அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

சனி, 20 நவம்பர், 2021

வன்னியர் சமுதாயத் தலைவர்களின் கனிவான கவனத்திற்கு.....


தமிழ்ப் பற்றும் தமிழின உணர்வும் கொண்ட வன்னியர் குலத் தலைவர்களே, வணக்கம்.

'ஜெய் பீம்' திரைப்படம் உங்கள் இனத்தவரை இழிவுபடுத்தியிருக்கிறது என்று நீங்கள் மனப்பூர்வமாக நம்பினால், அந்த இழிவைப் போக்குவதற்கான வழிவகைகளை ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வது உங்களுக்குள்ள உரிமை.

'இந்தப் படத்திற்கு எந்தவிதமான விருதுகளையோ, பாராட்டுச் சான்றுகளையோ வழங்குதல் கூடாது' என்று நடுவணரசுக்கும், மாநில அரசுக்கும் கோரிக்கை வைத்துள்ளீர்கள். இது சரியான நடவடிக்கையே.

உங்களின் இனத்தைச் சார்ந்த, சேலம் மாவட்டச் சட்டமன்ற உறுப்பினர், மாவட்டத்திலுள்ள திரையரங்க உரிமையாளர்களிடம், 'சூர்யா& குடும்பத்தினரின் திரைப்படங்களை வெளியிட வேண்டாம்' என்று கேட்டுக்கொண்டுள்ளார்[எச்சரிக்கை செய்யவில்லை என்று நினைக்கிறேன்]. இதுவும் ஏற்கத்தக்கதே.

இவரைப் போலவே மற்ற மாவட்டத் தலைவர்களும் வேண்டுகோள்கள் வைத்தால் அவையும் ஏற்கத்தக்கனவே.

திரையரங்க உரிமையாளர்கள் உங்களின் வேண்டுகோளைப் புறக்கணித்தால், அரங்குகளுக்கு முன்னால் உங்கள் இனத்தவர் திரண்டு மறியலில் ஈடுபடுவார்களெனின் அதிலும் நியாயம் இருப்பதாகவே  கருத இடமுள்ளது.

இம்மாதிரியான போராட்டங்களில் ஈடுபடும்போது காவல்துறை உங்கள் மீது நடவடிக்கை எடுக்கும்; கைது செய்து சிறையிலடைக்கும். சோர்ந்து இருந்துவிடாமல் தினம் தினம் மறியலில் ஈடுபடுவீர்களேயானால், இதற்குத் தீர்வு காணும் முயற்சிகளை அரசு மேற்கொள்ளக்கூடும்.

அதற்கு முன்னதாக, திரையரங்குகளின் உரிமையாளர்களே, 'ஜெய் பீம்' படத்தைத் திரையிடும் முயற்சியை கைவிட்டுவிடவும் வாய்ப்புள்ளது.

இவையனைத்திற்கும் மேலாக, 'இந்தப் படத்தை எவரும் பார்க்கக் கூடாது' என்று நீங்கள் கட்டளையிட்டால், வன்னியர் இன மக்களில் பெரும்பாலோர்[100% ஆகவும் இருக்கலாம்] படம் பார்ப்பதைத் தவிர்ப்பார்கள்.

பிற சமூக மக்களிடமும் கோரிக்கை வைத்தீர்களேயானால், அதில் நியாயம் இருப்பதாக அவர்கள் நம்பினால், நிச்சயமாக அவர்களும் 'ஜெய் பீம்' பார்ப்பதைத் தவிர்ப்பார்கள்.

எதிர்பார்க்கும் பலன் கிடைக்கவில்லையாயின், ஊர் தோறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் நீங்கள் ஈடுபடலாம்.

மேற்கண்ட நடவடிக்கைகளால், ஜெய் பீம்  திரையிடப்படுவதும், வருமானம் ஈட்டுவதும் பெருமளவில் பாதிக்கப்படும் என்பது உறுதி.

உண்மை இதுவாக இருக்கையில்.....

உங்கள் இனத் தலைவர்களில் கணிசமானோர்.....

'சூர்யாவை நாடெங்கிலும் நடமாட விடமாட்டோம்' 

'எட்டி உதைத்தால் லட்சம் ரூபாய் பரிசு தருவோம்'

"போலீசாரால் சூர்யாவைக் காப்பாற்ற முடியாது"-காடுவெட்டி குருவின் மகன் எச்சரிக்கை(இது சற்று முன்னரான செய்தி).

என்றெல்லாம் ஆவேசக் குரல் எழுப்பியிருக்கிறார்கள்; அசிங்கமான வார்த்தைகளால் சாடியிருக்கிறார்கள்.

இம்மாதிரியான மிரட்டல்களை உங்கள் இனத்தின் மதிக்கத்தக்க மாபெரும் தலைவர்களான மருத்துவர் இராமதாஸ் அவர்களோ, டாக்டர் அன்புமணியோ கண்டித்ததாகத் தெரியவில்லை.

இம்மாதிரியான ஆவேசப் பேச்சுகளும், அசிங்கமான சாடல்களும் ஏற்கனவே அறவழிப் போராட்டங்கள் மூலம் நீங்கள் பெற்றிருக்கும் அனுகூலங்களை வெகுவாகப் பாதிக்கும் என்பதையும், மக்களின் அமைதியான வாழ்க்கைக்குப் பங்கம் விளைவிக்கும் என்பதையும் உணரத் தவறிவிட்டீர்கள்.

உங்களின் இம்மாதிரியான போக்கு தொடருமேயானால், உங்களின் இனம்[சமுதாயம் எனினும் சரியே] பிற சமுதாய மக்களால் முற்றிலுமாய்ப் புறக்கணிக்கப்பட்டுத் தனிமைப்படுத்தப்படும் என்பதையும், இத்தனைக் காலமாகத் தமிழ் மக்களுக்கு நீங்கள் அரும்பணி ஆற்றிப் பெற்ற புகழுக்குப் பெருமளவில் ஊறு நேரும் என்பதையும் அன்புகொண்டு உணர்ந்திட முயற்சி செய்யுங்கள்.

எது எவ்வாறாயினும், உங்களின் அறவழிப் போராட்டங்கள் மாபெரும் வெற்றியை ஈட்டிட என் மனப்பூர்வ வாழ்த்துகள்.

நன்றி! வணக்கம்!!

                                      *  *  *

'ஜெய் பீம்' திரைப்படத்துக்கு எதிராக வன்னியர் சங்கங்கள் நடத்திவரும் போராட்டம் குறித்து, பேராசிரியர் சுந்தரவல்லி அவர்கள் 'நக்கீரன்' தளத்துக்கு அளித்த பேட்டியின் 'காணொலி" கீழே[அண்மையில் வெளியானது]:

https://youtu.be/WezqaSi1e4U

==========================================================================