இன்று[03.10.2021] பிற்பகல், 'மாலை முரசு' தொலைக்காட்சி மூலமும் இச்செய்தியை அறிய நேரிட்டது.
காலங்காலமாக, 'தெய்வங்கள்' என்று போற்றப்படும் பெண்கள் புறக்கணிக்கப்பட்டு ஒரு பெண் கடவுளுக்கு விழா எடுக்கும் அறியாமையை என்னென்று சொல்வது?
50க்கும் மேற்பட்ட ஆடுகளைக் கொன்று பிரியாணி சமைத்து உண்டு இன்புற்றிருக்கிறார்களே ஆண்கள், அவர்கள் உண்ட அந்தக் கறிப்பிரியாணி செரித்திருக்குமா?
யாரோ ஒரு/சில பெண் வெறுப்பாளர்கள் கட்டிவிட்டுச் சென்ற கதையை[இதற்கு முன்பும் சில ஊர்களில் இம்மாதிரியான விழாக்கள் நடைபெற்றுள்ளன] நம்பி, பிள்ளைகளைப் பெற்று வளர்த்து, ஆளாக்குவதற்காகத் தம் வாழ்வை அர்ப்பணிக்கிற அன்னையர் குலத்தை அவமதிக்கும் ஆடவர்களை, அறிஞர் உலகம் ஒருபோதும் மன்னிக்காது.
இதை 'விநோதத் திருவிழா' என்கிறது செய்தி ஊடகம். அல்ல; பெண்களின் விரோதிகள் நடத்திய திருவிழா இது.
நாளும் பகுத்தறிவு வளர்ச்சி பெற்றுவரும் நிலையில் இம்மாதிரி விழாக்களுக்கு அரசு உடனடியாகத் தடை விதித்தல் அவசரத் தேவையாகும்.
அரசு கண்டுகொள்ளாது எனின், மகளிர் அமைப்புகள் ஒருங்கிணைந்து, இவற்றிற்குத் தடை கேட்டு நீதி மன்றங்களை அணுகுதல் வேண்டும்.
தீர்வு கிடைப்பதில் தாமதம் நேருமாயின்.....
சிந்திக்கும் திறனும், சீர்திருத்தங்களில் நாட்டமும் கொண்ட அறிவுஜீவிப் பெண்கள், இது குறித்த விழிப்புணர்வைப் பிற பெண்களுக்கும் ஏற்படுத்துவதோடு, உரிய தருணத்தில் தொடர் போராட்டங்களையும் நடத்திட வேண்டும்.
செய்வார்களா?
====================================================================================