அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வியாழன், 23 செப்டம்பர், 2021

'விலை' இல்லாத விலைமகள்!!!

இது நடந்த நிகழ்வு அல்ல; 'நடந்தால் நல்லதுதானே' என்னும் என் எண்ணத்தால் உருவான 100% கற்பனைக் கதை! விரும்புகிறீர்களோ இல்லையோ, சற்றேனும் மனம் நெகிழ்வீர்கள் என்பது என் நம்பிக்கை!

============================================================================     
வாடிக்கையாளர்களை எதிர்கொண்டு வரவேற்கும் வழக்கமுள்ள மாலா, அன்று படுக்கையில் கிடந்தவாறே, “வாங்க மணி” என்று  இதமான குரலில் மணிமொழியனை வரவேற்றாள்.


“உடம்புக்கு என்னம்மா?” என்றான்  மணிமொழியன்.

“ரெகுலர் செக்கப் போயிடுறேன்; நாள் தவறாம உடற்பயிற்சி செய்யுறேன். உடம்புக்கு ஒன்னும் இல்ல. மாடிப்படியில் தடுக்கி விழுந்ததில் இடுப்பில் அடி பட்டுடிச்சி. பத்து நாள் போல ஓய்வில் இருக்கணும்னு டாக்டர் சொல்லிட்டார்” என்றாள் மாலா. 

“ஃபோன் பண்ணிட்டு வந்திருக்கணும். பரவாயில்லை. ரெண்டு வாரம் கழிச்சி வர்றேன். உடம்பைப் பார்த்துக்கோ.” -நகர முற்பட்டான் மணிமொழியன்.

“கொஞ்சம் இருங்க. என் ஃபிரண்டு அபிராமியை வரச்சொல்றேன். என்னைவிட ஆள் நல்லா இருப்பா” என்றாள் மாலா.

“வேண்டாம்.”

“ஏங்க?”

“மாலா, எனக்கு எப்பவும் ‘அது’ உன்னோடு மட்டும்தான்.”

அழகிய புருவங்கள் வளைந்து நெளிய, “அப்படியா?” என்றாள் அவநம்பிக்கை நிறைந்த தொனியில்.

“அது விஷயத்தில் கட்டுப்பாடில்லாமல் விளையாடினதில், என் அப்பா எயிட்ஸ் நோயாளி ஆனார்; அம்மாவுக்கும் தானம் பண்ணினார். அந்த நோய்க்கு ரெண்டு பேருமே பலியானாங்க.....”

“அடடா, அப்புறம்?”

எப்பவும் மனைவியோடு  மட்டும்தான் உடலுறவு கொள்வேன்னு சபதம் எடுத்தேன். என் அப்பா, அம்மா ரெண்டு பேருமே ‘அந்த’ நோய்க்கு ஆளானதால, மருத்துவமனையில் செக்கப் செய்துகிட்டேன். எனக்கு அந்த நோய் இல்லேங்கிறது தெரிஞ்சிது. ஆனா, அதை யாரும் நம்பல;  பெண் தரவும் முன்வரல.  பிரமச்சாரியாவே காலம் கடத்திட நினைச்சேன். அது அவ்வளவு சுலபமில்லைன்னு  புரிஞ்சபோது, ஒரு புரோக்கர் மூலமா உன்னைச் சந்திச்சேன்; நிரந்தர வாடிக்கையாளனாகவும் ஆனேன்.....”

இடைவெளி கொடுத்துச் சொன்னான் மணிமொழியன்: “இப்பவும் நான் ஏக பத்தினி விரதன்தான் மாலா. உன்னைத் தவிர வேறொருத்தியை நான் மனசாலும் நினைக்கிறதில்ல.” 

கண்கள் குளமாக அவனை ஆச்சரியமாகப் பார்த்தாள் மாலா. “நானும் இனி உங்களுக்கு மட்டுமே சொந்தமானவளாக இருக்க விரும்புறேன். இதுவரை விலைமகளா இருந்தாலும், இனி உங்களுக்குத் துரோகம் செய்யாம நல்ல குடும்பப் பெண்ணா என்னால் வாழ்ந்துகாட்ட முடியும். என்னை ஏற்பீங்களா” என்றாள் தழுதழுத்த  குரலில்.

முகத்தில் பரவசம் பொங்கி வழிய, அவள் கன்னங்களில் மிருதுவாய்ச் சில முத்தங்கள் பதித்து, “நான் இனி உன் வாடிக்கையாளன் அல்ல; வாழ்க்கைத் துணைவன்” என்றான் மணிமொழியன்.
====================================================================================