முதல்வர் மு.க.ஸ்டாலின் முதலான தமிழகத் தலைவர்கள் பலரும் பு.தே.க.கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு, அனைத்திந்திய அளவில் ஓர் எதிரணியை உருவக்க முயன்றார்கள். 'மதிமுக' தலைவர் 'வைகோ', புதிய கல்விக் கொள்கையினால் விளையும் தீங்குகளை விவரித்து, அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க ஓரணியில் திரளும்படி பிற மாநில முதல்வர்களுக்குக் கடிதமும் எழுதினார்.
பயன் ஏதும் விளையவில்லை.
எந்தவொரு மாநில முதல்வரும் நடுவணரசின் பு.தே.க.கொள்கையை எதிர்த்ததாகத் தெரியவில்லை.
இந்நிலையில், கர்னாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா பு.தே.க.கொள்கையை எதிர்த்துக் குரல் எழுப்பியிருப்பது பெரிதும் ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
அது தொடர்பான செய்தி.....
#கர்நாடக மாநில எதிர்க்கட்சித் தலைவரான சித்தராமையா, உயர்கல்வித் துறை அமைச்சர் அஸ்வத் நாராயணனுக்குப் புதிய தேசியக் கல்விக் கொள்கை தொடர்பாகக் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் கூறப்பட்டிருப்பது:
'கர்நாடகத்தில் புதிய தேசியக் கல்விக் கொள்கையை, நிபுணர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுடன் ஆலோசிக்காமல் திடீரென்று அரசு அமல்படுத்தியிருக்கிறது. புதிய தேசியக் கல்விக் கொள்கையில் இருக்கும் சாதகம் மற்றும் பாதகங்கள் குறித்து விரிவாக எந்த ஒரு விவாதமும் நடத்தாமல், இந்தக் கல்வி ஆண்டிலேயே[2020] அதை அரசு அமல்படுத்தியிருப்பது சரியான முடிவு அல்ல.
புதிய தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்திய பின்பு, அதுகுறித்து விவாதம் நடைபெறுவது தேவையற்றது. உயர் கல்வித்துறை அமைச்சராக இருக்கும் உங்களுக்கு இது பற்றித் தெரியவில்லையா?
எந்த ஒரு நாட்டிலும் உயர் கல்வித்துறை சிறப்பாக இருந்தால்தான், அந்த நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்குச் சரியான முறையில் தீர்வு காண முடியும்.
புதிய கல்விக் கொள்கையில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இவை பற்றி விவாதிக்க வேண்டியது அவசியமாகும். இந்தப் புதிய தேசியக் கல்விக் கொள்கையால் சாதாரண ஏழை, கிராமப்புற மாணவ, மாணவிகளுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படும். எனவே, கர்நாடக அரசு அமல்படுத்தி உள்ள இந்தக் கல்விக் கொள்கையை உடனடியாகத் திரும்ப பெற வேண்டும்#
====================================================================================
நன்றி: https://www.dailythanthi.com/News/Districts/2021/09/04022449/The-new-education-policy-in-Karnataka-needs-to-be.vpf -செப்டம்பர் 04, 2021 02:24 AM