புதன், 22 செப்டம்பர், 2021

கல்யாணத்துக்கு 'ஜாதகப் பொருத்தம்'! கள்ள உறவுக்கு?!


//'அவிஷேக் மித்ரா' மும்பை நகரவாசி.

இந்த ஆள் தன்னுடன் பணிபுரிகிற ஒரு பெண்ணை, பின்னர் திருமணம் செய்துகொள்வதாகச் சொல்லி, நம்பவைத்துப் பலமுறை அவளுடன் கலவி சுகம் அனுபவிக்கிறான்.

அந்தப் பெண் கருவுறுகிறாள். இவனுடைய வற்புறுத்தலில் கருக்கலைப்பும் செய்துகொள்கிறாள். இனியும் தாமதிப்பது தவறு என்பதை உணர்ந்த அவள், தன்னைத் திருமணம் புரியும்படி இவனை வற்புறுத்துகிறாள். விளைவு.....

அவளை மணந்துகொள்ள மறுத்ததோடு, அவளுடனான உறவையும் துண்டிக்கிறான் அவிஷேக் மித்ரா.

பாதிக்கப்பட்ட பெண், மும்பை உயர் நீதிமன்றத்தில் இவன் மீது வழக்குத் தொடுக்கிறாள்.

நீதி விசாரணையில், "தான் உறவுகொண்ட பெண்ணுக்குத் துரோகம் செய்வது என் கட்சிக்காரரின் நோக்கமல்ல. மணம் புரிய மறுத்ததற்கான காரணம், இருவருக்கும் ஜாதகப் பொருத்தம் இல்லாததே. எனவே, என் கட்சிக்காரர் மீதான வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும்" என்று வாதாடுகிறார் இந்த ஆளின் வழக்குரைஞர்.

வழக்கை விசாரித்த நீதியரசர், "பெண்ணுடன் கூடிக் களித்துவிட்டு, திருமணம் செய்வதற்கு 'ஜாதகப் பொருத்தம்' இல்லையென்று சொல்வதை ஏற்க இயலாது. வழக்கைத் தள்ளுபடி செய்ய முடியாது" என்று தீர்ப்பளித்திருக்கிறார்//

இது, இன்றைய[22'09.2021] நாளிதழ்[காலைக்கதிர்]ச் செய்தி.

                                             *  *  *

மூடர்களின் குருதியில் இரண்டறக் கலந்துவிட்ட ஜோதிட நம்பிக்கையைப் புறம் தள்ளி நீதியரசர் வழங்கிய அதிரடித் தீர்ப்பு பெருமகிழ்ச்சி தருகிறது.

"கல்யாணம்னா ஜாதகப் பொருத்தம் பார்க்கிற மாதிரி, ஒரு பொண்ணை நம்ப வைத்துக் கள்ள உறவு கொள்வதற்கு முன்னாடியும் பொருத்தம் பார்த்துட்டா, உறவைத் துண்டிக்கும்போது அவள் தைரியமா நீதிமன்றத்தில் வழக்குப் போடுவாளா,  அப்பாவியா தூக்கில் தொங்கிடுவாளான்னு தெரிஞ்சிடுமே, ஏன் உங்க கட்சிக்காரர் பார்க்கலையா?' என்று நீதியரசர் 'சுளீர்' கேள்வியொன்றையும் எழுப்பியிருப்பாரேயானால் அது நம் மகிழ்ச்சியை இருமடங்காக ஆக்கியிருக்கும்!

நீதியரசருக்கு நம் நன்றி.

====================================================================================