திங்கள், 15 நவம்பர், 2021

பதின்பருவப் பெண்களின் பலவீனங்கள்!


சிறுமி ஒருத்தியை[பத்து வயதுக்குள் என்று வைத்துக்கொள்ளுங்கள்] உறவினரான ஓர் ஆடவனோ,  நெருங்கிப் பழகிய அண்டை வீட்டுக்காரனோ தொட்டுத் தொட்டுப் பேசிவிட்டுத் தொடவே கூடாத அந்தரங்க உறுப்பை வருடுவதாகக் கற்பனை செய்யுங்கள்.

சிறுமியின் நிலை என்னவாக இருக்கும்?

".....இப்படியெல்லாம் யார் செய்தாலும் அனுமதிக்கக் கூடாது; அனுமதித்தால் உன் எதிர்காலம் பாழாகும்" என்றிப்படிப் பெற்றோரால் விழிப்புணர்வு ஊட்டப்படாத சிறுமியாக அவள் இருப்பாளேயானால், ஆடவனின் செயலால் ஏதோ ஒருவகையான சுகம் இருப்பதை உணர்வதோடு, எதிர்ப்புத் தெரிவிக்காமல் அவனின் கெட்ட நடவடிக்கையை அனுமதிக்கவும் செய்வாள்.

அவ்வாறு அனுமதிப்பது தவறு என்று அறிந்திருந்தாலும்கூட, அந்த ஆடவன் தன் குடும்பத்தாரால் மதிக்கத்தக்கவனாகவோ, தன்னால் பெரிதும் நட்புப் பாராட்டப்பட்டவனாகவோ இருந்தால், அவனின் அத்துமீறலிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, பெற்றோரிடம் நடந்த அசம்பாவிதத்தைச் சொல்லாமல் மறைத்துவிடுவதும் உண்டு.

வன்புணர்வு செய்யப்பட்டு, உடலளவில் பாதிப்பு நிகழ்ந்தால் மட்டுமே அந்த அனுபவத்தைப் பெற்றோரிடம் அவள் பகிர்வாள்.

வயதுக்குவந்த பதின்பருவப் பெண்களும்கூட, தமக்கு ஏற்படும் இம்மாதிரியான அனுபவங்களைப் பெற்றோரிடம் சொல்லாமல் மறைத்துவிடுவதும் நடக்கிறது. இவ்வாறு மறைப்பதற்கும் மேற்கண்ட உறவு நிலைகளே காரணங்களாக அமைகின்றன.

இவை மட்டுமல்லாமல், தொடக்கத்தில் வெற்று உரையாடலாக இருந்து, படிப்படியாக ஆபாசமாக மாறும் பேச்சு, தொட்டுவிடாமல் சற்று எட்ட இருந்தே செய்யும் உடலுறுப்புச் சேட்டைகள் என்றிவை போன்ற, ஆடவரின் அடாவடித்தனங்களின் விளைவாக, பதின்பருவப் பெண்கள் பெரும் மனப்போராட்டங்களுக்கு உள்ளாகித் தவிக்கிறார்கள் என்பது மறுக்க இயலாத உண்மை.

கோவை மாணவி பொன்தாரணி(17) இவ்வகையான மனப்போராட்டத்திற்கு உள்ளானதே அவளின் விரும்பத்தகாத 'முடிவு'க்குக் காரணம் என்று எண்ணத் தோன்றுகிறது.

அந்தச் சிறுமியின் தற்கொலை குறித்து, அடுத்தடுத்துக் காணொலிகள் வெளியாகிக்கொண்டிருக்கும் சூழலில்.....

அவற்றிற்கான மிகப் பெரும்பாலான கருத்துரையாளர்கள், சம்பந்தப்பட்ட ஆசிரியன் கடுமையாகத் தண்டிக்கப்படுதல் வேண்டும் என்று வலியுறுத்திவரும் நிலையில், ஒரு சிலர்[பின்னூட்டக்காரர்கள்] 'பாதிக்கப்பட்ட மாணவி தன் பெற்றோரிடம் நடந்தவற்றை மறைத்தது ஏன்? நெருங்கத் தகாதவன் என்று தெரிந்திருந்தும் ஆசிரியனுடன் ஆடியோவில் உரையாடியது ஏன்?' என்றெல்லாம் கேள்விகள் எழுப்பி,  அச்சிறுமியும் தவறு செய்திருக்கிறாள் என்பதாகக் கருத்துத் தெரிவித்துள்ளார்கள். 

எந்தவொரு பதின்பருவப் பெண்ணும் பாலுறவு விசயத்தில் ஆணுடன் இணங்கிப்போவதில்லை; ஆடவன் அவளை இணங்க வைக்கிறான்' என்பதே அத்தகையவர்களுக்கு நாம் அளிக்கும் மறுப்புரை.

மன முதிர்ச்சி இல்லாத சிறுமிகளை மருவிச் சுகம் காண முயலும் காமுகர்கள் மிகக் கடுமையாகத் தண்டிக்கப்படுதல் வேண்டும் என்பது நம் விருப்ப உரையாகும்.

==========================================================================