அற்பமான விசயங்களுக்கெல்லாம் ஜோதிடர்களைத் தேடிப்போய் ‘நல்ல நேரம்’ பார்க்கும் மூடத்தனம் நம்மிடையே அதிகரித்துவிட்டது. மணமான இளசுகள் முதல் முறை உடலுறவு[முதலிரவு] கொள்வதற்கான நாளையும் நேரத்தையும் கணிப்பதற்கும்கூட ஜோதிடர்களை அணுகுகிறார்கள்.
இதற்கான நல்ல நேரத்தைக் காட்டிலும், இதைச் செய்யக்கூடாத கெட்ட நேரங்கள் அதிகமாக இருப்பதை ஒரு ஜோதிட இதழில் வாசிக்க நேர்ந்தது[பெயர் நினைவில் இல்லை]. அடுத்து இடம்பெறுவது அதற்கான பட்டியல்.
1.அஷ்டமி, பௌர்ணமி, அமாவாசை, பிரதமை, சதுர்த்தி, சஷ்டி, ஏகாதசி, சதுர்த்ததி போன்ற நாட்களில் உடலுறவு கூடாது.
2.ரோகிணி, அஸ்தம், அனுஷம், சுவாதி, ரேவதி, மூலம், உத்தரம், சதயம் நட்சத்திரங்கள் உடலுறவுக்கு ஆகாது.
3.மாதப்பிறப்பு, வருசப் பிறப்பு, விரததினம், விரதத்துக்கு முந்தையதும் பிந்தையதும் ஆன தினங்கள், தீட்டு நாட்கள், ஞாயிற்றுக் கிழமை, கிரகணம் போன்ற நாட்களிலும் உடலுறவு கொள்ளுதல் தவறாகும்.
4.இரவில் முதல் இரண்டு ஜாமத்திலும் (மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை), அதிகாலை நான்காம் ஜாமத்திலும் (அதிகாலை 2.00 மணி முதல் 4.00 மணி வரை) உடலுறவு கொள்வது தீமை பயப்பதாகும்.
5.ஆண் எண்ணெய் தேய்த்துக் குளித்த நாட்களில் பெண்ணுடன் உடலுறவு வைத்துக் கொள்ளக்கூடாது[பெண்ணுக்கு விதிவிலக்கா?!].
6.நண்பகல் 12 மணி, இரவு 12 மணி ஆகிய நேரங்களில் உடலுறவு கொள்ளக்கூடாது.
7.ஆடி மாதம் உறவு வைத்துக் கொண்டால் சித்திரை மாதத்தில் குழந்தை பிறக்கும். இப்படிச் சித்திரை மாதத்தில் குழந்தை பிறந்தால் தந்தைக்கு ஆகாது.
கெட்ட நேரம் என்றும், நல்ல நேரம் என்றும் நேரத்தைப் பாகுபடுத்துகிற ஜோதிடர்கள், அவற்றிற்கான காரணங்களை ஒருபோதும் விவரித்துச் சொல்வதில்லை. அவர்களை அணுகுகிறவர்களும் கேள்வி எழுப்புவதில்லை.
ஓயாமல் உழைப்பவனுக்கு எல்லா நேரமும் நல்ல நேரமே. நமக்கு வாய்த்திருக்கிற அற்ப வாழ்நாட்களில் கணிசமானவற்றைக் கெட்ட நேரம் என்று வீணடிப்பது அறியாமையின் உச்சமாகும்.
ஜோதிடத்தை நம்பும் அளவுக்கு, அறிவியல் ரீதியான காரணங்களைத் தெரிந்துகொள்வதில் நம் மக்கள் ஆர்வம் காட்டுவதே இல்லை என்பது மிகப் பெரிய சோகம்.
அறிவியல் அணுகுமுறை சிறிதும் இல்லாத ஜோதிடத்தை நம்பி, மணமான ஆணையும் பெண்ணையும் முதலிரவு என்னும் பெயரில் உடலுறவுக்குத் தூண்டுவது அறிவுடைமை அல்ல.
காரணம், ஓர் ஆணும் பெண்ணும் முதன் முறையாக உடலுறவு[முதலிரவு] கொள்வது, இருவரிடையேயான புரிதலையும், உடலுறவு கொள்ளத் தூண்டும் ரம்மியமான சூழலையும், நல்ல மனநிலையையும் பொருத்தது.
புதுமணத் தம்பதிகள், முதலிரவுக்குப் பதிலாக முதல் பகல்கூடக் கொண்டாடலாம். முதல் உறவில் அவர்கள் ‘முழுத் திருப்தி’[கொஞ்சம் கூடக் குறைய இருப்பினும் பாதகமில்லை] பெறுவதே விரும்பத்தக்கது.
முதலிரவுத் திணிப்பை இனியேனும் நம் பெரியவர்கள் தவிர்த்திட வேண்டும் என்பது நம் வேண்டுகொள்!
====================================================================================