வெள்ளி, 24 செப்டம்பர், 2021

கட்டிய மனைவியும் கட்டாய உடலுறவும்!!


ஓர் ஆணும் பெண்ணும் மணம் புரிந்து இணைந்து வாழ்வது உடலுறவுக்கு மட்டுமே அல்ல. எனினும், இருவரும் மனம் ஒன்றி மகிழ்வுடன் வாழ்வதற்கு அதன் பங்கு மகத்தானதாகும்.

உடலுறவின் பயனை முழுமையாகப் பெறுவதற்கு, உடலுறவு கொள்வதற்கு முன்பு ஒருவரின் இசைவை மற்றவர் பெறுவது, அல்லது, குறிப்பால் உணர்வது/உணர்த்துவது மிக மிக முக்கியம்.

ஆனால், இது விசயத்தில் இன்றளவும் பெண்களுக்கு இதற்கான உரிமை வழங்கப்படவில்லை. 

காமம் கிளர்ந்தெழும்போது, கணவன் மனைவியின் விருப்பத்தைக் கருத்தில் கொள்வதில்லை. உறவு கொள்ளும்போது மனைவியின் விருப்பத்திற்கும் தேவைக்கும் ஏற்றவாறு நடந்து கொள்வதும் இல்லை.

இது விசயத்தில் மனைவி தன் இசைவின்மையை வெளிப்படுத்துவதில்லை. அதற்கான துணிவு அவளுக்கு இல்லை; உரிமையும் வழங்கப்படவில்லை.

தன் சம்மதம் இல்லாமல், தன் கணவன் உடலுறவு வைத்துக் கொள்வதைக்கூட அவனின் உரிமை என்றே பெரும்பாலான பெண்கள் நம்புகின்றனர். இதற்கு அவர்கள் பெற்றோரால் வளர்க்கப்படும் முறையும் காரணமாக அமைகிறது.

உடலுறவு விசயத்தில் பெண்களைக் கொத்தடிமைகளாக ஆக்கியதில் முக்கியப் பங்காற்றியவை மதங்கள் எனலாம். 

எல்லா மதங்களும் ஆண்களை மையப்படுத்தியே உள்ளதால், அவற்றின் சிந்தனைகளும் ஆண்களுக்கு ஏற்றதாகவே உள்ளன. கிறிஸ்தவம், இஸ்லாம், இந்து என அனைத்து மதங்களும், தம் விருப்பு வெறுப்பைப் புறம் தள்ளி ஆண்கள் விரும்பும்போதெல்லாம் அவர்களின் இச்சையைத் தணிக்கக் கடமைப்பட்டவர்கள் பெண்கள் என்றே வலியுறுத்துகின்றன.

பெண் தனது பாலியல் ஆசைகளை வெளிப்படுத்தினாலோ ஆண் அவளது நடத்தையைச் சந்தேகப்படுகிறான். அவளின் அந்தரங்க ஆசைகளைப் புரிந்துகொள்வதற்கான முயற்சிகூட மிக மிகப் பெரும்பானாலான ஆண்களிடம் இல்லை என்பது கொடுமையிலும் கொடுமை.

பெண் தன் விருப்பமின்மையை வெளிப்படையாகவோ, குறிப்பாகவோ உணர்த்தினால்கூட, அதை அலட்சியப்படுத்தி, அவளை வன்புணர்வு செய்யும் போக்கு ஆடவரிடத்தில் தொடர்கிறது.

'கணவனுக்குத் தேவைப்படும்போதெல்லாம் மனைவி பாலியல் உறவுக்குத் தயாராக இருக்கவேண்டும் என்பது திருமணத்துக்கான அர்த்தம் அல்ல' என்று டெல்லி உயர் நீதிமன்றம் வழக்கொன்றில் கூறியிருக்கையில், “ஓர் ஆணுக்கும் அவரது சட்டப்பூர்வத் திருமணமான மனைவிக்கும் இடையிலான பாலியல் உறவு, வலுக்கட்டாயமானதாகவோ, அவளுடைய விருப்பத்திற்கு எதிராகவோ இருந்தாலும், அது பலாத்காரம் அல்ல” என்று வேறொரு வழக்கில் வேறொரு நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது விநோதமாக உள்ளது[அண்மையில் சத்தீஸ்கர் மாநில உயர் நீதிமன்றம் அளித்துள்ள இந்தத் தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாகப் பலரும் கருத்து தெரிவித்துவருகிறார்கள். குறிப்பாகச் சமூக வலைதளங்களில் இது குறித்த எதிர்ப்பை அதிகம் காண முடிகிறது].

2016ஆம் ஆண்டு திருமண வன்புணர்வு பற்றிப் பேசிய மேனகா காந்தி, "திருமண உறவில் வன்புணர்வு என்பது பற்றி மேற்கத்திய நாடுகளில் பரவலாக விவாதிக்கப்படுகிறது. இந்தியாவில் கல்வியின்மை, வறுமை, சமூகப் பழக்க வழக்கங்கள், மத நம்பிக்கைகள், திருமணத்தின் புனிதம் ஆகிய காரணங்களால் திருமண உறவில் வன்புணர்வு செய்வதைக் குற்றமாக்கும் சட்டத்தைக் கொண்டுவருவது கடினம்" என்று கூறியிருப்பது, நினைவுகூர்ந்து சிந்திக்கத்தக்கது

சீனா, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட 32 நாடுகளில், 'சட்டப்படி திருமணம் செய்த மனைவியுடன், வலுக்கட்டாயமாகக் கணவன் உடலுறவு கொண்டால், அது குற்றமாகாது' என்ற சட்டம் உள்ளது என்பதும் அறியத்தக்கது.

கணவனின் கட்டாய உறவினால் பெண்களுக்கு மன அழுத்தம், பதற்றம், மனச்சோர்வு, ஹார்மோன் தொடர்புடைய நோய்கள், மனநலம் தொடர்பான பிரச்னைகள் ஏற்படுகின்றன.

மனைவியின் பாலியல் ஆசைகளும் கடுமையாகப் பாதிக்கின்றன. இதனால் தனது கணவன் மீதான பாசமும் பற்றும் குறைகின்றன.

எடுத்துக்காட்டாக ஒரு நிகழ்வு:

*34 வயதான சஃபா திருமணம் நடந்த அன்று இரவே, அவரது கணவரால் வன்புணரப்பட்டார். அதில் அவருக்குத் தொடைப் பகுதியிலும், மணிக்கட்டிலும், வாய்ப் பகுதியிலும் காயங்கள் ஏற்பட்டன.

அவர் சொன்னார்: "எனக்கு அப்போது மாதவிடாய். நான் உடலுறவுக்கு அன்று இரவு தயாராகவில்லை. என் கணவரோ, நான் உடலுறவு கொள்வதைத் தவிர்ப்பதாகக் கருதினார்; அவர் என்னை அடித்தார்; கையில் விலங்கிட்டார்; என் குரல்வளையை நெரித்தார்; என்னை வன்புணர்ந்தார்."

இத்தனை நடந்த பிறகும், சமூக விழுமியங்களைக் கருதி சஃபா தன் கணவருக்கு எதிராக இது குறித்துக் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவில்லை.

ஆக.....

மனைவியின் விருப்பம் இல்லாமல் பாலியல் பலாத்காரம் செய்யும் கணவனைத் தண்டிப்பது இப்போதைக்குச் சாத்தியம் இல்லை. பாலினச் சமத்துவத்தைப் பரவலாக்காமல் இது போன்ற வன்முறைகளைக் கட்டுப்படுத்துவது கடினமே. அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுதல் மட்டுமே காலத்தின் தேவை.

====================================================================================

நன்றி:

https://www.bbc.com/tamil/india-44902711

https://www.bbc.com/tamil/global-57857722

https://tamil.samayam.com/latest-news/india-news/the-verdict-by-chhattisgarh-court-on-marital-rape-has-created-furor/articleshow/86032074.cms

https://www.seithisolai.com/will-forced-intercourse-affect-womens-mental-health.php

https://www.dinamalar.com/news_detail.asp?id=2831086&Print=1