ஞாயிறு, 14 நவம்பர், 2021

அவர் சுமப்பது கடவுள்களையல்ல, மனிதாபிமானத்தை!


#வடகிழக்குப் பருவ மழையின் காரணமாக, சென்னை உட்பட தமிழ்நாடின் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. இதில், சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறையில் சாய்ந்த மரங்களை அக்கல்லறையில் பணி செய்யும் ஊழியரான உதயகுமார் என்பவர் அப்புறப்படுத்தும் பணியில் இருந்தபோது, அங்கு அவர் மயங்கி விழுந்தார். இதுகுறித்தத் தகவல் டி.பி.சத்திர காவல் நிலையத்திற்குத் தெரியப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அக்காவல் நிலையத்தின் ஆய்வாளர் ராஜேஸ்வரி, அங்கு விரைந்து சென்று அவரைத் தன் தோளில் தூக்கிச் சுமந்து ஒரு ஆட்டோவில் ஏற்றி அங்கிருந்த இருவருடன் அவரை அனுப்பிவைத்தார்.

இந்நிலையில் வழக்கறிஞர் வே.பாலு, அந்த ஆய்வாளரின் செயலைப் பாராட்டி ஒரு கவிதை எழுதியுள்ளார். அந்தக் கவிதை பின்வருமாறு:

யாரம்மா நீ?

விழி பிதுங்கி,

நுரைதள்ளி,

மொத்தக்கண்ணீரும்

மழை நீரோடு கலக்க

ஒரே ஒரு செயல்..

கடமை கடந்து,

கருப்பை சுமப்பவள்

நீ .. என்பதை

மரணம் தொட்ட

மனிதனை

அன்னையாய் சுமந்த

உன் தோளுக்குள்

அத்தனை தீரமா?

இல்லை அம்மா,

மழை நீரையும்

மிஞ்சிய ஈரம்!!!#

மேற்கண்ட செய்தியும் பாராட்டுக் கவிதையும் 'நக்கீரன்' தளத்தில் வெளியானவை[https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/advocate-v-balu-written-poem-pt-chatram-inspector-rajeswari    Published on 12/11/2021 (15:24) | Edited on 12/11/2021 (16:28)]

ஆய்வாளரின் அருஞ்செயலைப் பாராட்டிக் கவிதை படைத்த வழக்கறிஞருக்கு நம் பாராட்டுகள். ஆயினும், கவிதைக்குச் சூட்டப்பட்ட தலைப்பு நம் உள்ளத்தை உறுத்துகிறது. தலைப்பு.....

‘இதோ, இந்த ராஜேஸ்வரி தோளில்தான் ஈசனும், யேசுவும், அல்லாவும்..’ 

கடமையுணர்வுடன் பணியில் ஈடுபட்டு மயங்கியவர் உதயகுமார். அவரைத் தோளில் சுமந்தவர் ஆய்வாளர் ராஜேஸ்வரி. இது மனிதாபிமானச் செயல். மனிதாபிமானத்தை ஆய்வாளர் தோளில் சுமப்பதாகத் தலைப்பிட்டிருந்தால் அது மிகவும் பொருத்தமாக இருந்திருக்கும். ஈசனையும் ஏசுவையும் அல்லாவையும் சுமப்பதாகத் தலைப்பிட்டிருப்பது உள்மனதை உறுத்துகிறதே.

கடவுள்கள் இருப்பது உண்மையானால்.....

தேவை ஏற்படும்போது, அவர்கள் தாங்களாகவே ஒருவரையொருவர் சுமந்துகொள்வார்கள்.

மனிதர்கள் சுமக்க வேண்டியது மனிதாபிமானத்தைத்தான்; கடவுள்களையல்ல!
==========================================================================