இம்மண்ணில் வாழும் அனைத்து உயிர்களும், ஒன்று முதல் ஐந்து வரையிலான அறிவை மட்டுமே பெற்றுள்ளன. மனிதனுக்கு மட்டுமே ஆறறிவு. கூடுதலாக ஒன்று வாய்த்துள்ளது. அதை, 'ஆறாவது அறிவு' என்கிறோம்.
இந்த ஆறாவது அறிவு இவனுக்கு வாய்த்தது எப்படி?
'பரிணாம வளர்ச்சி'யின் விளைவு' என்கிறது அறிவியல்[டார்வின் கொள்கை].
'எதற்கு இந்தப் பரிணாம கிரிணாம வளர்ச்சியெல்லாம்?' என்று சிந்திக்கக் கற்றவர்கள் கேட்டார்கள். நமக்கும் கேட்கத் தோன்றுகிறது.
நம் போன்ற சாமானியர்களுக்குக் காரணம் தெரியாது; விஞ்ஞானிகளுக்கும் தெரிந்திருக்கவில்லை.
இந்த 'எவருக்கும் தெரியாது' என்னும் நிகழ்வுநிலையைப் பயன்படுத்தி, "ஆறறிவு என்பது கடவுளால் தந்தருளப்பட்டது" என்றார்கள் கடவுள் நம்பிக்கையாளர்கள்.
"கருணைக் கடலான கடவுள் ஒருதலைப்பட்சமாக, ஏனைய உயிர்களைப் புறக்கணித்து மனிதனுக்கு மட்டும் ஏன் ஆறறிவைக் கொடுத்தார்?" என்று கடவுளை நம்பாதவர்கள் கேட்டார்கள்.
அக்கேள்விக்கான மிகச் சரியான பதிலை, கடவுளைக் கற்பித்தவர்கள் தந்ததில்லை; தரவும் இயலாது. "எல்லாம் அவன் செயல்" என்று பொத்தாம்பொதுவாகச் சொல்லிச் சமாளிக்க மட்டுமே முடியும்.
ஆறறிவு மனிதன், தன் வளமான வாழ்வுக்காகப் பிற உயிர்களை அழித்தொழிப்பதையும், கோயில்கள் எழுப்பி, விழாக்கள் நடத்திக் காலமெல்லாமல் கடவுளைத் துதிபாடிக்கொண்டிருப்பதையும் ஆராய்ந்து பார்க்கும்போது.....
"தன்னைப் புகழ்ந்து போற்றுவதற்கும், மனிதன் தன் வாழ்வை மேம்படுத்துவதற்கும்தான் கடவுள் இவனுக்கு ஆறறிவைக் கொடுத்தார்" என்று சொல்லத் தோன்றுகிறது; இப்படியும் ஒரு கடவுள் தேவையா?" என்று கேட்கவும் தோன்றுகிறது.
கடவுள் தேவையோ இல்லையோ, கேள்விகள் தேவை. கேள்விகள் இல்லாமல் அறிவு வளர்ச்சி என்பது இல்லை.
====================================================================================