புதன், 4 ஆகஸ்ட், 2021

திருமணமும், ஆண்மகன் 'ஆண்மைச் சான்றிதழ்' பெறுதலும்!

‘கல்’ என்னும் அடிச்சொல்லே ‘கற்பு’ என்றானது.

பெற்றோர் கற்பித்த வாழ்க்கை நெறிமுறைகளை மனதில் பதித்து அவ்வாறே வாழ்ந்து காட்டுதல் என்பது இதற்கான பொருள்.

ஆண், பெண் என இருபாலர்க்கும் இது பொருந்தும். 

ஆயினும், சங்கங்கள் நிறுவித் தமிழ் வளர்த்த காலத்திலிருந்தே பெண்களுக்கு மட்டுமே உரிய ஒழுக்கமாக இதை ஆக்கினார்கள் ஆண் மக்கள்! கட்டுப்பாடு ஏதுமின்றிப் பல பெண்களோடு இன்பம் துய்த்தார்கள். அதற்கென, பரத்தையர் குலங்களையும் உருவாக்கினார்கள்.

பிற ஆடவரைக் கூடுவதாக நினைத்தாலே கற்பு பறிபோகும் [‘நினைத்தலும் செய்தலோடு ஒக்கும்’] என்று அச்சுறுத்தினார்கள்; ஏடுகளில் எழுதியும் வைத்தார்கள்.

கந்தர்வனின் நிழல் உருவத்தைப் பார்த்து ஆசைப்பட்டதற்காகக் கணவன் ஜமதக்கினி முனிவனின் ஆணைப்படி பெற்ற மகனாலேயே கொல்லப்பட்ட அபலையின் கதை இதற்கு ஓர் உதாரணம்.

கி.பி 7ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர், புற்றீசலாய்ப் பல்கிப் பெருகிய புராணங்களும் இதிகாசங்களும் கட்டிவிட்ட கற்பரசிகளின் கதைகள் எண்ணி மாளாதவை.

திருவள்ளுவர் மட்டுமே ஆடவருக்கும் கற்பு தேவை என்பதை வலியுறுத்தினார்.

அன்று, கற்புடன் வாழ்ந்த சாமானியர்கள் இருந்தார்களோ என்னவோ, காப்பிய நாயகர்களில், கற்பு நெறி பிறழாமல் வாழ்ந்தவர் எவருமில்லை.

கம்பன், ராமனை ஏகபத்தினி விரதனாகப் படைத்துப் பெருமைப் படுத்தியது தமிழ்ப் பண்பாட்டை மனதில் கொண்டுதான்.

வால்மீகியைப் பொருத்தவரை. ராமன் பல பெண்களை மணந்தவன்.

//ஆடவரில் இன்றளவும் ‘இராமன்’ மட்டுமே’ உதாரண புருஷனாகக் காட்டப்பட்டான். ஆனால், வால்மீகி இராமாயணம் படித்தவர்கள் அதைத் தவறு என்கிறார்கள்.

‘வால்மீகி இராமாயணத்தில் அயோத்தியா காண்டம், சரகம் 8 சுலோகம் 12 இல் இராமன் பல பெண்களை வைப்பாட்டிகளாக வைத்திருந்ததை அம்பலப்படுத்துகிறது’ - Theebam [ttamil.com]//

என்னதான், ‘கற்புக்கரசி’, ‘கற்பின் கனல்’, ‘கற்புடைத் தெய்வம்’ என்றெல்லாம்  ஆடவர் கூட்டம் வாய் கிழிய வாழ்த்தியபோதும், மாதரில் கணிசமானவர்கள் படி தாண்டிய பத்தினிகளாய் நெறி பிறழ்ந்து வாழ்ந்ததாலோ என்னவோ.....

‘மணமாவதற்கு முன்போ பின்போ, உடலளவில் கணவனைத் தவிர, பிற ஆடவருடன் உடலுறவு கொள்ளாதிருத்தல் கற்பு’ என்று பிற்காலத்தில் கற்புக்குப் புதிய இலக்கணம் வகுக்கப்பட்டது!

இந்தக் கட்டுப்பாட்டை மகாத்மா காந்தி தளர்த்தினார்.

‘1947இல் நிகழ்ந்த இந்தியா பாகிஸ்தான் பிரிவினையில் ஏற்பட்ட கலவரத்தின்போது கற்பழிக்கப்பட்ட பெண்கள் [பெரும் எண்ணிக்கையில்] மனத்தளவில் குற்றம் புரிந்தவர்கள் அல்ல. அவர்கள் கற்பிழந்தவர்கள் ஆக மாட்டார்கள். இளைஞர்கள் அவர்களுக்கு வாழ்வு தர முன்வரவேண்டும்’ என்று அறிக்கை விட்டார் காந்தி. எத்தனைப் பெண்களுக்கு வாழ்வு கிடைத்தது என்பது பற்றியெல்லாம் அன்று யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. கணக்கெடுப்பு ஏதும் நிகழ்த்தப்பட்டதாகவும் அறியப்படவில்லை.

பின்னர், மிக்க புகழுடன் வாழ்ந்து மறைந்த அறிஞர் மு. வரதராசனார், கற்புக்கான இலக்கணத்தை மேலும் எளிமையாக்கினார்.

‘திருமணத்திற்கு முன்பு, ஓர் ஆணோ பெண்ணோ ஒழுக்கம் தவறியிருந்தாலும், திருமணத்திற்குப் பிறகு ஒருவர் மற்றவருக்குத் துரோகம் செய்யாமல் வாழ்ந்தால் அதுவே கற்பு’ என்றார் [‘கரித்துண்டு’ நாவல்].

‘சமுதாயம் வெகு விரைவான மாற்றங்களைக் கண்டுவருகிறது. கடந்த காலங்களில், பொருளீட்டுவதற்காக ஆண்கள் மட்டுமே வெளியிடங்களுக்குச் செல்லவேண்டியிருந்தது. பெண்கள் வீட்டோடு முடங்கியிருந்தார்கள். ஆடவர் நிலை சேற்றில் நடப்பது போல இருந்ததால் எளிதில் ஒழுக்கம் தவறினார்கள். பெண்கள் நிலை மணலில் நடப்பது போல என்பதால், அவர்கள் ஒழுக்கம் தவறுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருந்தன. ஆனால், இன்றையச் சமுதாய அமைப்பில், அவர்களும் பொருளீட்டுவதற்காகவும் பிற காரணங்களுக்காகவும் வெளியிடங்களுக்குச் சென்று ஆண்களுடன் பழகுகிறார்கள். அவர்கள் வாழ்க்கை நிலையும் சேற்றில் நடப்பது போல் ஆகிவிட்டது’ என்று பழைய விதியைத் தளர்த்தியதற்கான காரணத்தையும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

கற்பு நெறிக்கான கட்டுப்பாடுகள் படிப்படியாய்த் தளர்த்தப்பட்டதிலிருந்து ஒன்று தெளிவாய்ப் புரிகிறது. 

கற்பொழுக்கத்துடன் வாழும் பெண்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது என்பதே அது.

கள்ளக் காதலனுடன் ஓடிப்போவது; திருட்டு உறவுக்கு இடையூறாக இருந்த துணைவனை/துணைவியைத் தீர்த்துக்கட்டுவது; விவாகரத்துக் கோரி நீதிமன்றம் செல்வது [விவாகரத்துக்கான முதன்மைக் காரணங்களுள் ‘துரோகம்’ செய்வதும் ஒன்று]; பிரிந்து வாழ்வது; மணம் புரியாமலே கணவன் மனைவி போல் சல்லாபம் புரிவது; ஒப்புக்குக் கணவன் மனைவியாக வாழ்ந்துகொண்டே பிறருடன் சரசமாடுவது என்று இம்மாதிரியான நிகழ்வுகள் நாளும் அதிகரித்துவருவது மேற்கண்ட முடிவுக்கு வலிமை சேர்க்கிறது.

கற்பொழுக்கம் நலிவடைந்துவரும் நிலையில், இந்நெறியில் பற்றுக்கொண்டு வாழ்வோர் எத்தனைப் பேர்? அவர்களின் சதவீதம் என்ன? பதில்கள் அறியும் ஆர்வம் எல்லோருக்கும் உண்டு.

ஆனால், அதற்கான ‘கணக்கெடுப்பு’ சாத்தியமற்றது.

“நீங்கள் கற்புடையவரா?” என்று ஓர் ஆணிடம் கேட்கலாம். பெண்ணிடம் கேட்க முடியுமா? ஆண்களிலும் எத்தனை பேர் உண்மை பேசுவார்கள்? பெண்களின் செயல்பாடு என்னவாக இருக்கும்? கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.

சதவீதம் என்னவாகவோ இருந்துவிட்டுப் போகட்டும். இன்றளவில் நிறை பிறழாமல் வாழ்வோர் எண்ணிக்கை இனியும் குறைந்துவிடாமல் தடுத்து நிறுத்துவது சாத்தியப்படுமா?

படலாம்.

உடலுறவில் திருப்தி பெறுவது ஆணைப் பொருத்தவரை மிக எளிது. அதுவே பெண்களுக்கு மிக மிக மிக அரிது.

பெண்கள் மணவிலக்குக் கோருவதற்கான முக்கியக் காரணங்களுள் ஒன்று ‘அது’ விசயத்தில் திருப்தியின்மை என்கிறார்கள் சமூக நல ஆர்வலர்கள். [பாதிக்கப்பட்ட பெண்களும் குடும்பத்தாரும், சுய கௌரவத்துக்குப் பங்கம் விளையும் என்பதால் வேறு காரணங்களை முன் வைக்கிறார்கள்]. ஆனால், இதை நாசூக்காகவேனும் ஒரு பெண் தன் கணவனிடம் வெளிப்படுத்தும் நிலை இன்றுவரை இல்லை.

உடலுறவைப் பொருத்தவரை பெண்ணைக் காட்டிலும் ஆணுக்குள்ள பொறுப்பு[கடமை] அதிகம்.

ஆனால், தன் உடம்புச்சூடு தணிந்ததும் நடையைக் கட்டுகிற ஆண்களே பெரும்பாலோர் என்பது பொதுவான ஒரு கணிப்பு.

இந்த விசயத்தில்,  திருப்தியை அல்லது திருப்தியின்மையை நம் பெண்கள் வாய்விட்டுச் சொல்லமாட்டார்கள். ஆனால், அவர்களின் ஒவ்வோர் அசைவும் அதை வெளிப்படுத்திவிடும். அவர்களின் அன்றாட நடவடிக்கைகளை ஊன்றிக் கவனித்தால் இது தெரியவரும் [அனுபவசாலிகள் இது பற்றித் தனிப் பதிவே போடலாம்!]

தம்பதியர் இருவரும் மனம்விட்டுப் பேசுவது இது தொடர்பான பல சிக்கல்களை அவிழ்க்க உதவும். ஆனால், அதற்குரிய மனப் பக்குவம் இருவருக்குமே தேவை. இல்லையென்றால், குடும்பத்தில் வீணான குழப்பங்கள் உண்டாகும்.

தன்னைத் திருப்திபடுத்துவதில் தன்னவன் மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறான் என்பது புரிந்தாலே, குறைகளை அலட்சியப்படுத்தி, அவனைப் பெரிதும் நேசிப்பாள் பெண்.

மேற்சொன்னவற்றை மனதில் இருத்தி, மணம் புரியக் காத்திருக்கும் ஒவ்வொரு கட்டிளங் காளையும் “சொல்லித் தெரிவதில்லை மன்மதக்கலை” என்று அலட்சியமாக இராமல், உடலுறவு என்பது ஒரு கலை என்பதைப் புரிந்துகொண்டு அதை முழுமனதுடன் கற்றுத் தெளிவதில் முனைப்புக் காட்ட வேண்டும். [செயல்படுத்துவது மணமான பின்னரே].

இதை, உரிய முறையில் உணரச் செய்வதில்  பெற்றோர்க்கும் பங்குண்டு. நெருங்கிய உறவினர்களும் நல்ல நண்பர்களும்கூட உதவலாம்.

ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும், பல்கலைக் கழக மையங்களிலும் இதற்கான ஆலோசனை மையங்கள் தொடங்கலாம். அறிஞர் குழு அமைத்து அவர்களின் ஆலோசனைப்படி, சான்றிதழ்ப் பட்டப்படிப்புகள் உருவாக்குவதுகூட நன்மை பயப்பதாக அமையலாம்.

உடலுறவுக் கல்வி பெறாமல் எந்தவொரு ஆண்மகனும் மணம் புரிதல் கூடாது என்பதற்கு அரசு சட்டம் இயற்ற வேண்டிய தேவை பற்றிச் சமூக இயல் வல்லுனர்கள் சிந்திக்கலாம்.

இம்மாதிரி நடவடிக்கைகள், தாம்பத்தியச் சுகம் பெறுவதில், ஆண்களுக்கும், குறிப்பாகப் பெண்களுக்கும் ஏற்படும் அதிருப்தியைப் பெருமளவு குறைக்கும்; கற்புநெறி பிறழ்வோர் எண்ணிக்கை வெகுவாகக் குறையும்.

அனைத்திற்கும் மேலாக, ‘போதும்’ என்ற மனப் பக்குவத்தை இருபாலரும் பெறுவது மிகவும் அவசியம்.

அந்தப் பக்குவம் இல்லையென்றால், “இன்னும் வேண்டும்... இன்னும் வேண்டும்” என்று மனம் அலைபாய்வதைத் தடுக்க முடியாது. கட்டுப்பாடுகள் உடைந்து சிதற, ஆண் பெண் வேறுபாடின்றி அனைவரும் வெறி பிடித்து அலையும் நிலை உருவாகும். சில தலைமுறைகளில் கற்பு இருக்கும் இடம் தெரியாமல் மறைந்து போகும்!!!

====================================================================================

24.01.2014இல் வெளியான பதிவின் 'மறுபதிப்பு' இது.