரின் அரசியல் ஈடுபாடு தடுக்கப்படுவதோடு, மக்கள் நலனில் அக்கறையுள்ள  நல்ல சிந்தனையாளர்கள் ஆட்சியைக் கைப்பற்றுதல் அவசியத் தேவை.

அத்தகையவர்களைக் கண்டறிந்து ஆட்சியாளர்களாகத் தேர்ந்தெடுப்பதற்கு மக்கள் கற்றுக்கொள்ளுதல் மிக மிக மிக முக்கியம்.

ஆனால், இந்தப் புண்ணிய பூமியில் உள்ள மக்களில் பெரும்பான்மையோர் மூடர்களே என்பதால் அது இப்போதைக்குச் சாத்தியமில்லை என்பது கொஞ்சம் யோசித்தாலே புரியும்!

'நாட்டில் நல்லதே நடந்திடல் வேண்டும்' என்று எதிர்பார்ப்பவர்கள், 'விதி வலிது' என்று தமக்குத்தாமே ஆற்றுப்படுத்திக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை!

====================================================================================