செவ்வாய், 19 அக்டோபர், 2021

"அங்கே வேண்டாம்; இங்கே வந்து அழு!"... அழைக்கிறது 'ஸ்பெயின்' அரசு!!!

லையில்லாத துயரத்துக்கு நாம் ஆளாகும்போது, வேறு யாரும் பார்த்து விடக் கூடாது என்பதற்காகக் கண்ணீரைக்கூட மறைக்க வேண்டிய இக்கட்டான ஒரு சமூகத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம். உலகின் எந்தவொரு நாட்டு மக்களும் இதற்கு விதிவிலக்கல்ல, 'ஐரோப்பிய நாடுகளின் ஒன்றான 'ஸ்பெயின் உட்பட.

வாய்விட்டு அழுதால் ஓரளவுக்கேனும் துயர் தணியும் என்பார்கள். அதற்கான சூழல் எல்லோருக்குமே வாய்ப்பதில்லை என்பதே மிகப் பெரிய துயரம்.

இந்தத் துயரம் 'ஸ்பெயின் நாட்டு மக்களைப் பெருமளவில் பாதித்திருப்பதாகத் தெரிகிறது.

ஸ்பெயினில், மன அழுத்தம் காரணமாக, தற்கொலைகள் அதிகரித்துவருகிறது. இதனைத் தடுக்க அரசும், தன்னார்வ அமைப்புகளும் கடுமையான முயற்சிகளை எடுத்து வருகின்றன. 

ஸ்பெயின் அரசு வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த 2019ஆம் ஆண்டில் மட்டும், 3 ஆயிரத்து 671 பேர் தற்கொலை காரணமாக உயிரிழந்துள்ளனர். 10 இளைஞர்களில் ஒருவர் மனநலப் பிரச்னையுடன் இருப்பதாகவும், ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 5.8 சதவீதம் பேர் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த அவல நிலையை அகற்றி, மக்களின் மனநலனைப் பாதுகாக்க ஸ்பெயின் நாட்டில் 'அழுகை' அறை என்னும் ‘Crying Room’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஸ்பெயினின் 'மேட்ரிட்' நகரில் அமைக்கப்பட்டுள்ள இந்த அழுகை அறைக்கு மக்கள் வருகை தந்து தாங்கள் யாரிடம் மனம் விட்டு அழ வேண்டும் என நினைக்கிறார்களோ அவர்களை அலைபேசி மூலம் தொடர்புகொண்டு அழுது துயர் தணியலாம்.

உளவியல் நிபுணர்களிடம் தங்கள் மனதில் உள்ளவற்றை கொட்டித் தீர்க்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மனம் விட்டுப் பேச ஆள் இல்லையே என்ற ஏக்கம் மக்களை உளவியல் ரீதியாகப் பாதிப்பதால் உளவியல் நிபுணர்கள் இணைந்து இந்த அழுகை அறையை அறிமுகம் செய்துள்ளனர்.

உலக மனநல தினமான அக்டோபர் 10ஆம் தேதியன்று ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், மனநலம் சார்ந்த விழிப்புணர்வுக்காகச் சுமார் 116 மில்லியன் டாலர் தொகையைத் தனியாக ஒதுக்கியுள்ளார்.

மேலும், “மன அழுத்தம் என்பது பேசவோ, விவாதிக்கவோ தடை செய்யப்பட்ட ஒன்றல்ல. இது ஒரு பொதுச் சுகாதாரப் பிரச்சனை. இதுகுறித்துப் பேசி இதை வெளிப்படைத்தன்மை கொண்டதாக மாற்றி, மன அழுத்தத்தைப் போக்க வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த அழுகை அறைக்குச் சென்று, மனதில் உள்ள கோபம், எரிச்சல், ஏமாற்றம், தனிமைத் துன்பம் உள்ளிட்ட அனைத்து இறுக்கமான உணர்ச்சிகளையும் பேசி அவற்றிற்கான தீர்வுகளைப் பெறலாம்.

24 மணி நேரமும் தற்கொலைத் தடுப்பு உதவிச் சேவை மையமும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த அழுகை அறையில், 'பாத் டப்' போன்ற ஒன்றில் வண்ணநிறப் பந்துகள் நிரப்பப்பட்டுள்ளன. அழுகை அறைக்கு வருபவர் அதன்மீது அமர்ந்து அருகில் உள்ள தொலைபேசியை எடுத்துத் தனக்குப் பிடித்தவர்களிடம் மனம்விட்டு பேசலாம்.

'மனநலம் சார்ந்த பிரச்சனைகளை இவ்வாறு காட்சிப்படுத்துவது என்பது உண்மையில் அருமையான யோசனை. ஏராளமான நாடுகளில் அழுவது என்பது ஏதோ தவறான செயல் போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. அதனை முதலில் சரி செய்ய வேண்டும். மக்களின் மன நலனைப் பாதுகாக்க ஸ்பெயின் அரசு தனியாக நிதி ஒதுக்கீடு செய்தது போல மற்ற நாடுகளும் செய்தால் சிறப்பாக இருக்கும்' என்றெல்லாம் இணையப் பயனர்கள் கருத்துரை வழ்ங்கியிருக்கிறார்கள்.

==========================================================================

நன்றி:

https://tamilmint.com/spain-government-introduces-crying-room-to-get-rid-of-frustration-and-depression/     -18/10/2021035

தமிழ் இணைய ஊடகங்கள் உட்பட, ஏராள ஊடகங்கள் இச்செய்தியைப் பதிவு செய்துள்ளன.