அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வெள்ளி, 6 ஆகஸ்ட், 2021

ஒரே உலகம்! ஒரே இனம்!! ஒரே மொழி!!!


ல நாடுகளை உள்ளடக்கியது உலகம். உலகில் உள்ள மக்கள் பலவேறு இனங்களாகப் பிரிந்து வாழ்கிறார்கள். இவர்கள் பேசும் மொழிகள் மிகப் பலவாக உள்ளன.

ஆதிகாலம் தொட்டே, பல்வேறு குழுக்களாகப் பிரிந்து வாழ்ந்த இவர்களிடையே, தொடக்கத்தில் சிறு சிறு மோதல்களும், காலப்போக்கில் பெரும் போர்களும் நிகழ, பேரழிவுகள் இம்மண்ணில் இடம்பெற்றன.

பெரும் நிலப்பரப்புகளைத் தம் உடைமை ஆக்கிக்கொள்ளுதலும், பிறர் மீது ஆதிக்கம் செலுத்த முயலுதலும் போர்களுக்கான முக்கியக் காரணங்கள். பிற இனத்தவருக்குச் சொந்தமான பொருள்களைக் கொள்ளையடிப்பதும், பெண்களைக் கவர்ந்திட முயல்வதும்கூடக் காரணங்களாய்  அமைந்தன.

இவை மட்டுமல்லாது, வேறு பல காரணங்களாலும் மோதல்களும் போர்களும்  ஏற்பட்டு மிக மிகப் பெரும் எண்ணிக்கையில் மனிதர்கள் மரணத்தைத் தழுவியதும் தழுவுவதும் அன்று முதல் இன்றுவரை நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

இந்நிலை மாறுமா? 'எல்லோரும் மனிதர்களே' என்றெண்ணி உலகோர் அனைவரும் ஒன்றிணைந்து மனிதாபிமானத்துடன் ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழும் நிலை உருவாகுமா?

'உருவாகக்கூடும்' என்னும் சிறு நம்பிக்கையை மனித மனங்களில் விதைத்திருக்கிறது 'கொரோனா' என்னும் தீநுண்கிருமி.

இந்நாள்வரை, மனித உயிர்களைப் பெருமளவில் பலிகொண்ட கொள்ளை நோய்களை மருத்துவ அறிவியலின் உதவியுடன் கட்டுப்படுத்திட முடிந்தது. அவை அவ்வப்போது உலகில் ஆங்காங்கே சேதங்களை விளைவித்தனவே தவிர, ஒரே காலக்கட்டத்தில் உலகின் ஒட்டுமொத்த மனிதர்களையும் ஒருசேரத் தாக்கி அழித்ததில்லை.

கொரோனா தொற்று விதிவிலக்காக  உள்ளது.

தாக்கி அழிப்பதும், பின்வாங்குவதும், சற்றே மறைந்திருந்து தாக்குவதுமாக, அது கையாளும் தந்திர உத்தி உலக மாந்தர்களைக் கதிகலங்க வைத்துக்கொண்டிருக்கிறது. 

தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் போல, மனித இனத்தின் மீது இது ஆக்ரோசத் தாக்குதல் தொடுத்துக்கொண்டிருப்பதைக் கூர்ந்து நோக்கும்போது, மனிதர்களைப் போலவே கொரோனாவுக்கும் ஆறறிவு உள்ளதோ என்னும் சந்தேகம் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை. இதனுடனான போர் எப்போதுதான் முடிவுக்கு வருமோ என்று எண்ணிக் கலங்க வேண்டியுள்ளது.

புதிய புதிய அவதாரங்கள் எடுத்து, மனிதர்களைத் தாக்கும் இதனின் அபாயகரமான போக்கு தொடருமேயானால்..... 

மனிதருக்கும் இதற்கும் இடையிலான போர் காலவரம்பின்றி நீடிக்குமேயானால்.....

மனிதர்கள் தங்களுக்கிடையேயான, நாடு, இனம், மதம், மொழி என்னும் அத்தனை வேறுபாடுகளையும் புறக்கணித்து, மனப்பூர்வமாய் ஒன்றிணைந்து கொரோனாவை எதிர்த்துப் போராடும் நிலை உருவாகும். இது தவிர்க்கவே இயலாத ஒன்று. 

[மொழிகளின் உதவியின்றி, அலைபேசி போன்ற புதிய சாதனங்களில் குறியீடுகளை[symbols]ப் பயன்படுத்தி, மக்கள்  தங்களின் எண்ணங்களையும் உணர்வுகளையும் பகிர்ந்துகொள்ளும் விரும்பத்தக்க சூழல் உருவாகலாம். மிகச் சில நாட்களில், ஏன், மிகச் சில மணி நேரங்களில் மக்களுக்கு அவற்றைக் கற்றுத் தருவதற்கான தொழில்நுட்பங்களும் கண்டறியப்படக்கூடும்].

தீநுண்கிருமிகளுடனான போர்கள் முடிவுக்கு வந்தாலும்கூட, அப்புறமும், வறுமையை முற்றிலுமாய் நீக்கவும், தீய எண்ணங்களை அழித்தொழிக்கவும், மரணபயத்தைப் போக்கவும், 'ஏன்? எதற்கு? எப்படி? போன்ற வினாக்களுக்கு விடை தேடவும் மனித இனம் ஒன்றுபட்டுத் தொடர்ந்து போராட வேண்டிய அவலம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்.

ஆக, மனித இனம் அழியாமல் காக்கப்பட வேண்டுமாயின், ஒன்றிணைந்து போராடுவதைத் தவிர வேறு வழியே இல்லை என்பது மறுக்க இயலாத உண்மை!

====================================================================================

***இத்தலைப்பையொட்டி இன்னும் விரிவாக எழுதலாம். 'அனைத்து வேறுபாடுகளையும் அலட்சியப்படுத்தி, மனித இனம் ஒன்றிணைந்து வாழ்தலுக்கான தேவை என்றேனும் ஒரு நாள் உருவாகும்' என்பதை உணர்த்த மட்டுமே இப்பதிவு என்பதால், அது தவிர்க்கப்பட்டது.

இது குறித்து, உலக அளவிலான அறிஞர்கள் மிக விரிவான ஆய்வுகளை நிகழ்த்தியிருத்தல்கூடும். தேடல் முயற்சியை நான் மேற்கொள்ளவில்லை.

மறைந்த எழுத்தாளரும் அறிஞருமான டாக்டர் மு. வரதராசனார் அவர்கள், தம்முடைய நூலொன்றில், இது போன்றதொரு தலைப்பின் கீழ் ஆய்வுரை நிகழ்த்தியுள்ளார் என்பதை இங்கு நினைவுகூர்கிறேன்.

வருகைக்கு நன்றி.