வியாழன், 28 அக்டோபர், 2021

விபரீதப் பாலுறவுத் தூண்டல்கள்!!


இயல்புக்கு மாறான “பாரபீலியா” என்னும் பாலுணர்வுக் குணாதிசயத்தை, “சேடிஸம்” என்பார்கள். இதற்குச் சற்றே எதிர்மறையானதொரு குணத்தை, அல்லது, மிதமிஞ்சிய ஆர்வத்தை 'மஸோசிஸம்'(Masochism) என்பார்கள்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியக் காலகட்டத்தில், ஆஸ்திரியா நாட்டின் மன்னர் குடும்பத்தில் பிறந்த ஒருவரின் பெயர், 'கவுன்ட் லெப் போல்டுவான் சாஸர் மேஸோ' என்பதாகும். மேஸோ, பிறந்தபோதே தாயை இழந்து விட்டதால் “ஹன்ஸ்கா” என்ற ஆயாவிடம்தான் வளர்ந்தார். தினமும் அவரைக் கதை சொல்லித் தூங்கவைப்பாள் இந்த ஆயா. இந்தக் கதைகள் அத்தனையும் திகில் கதைகள்!

மேஸோவின் தந்தை, கறாரான ஒரு போலீஸ் அதிகாரி. இவரும் தன் பங்குக்குப் போலீஸ் உத்தியோகத்தில் பெற்றிருந்த, பல கொடூரமான கதைகளை மகனிடம் சொல்வார். வளரும் பருவத்தில் பீதியூட்டுகிற இவை போன்ற கதைகளைக் கேட்டுக் கேட்டுக் காலப்போக்கில் பாரபீலியா['மஸோசிஸம்'] குணாதிசயம் கொண்டவராக மாறிப்போனார் மேஸோ. 

பின்னாளில் புகழ்பெற்ற எழுத்தாளராக இருந்தபோதும், சட்டத் துறையில் டாக்டர் பட்டம் பெற்றவராக ஆன பிறகும் இவருக்குப் பாலுறவு இன்பத்தை வித்தியாசமான முறையில் அனுபவிப்பதில் அதிக நாட் டம் இருந்தது. 

அடித்தல், உதைத்தல், நகங்களால் கீறுதல், பற்களால் கடித்தல் என்றெல்லாம் தன் மனைவியைச் செய்யத் தூண்டினார். இப்படிச் செய்தால்தான் இவருக்குப் பாலுணர்வு தலைதூக்குமாம்.

இது பிடிக்காமல் இவர் மனைவி ஓடிப் போய்விட, மீண்டும் அடுத்தடுத்து மூன்று பெண்களைத் திருமணம் செய்துகொண்டார் மேஸோ. அவர்களையும் இதே மாதிரி தன்னைத் துன்புறுத்தத் தூண்டினார். அவர்களும் மேஸோவின் கிறுக்குத்தனமான பாலுறவுச் செய்யல்பாட்டைச் சகித்துக்கொள்ள இயலாமல் ஓட்டம் பிடித்தார்கள். இதன் பிறகு திருமணம் புரியும் எண்ணத்தைக் கைவிட்டு, ஆசை நாயகிகள் மூலம் தன் பெருவிருப்பத்தை நிறவேற்றினார் இவர்.

1886ஆம் ஆண்டு “வீனஸ் இன்ஃபர்” என்றொரு புத்தகத்தை எழுதினார் மேஸோ. 

இந்தப் புத்தகத்தின் நாயகன் ஷவரின்; நாயகி வாண்டா. இந்தப் புத்தகம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காரணம்..... 

//தன்னைத் துன்புறுத்தச் சொல்லி வாண்டாவை நிர்ப்பந்திப்பான் ஷவரின். அவளும் அவன் விருப்பத்தை நிறைவேற்றினாள். பயந்து பின்வாங்காமல், அவனை அடி பின்னி எடுத்தாள்! 

இதுபோன்ற செயல்பாடுகளின்போது வாண்டாவைத் தோலாடை போன்ற ஒரு வகை உடையை அணிந்து கொள்ளச் சொல்லி, உரோமங்களால் ஆன துணியால் தன்னை அடிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவான் ஷவரின். 

இதன் மூலம் பாலுணர்ச்சியைப் பெறுவது வழக்கமானது.//

இது 'மேஸோ'வின் கதையில் வரும் சம்பவம்தான் என்றாலும் அந்நாட்களில் தனது சொந்த அனுபவத்தைத்தான் உருமாற்றி, இப்படி அவர் எழுதியிருக்கிறார் என்று சொல்லப்பட்டது. 

ஏனெனில், மேஸோவின் இம்சைகளுக்குப் பயந்து ஓடிய மனைவிகளின் குற்றச்சாட்டுகளும், இந்தப் புத்தகத்தில் வரும் சம்பவங்களும் ஒன்றாகவே இருந்ததுதான் காரணம்.  

இதுபோன்ற செக்ஸ் செயல்பாடுகளுக்கு மேஸோவின் பெயரையொட்டித்தான் 'மஸோசிஸம்' என்று பெயர் சூட்டப்பட்டதாகச் சொல்கிறார்கள்.

                                            *  *  *

இதனோடு தொடர்புடையதொரு பதிவு:

https://kadavulinkadavul.blogspot.com/2021/02/blog-post_16.html

============================================================================

http://tamilnews.cc/news/news/80702   -8 பிப்., 2016