ஒருவன் மற்றொருவனையோ, அவன் சார்ந்த சமுதாயத்தையோ இழிவுபடுத்தித் திரைப்படம் எடுத்தாலோ, புதினம், சிறுகதை, கவிதை, கட்டுரை என்று வேறு வேறு படைப்புகளின் மூலம் அதைச் செய்தாலோ பாதிக்கப்பட்டவன் செய்ய வேண்டியது என்ன?
அதே ஊடகங்களின் மூலம் அவனை இழிவுபடுத்தி மனநிறைவு பெறலாம். அது போதாது என்றால்.....
சக மனிதர்களைக் கூட்டிவைத்துப் பஞ்சாயத்துப் பேசி, தன்னை இழிவுபடுத்தியவனை மன்னிப்புக் கேட்க வைக்கலாம்; ஏற்ற வகையில் தண்டனையும் வழங்கலாம்.
காவல்துறையிடம் புகார் செய்வது, நீதி மன்றத்தில் வழக்குத் தொடுப்பது[அதற்கான முயற்சியில் சம்பந்தப்பட்டவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பது பின்னர் வந்த செய்தி] என்று பிற வழிகளையும் கையாளலாம். மாறாக.....
இவ்வழிமுறைகளை முற்றிலுமாய்த் தவிர்த்துவிட்டு, 'அவனை எட்டி உதைத்தால் ஒரு லட்சம் ரூபாய் வழங்குவேன்" என்று பகிரங்கமாக அறிவித்து இரு சாராருக்கிடையே வன்முறையைத் தூண்டுவது கண்டிக்கத்தக்கது; கடுமையாகத் தண்டிக்கத்தக்கதும்கூட.
மயிலாடுதுறையிலோ மானாடுதுறையிலோ, மிகச் சில நாட்கள் முன்பு இப்படி ஒருவர் பேசியிருக்கிறார்.
தன்னைச் சார்ந்தவர்கள் பெரும்பான்மையினராக இருக்கிறார்கள் என்னும் மமதையில் அரசின் சட்டதிட்டங்களை மதிக்காமலும், சமுதாயக் கட்டுப்பாடுகளைப் பொருட்படுத்தாமலும் நடந்துகொண்டிருக்கும் இவர் மீது அரசு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.
"நம் சமுதாயத்தவரை இழிவுபடுத்திய அவனை அடித்து உதைத்துச் சித்திரவதை செய்து கொல்லுங்கள்" என்று அடுத்து அவர் அறிவிப்பாரேயானால், அப்போதுதான் அரசு நடவடிக்கை எடுக்குமா? அல்லது.....
நடவடிக்கை எடுக்காமல், 'இதெல்லாம் வெறும் வாய்ப்பேச்சுதான்; குற்றச் செயலே அல்ல' என்று கருதி வேடிக்கை பார்க்குமா?
இது விசயத்தில் அரசின் நிலைப்பாடு என்ன என்று அறிய விரும்புவது நாம் மட்டுமல்ல, நம்மைப் போன்று அரசின் சட்டதிட்டங்களையும், சமூகக் கட்டுப்பாடுகளையும் மதித்து வாழ்பவர்களும்தான்.
* * *
'ஜெய் பீம்' திரைப்படத்துக்கு எதிராக வன்னியர் சங்கங்கள் நடத்திவரும் போராட்டம் குறித்து, பேராசிரியர் சுந்தரவல்லி அவர்கள் 'நக்கீரன்' தளத்துக்கு அளித்த பேட்டியின் 'காணொலி" கீழே[அண்மையில் வெளியானது]:
==========================================================================
முக்கியக் குறிப்பு:
தலைப்பில் உள்ள, 'அதை' என்னும் சொல் 'தலை'யைக் குறிக்கிறது! ஹி... ஹி... ஹி!!!