அவற்றில் பலவற்றிற்கு எழுத்தாளர்கள் கட்டுரை வடிவம் தந்திருக்கிறார்கள். அவ்வகையிலான கட்டுரைகளில் கணிசமானவற்றை 'ஆனந்த விகடன்' தொகுத்திருக்கிறது. அவற்றிலிருந்து மிகச் சிறியதொரு பகுதியை இங்கே பகிர்ந்திருக்கிறேன். கீழே உள்ள முகவரியைச் சொடுக்கி முழுத் தொகுப்பையும் நீங்கள் படிக்கலாம்.
விகடனுக்கு நன்றி.
* * *
*வேணாட்டு அரசன் ஒருவன், 'வலங்கை'ச் சாதிப் பிரிவு வெங்கலராசனின் மகளை விரும்பி, பெண் கேட்டபோது வெங்கலராசன் மறுத்தான். அதனால், போர் வந்தது. வெங்கலராசன் தன் கோட்டையைப் பாதுகாக்க நினைத்து, மகளின் தலையைப் போர் தொடுத்த அரசன் முன் எறிந்தான்.
*பூலங்கொண்டாளின் தந்தை, தன் சாதி உட்பிரிவைச் சார்ந்த ஒருவன் பெண்கேட்டு வந்தபோது மறுத்தான். அதனால் ஏற்பட்ட பூசலால், பூலங்கொண்டாள் கிணற்றில் மூழ்கடிக்கப்பட்டு இறந்தாள்.
*தென்மாவட்டங்களில், குறிப்பாகத் திருவனந்தபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் வாழ்கின்ற ‘செட்டு’ சமூகத்தினர் பூம்புகாரிலிருந்து தாங்கள் குடி பெயர்ந்ததற்குக் காரணமாக, சோழன் தங்களிடம் பெண்கேட்டு மறுத்த காரணத்தைக் கூறுகின்றனர். மணமறுப்பால் அப்போது கொல்லப்பட்ட பெண் இப்போது வழிபாடு பெறுகிறாள். கி.ராஜநாராயணனின் ‘கோபல்ல கிராமம்’ நாவலின் மையமே இதுதான்.
*குறுநில மன்னர்கள் மட்டுமல்ல, போர்த்துக்கீசிய படைத் தலைவர்கள், பிரிட்டிஷ் அதிகாரிகள்கூட இதற்கு விதிவிலக்கல்ல. தென்மாவட்டங்களில் குறிப்பிட்ட சில சாதியினரிடம் வழிபாடுபெறும் பாலாம்பாள் என்ற தெய்வம் ஒரு சான்று. இவள் 150 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவள். வரி வசூலிக்கும் பொறுப்பிலிருந்த ஒரு வெள்ளைக்கார அதிகாரி, குதிரையில் வந்து பாலாம்பாளின் ஏழு அண்ணன்மார்களிடம் பெண் கேட்டான். அவர்களுக்கு விருப்பமில்லை. அதிகாரியிடம் சொல்வதற்குப் பயம். அதனால், பாலாம்பாளை ஆழக் குழியில் தள்ளி, மூடிக் கொன்றுவிட்டார்கள். இப்போது அவள் தெய்வம். சிலர் பெண் கேட்டவனை அவமானப்படுத்த, பெட்டை நாயை அவனிடம் அனுப்பிவிட்டு, மகளைக் கொன்றனர். இப்படியாக நடந்த கொலைகளைத் தனிப்பட்டவர்களின் குடும்பத்தினர் மட்டும் செய்யவில்லை, அந்தச் சாதியினரின் ஒத்துழைப்புடனேயே அவை நடந்தன.
*நாயக்க அரசு தமிழகத்தில் ஆட்சி செய்தபோது, நிர்வாக வசதிக்காகப் பாளையப்பட்டு முறை உருவானது. இதன் தலைவர்களான ஜமீன்தார்கள், இவர்களின் அதிகாரிகள் சிலரின் வக்கிரத்தாலும் பெண் தெய்வங்கள் உருவாகியிருக்கின்றன.
*கிராமத்தின் அழகான சிறுமிகள் பருவமடைந்த செய்தி, அப்பகுதி ஜமீன்தாருக்கோ, அவரைச் சார்ந்த பெரிய மனிதர்களுக்கோ போய்விடும். இந்தச் செய்திகளைச் சொல்வதற்கு என்று வயதான பெண்கள் இருந்தார்கள். இவர்கள் அந்தச் சிறுமிகளை வெட்டவெளிக் கழிப்பிடத்தில் இருக்கும்போது நோட்டமிடுவார்கள். அவர்களின் உடல்வாகு வக்கிரத்தைத் தாங்கும் என்பதையும் அறிந்துகொள்வார்கள். இதன் பிறகு, எதாவது ஒருநாள் அதிகாரப் பூர்வமாகவோ, சூழ்ச்சியாகவோ அவர்கள் கடத்தப்படுவார்கள்.
*திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண், ஊர்த் தலைவனுக்கு முதலில் விருந்தாக வேண்டும் என்ற வழக்கமும் இருந்தது. இதற்கெல்லாம் மறுத்த சிறுமிகள் கொலை செய்யப்பட்டனர்; பலாத்காரத்தாலும் இறந்தனர்.
==========================================================================