இங்கே பிரபலமாக உள்ள பெரிய பெரிய கோயில்கள் எல்லாமே, தமிழகத்தை ஆட்சி செய்த தமிழ் மன்னர்களால் தமிழ் மக்களின் உழைப்பில் கட்டப்பட்டவையே.
தமிழ் மக்களுக்காக, தமிழ் மக்களின் உழைப்பில் கட்டப்பட்ட கோயில்களில் உள்ள கடவுள்களுக்குத் தமிழில் வழிபாடு நிகழ்த்துவதே இயற்கை நெறியாகும்.
இம்மண்ணை ஆண்ட மன்னர்களின் அறியாமையைப் பயன்படுத்தி, 'சமஸ்கிருதம் தேவ பாஷை; வேதம் கடவுளால் அருளப்பட்டது. அதிலுள்ள மந்திரங்களைச் சொல்லி வழிபட்டால்தான் கடவுளின் அருள் கிட்டும்' என்று போதனை செய்து அவர்களை நம்ப வைத்தார்கள் 'பிராமணர்கள்'; வழிபாட்டு நெறிமுறைகளைத் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார்கள்.
அறிவியல் யுகம் பிறந்தது.
ஆழ்ந்து சிந்திக்கக் கற்ற தமிழர்கள், சமஸ்கிருதமும் சம்பந்தப்பட்ட மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஒரு மொழியே என்பதை அறிந்தார்கள்.
வாழ்க்கைப் பயன்பாடுகளுக்கு மட்டுமல்லாமல், கடவுள் வழிபாட்டுக்கும் உகந்த மொழி, தாய்மொழியாம் தமிழே என்பதை உணர்ந்தார்கள். அதை வழிபாட்டு மொழியாக்கிட இடைவிடாது முயன்றார்கள்.
அதைக் கோயில்களில் நுழையவிடாமல் அவ்வப்போதைய ஆட்சியாளர்களின் உதவியுடனும் நீதி மன்றங்களை அணுகியும் தொடர்ந்து தடுத்துவந்தார்கள் 'அவர்கள்'.
அவர்கள் திருந்தவில்லை; தமிழைக் கோயில் வழிபாட்டு மொழியாக ஏற்பதற்கு இன்றளவும் அவர்கள் தயாராக இல்லை என்பதை, தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டதை எதிர்த்து, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர்[பிராமணர்கள் சார்பாக] உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தது உறுதிப்படுத்தியது.
இவர், '1998ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பில் சமஸ்கிருதத்தில்தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கோயில்களில் பின்பற்றப்படும் ஆகம விதிப்படியான நடைமுறைகளை மாற்ற முடியாது[நடைமுறைகளை உருவாக்கியவர் கடவுளா?!?!]. மத விவகாரங்களில் அரசு தலையிட முடியாது' என்றெல்லாம் தன் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
நரசிம்மன் என்பவரின் வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், '2008ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் எந்த மொழியில் அர்ச்சனை செய்வது என்பது பக்தர்களின் விருப்பத்துக்கு உட்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. தமிழில் அர்ச்சனை செய்ய எந்தத் தடையும் இல்லை என்றும் அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது' என்றும் குறிப்பிட்ட நீதிபதிகள், 'குறிப்பிட்ட மொழியில்தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் வற்புறுத்த முடியாது. ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றம் பரிசீலித்து அளித்த தீர்ப்புக்கு முரணான முடிவை எடுக்க முடியாது. ஏற்கனவே முடிவெடுக்கப்பட்ட முடிவை மறு பரிசீலனை செய்யத் தேவையில்லை. எனவே, இந்த வழக்கைத் தள்ளுபடி செய்கிறோம்' என்று உத்தரவிட்டுள்ளார்கள்.
நீதிபதிகளின் தீர்ப்பு நமக்கு மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிற அதே வேளையில், தமிழரின் கடின உழைப்பில் உருவான கோயில்களில் தமிழை நுழையவிடாமல் தடுக்கும் முயற்சியை 'அவர்கள்' இன்றளவும் தொடர்ந்துகொண்டிருப்பது, தமிழர்கள் என்றென்றும் கவனத்தில் கொள்ள வேண்டியது மிக மிக மிக அவசியம்!
தகவல் உதவி: http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=131594 -9/3/2021 4:51:58 PM
====================================================================================