அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

செவ்வாய், 16 நவம்பர், 2021

செத்துப் பிழைத்த[?]வர்களின் அந்திமக்கால அனுபவங்கள்!!!

'டாக்டர் ரேமண்ட் மூடி 1975ஆம் ஆண்டு 'வாழ்க்கைக்குப்பின் வாழ்க்கை' என்று ஒரு புத்தகம் எழுதினார். இவர் இந்த நூலுக்காக, செத்துப் பிழைத்த 150 தனி நபர்களின் அனுபவங்களைப் பயன்படுத்தினார். 

நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசித்துவந்த அந்த மனிதர்களின் அனுபவங்களில் முக்கியமாக ஒன்பது அம்சங்கள் ஒன்றுபட்டதை அவர் தனது நூலில் வியப்புடன் கூறுகின்றார்' என்னும் குறிப்புடனான இந்தக் கட்டுரை 'தினபூமி'யில் வெளியானது.

அந்த 09 அம்சங்கள்:

1) ஒரு வித்தியாசமான ரீங்கார ஒலியினைக் கேட்டு உணர்தல்: ஐம்புலன்களும் அடங்க ஆரம்பிக்கும் அந்தத் தருணத்தில் மரணம் நெருங்குகின்றது என்பதை உணரும் அந்த நேரத்தில் பலரும் ஒரு வித்தியாசமான ரீங்கார ஒலியைக் கேட்டிருக்கின்றார்கள். அது இனிமையாக அமையாமல் ஒருவித அசாதாரண ஒலியாக இருந்தது எனவும்  குறிப்பிடுகின்றார்கள். இது இன்னமும் ஒரு புதிராகவே தொடர்கின்றது.

2) உடலை விட்டு வெளியேறிய அனுபவம்: கிட்டத்தட்ட அனைவருமே தங்கள் உடலைப் பிரிந்து அந்தரத்தில் மிதப்பது போல உணர்ந்ததாகத் தெரிவித்தார்கள்[நடப்பது போலவோ ஓடுவது போலவோ உணரவில்லையா?]. மருத்துவர்கள் சூழ நின்ற தங்களது உடலைத்  தெளிவாகப் பார்க்க முடிந்ததாகத் தெரிவித்தார்கள்.

3)அமைதியும் வலியின்மையும்: மரண சமயத்தில் எத்தனை வலி இருந்தாலும் உடலை விட்டு ஆவி பிரியும் அந்தக் கணத்தில் உருவான வலி மறைந்துவிடுவதோடு[ஆசை... பேராசை!] பேரமைதி கிடைப்பதாகவும்  தெரிவித்தனர்.

4) சுரங்க வழிப்பாதை அனுபவம்: பலரும் கடுமையான இருட்டில் ஒர் சுரங்க வழிப்பாதை வழியாக மின்னல் வேகத்தில் இழுக்கப்பட்டதாகவும் அந்தச் சுரங்க வழிப்பாதையின் முடிவில் பளிச்சிடும் பொன்னிற அல்லது வெள்ளை நிற ஒளியை நோக்கிச் சென்றதாகவும் குறிப்பிட்டார்கள்.

5)பூமியைப் பார்த்தல்: சிலர் சுரங்க வழிப்பாதையில் இழுத்துச் செல்லப்படாமல் மேல் நோக்கிச் சொர்க்கம்[நரகமாகவும் இருக்கலாமே!] போன்ற இடத்திற்கு வேகமாகப் போவதாய் உணர்ந்ததாகவும், பூமியை விட்டும் வெளியே போய், பூமியானது அண்ட சராசரத்தில் ஜொலிப்பதைப் பார்த்ததாகவும் சொன்னார்கள். 

6)ஒளி மனிதர்களைக் காணுதல்: சுரங்க வழிப்பாதையின் இறுதியில், பூமியை விட்டும் விலகிப்போன சொர்க்க பூமியில்  ஒளி வெள்ளத்தில் ஜொலிக்கும் மனிதர்களைக் கண்டதாகச் சொல்லியிருக்கின்றனர். சில சமயங்களில் முன்பே இறந்துபோயிருந்த ஒரு சில நண்பர்களையும்[நண்பிகள் இல்லையா?!], நெருங்கிய உறவினர்களையும் அங்கு பார்த்ததாகச் சிலர் கூறியிருக்கின்றனர்.

7) அருட் பெரும் ஜோதியைக் காணுதல்: ஒளி படைத்த மனிதர்களைக் கண்ட பிறகு வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத பிரகாசமான தெய்வீகப் பிறவியைப்[அது தெய்வீகப் பிறவி என்பதை எப்படி அறிந்தார்கள்? இதற்கு முன்பு அதைப் பார்த்தவர்கள் உண்டா?] பலரும் கூறியிருக்கின்றனர். இருந்தும் அப்பேரொளி கண்களைக் கூசும் படியானதாக இருக்கவில்லையாம் (புறக்கண்ணால் பார்க்கும்போது மட்டுமே கண்கள் கூசும். அந்தக் கண்களின்[?] உதவியின்றி அந்த ஒளியைப் பார்த்ததால் கூசுவதற்கு வாய்ப்பில்லை என்பது பெரும்பாலானோர் அறிவுக்கு எட்டவில்லை என்கிறார் இன்னொரு ஆராய்ச்சியாளர்.

8)வாழ்ந்த வாழ்க்கையைப் பரிசீலித்தல்: அந்தத் தெய்வீகச் சக்திக்கு முன்னால் தங்கள் வாழ்க்கை பரிசீலிக்கப்பட்டதாகவும் வாழ்க்கையின் மிக முக்கியக் கட்டங்கள் திரும்பவும் நடப்பதாக ஒரு சாட்சி போல், திரையில் காணக் கூடியதாகவும் அமைந்ததாம்.

9)வாழ்க்கை இனியும் முடிந்து விடவில்லை என தெரிவிக்கப்படல்: அந்த தெய்வீகப் பேரொளியுள்ள தேவதையோ, தெய்வமோ வாழ்க்கை இன்னமும் முடிந்துவிடவில்லை[இது உண்மை எனில் மனிதர்கள் கொடுத்துவைத்தவர்கள்] என்று தெரிவித்தது போல் கிட்டத்தட்ட அனைவரும் கூறியிருக்கின்றனர். திரும்பிப் போகும்படிக் கூறப்பட்டதாகச் சிலரும், தாங்கள் செய்ய வேண்டிய முக்கியக் காரியங்கள் இனியும் உள்ளன என்று தாங்கள் அந்த நேரத்தில் தீவிரமாக எண்ணியதாகச் சிலரும் தெரிவித்திருக்கின்றனர்.

                                *  *  *

மூடியால் நேர்காணல் செய்யப்பட்டவர்கள் சொல்வதையெல்லாம் முழுமையாக நம்பலாமா?

நம்பலாம், உண்மையிலேயே செத்துப்போன ஒருவர் பிழைத்தெழ முடியும் என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படும்போது.

ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 150 பேரும் உண்மையில் செத்துப்போனவர்கள் அல்ல; செத்துப்போனதாக நம்பப்படுபவர்கள்.

எனவே, டாக்டர் ரேமண்ட் மூடி தந்துள்ள தகவல்கள் முற்றிலும் ஆதாரமற்றவை. எனினும், மரணத்திற்குப் பின்னரான நிலை குறித்து ஆராய்ந்து அறியும் மூடியின் ஆர்வமும், கடின உழைப்பும் பாராட்டுக்குரியவை ஆகும்.

முக்கியக் குறிப்பு:

நம்மவர்களை மிஞ்சும் 'புருடா மன்னர்கள்' அயல் நாடுகளில் இருக்கிறார்கள் என்பதை இந்த ஆய்வுக் கட்டுரை உறுதிப்படுத்துகிறது!

========================================================================== http://www.thinaboomi.com/2017/05/02/what-happens-after-death-scientific-information-71016.html