ஞாயிறு, 21 நவம்பர், 2021

இது தமிழ்நாடா, வன்னியர் நாடா?!?!


'ஜெய் பீம்' திரைப்படம் உண்மையில் வன்னியர் இனத்தை இழிவுபடுத்தியிருந்தால், அறவழிப் போராட்டங்கள் மூலம் அதைத் தடை செய்துவிட முடியும்.

அக்கினிக் கலசக் காலண்டர் இடம்பெற்றது தவறு என்றார்கள். அது படத்திலிருந்து நீக்கப்பட்டுவிட்டது. 'குருமூர்த்தி என்னும் வில்லன் பாத்திரம், தங்களின் ஜாதியைச் சேர்ந்த 'காடுவெட்டி' குருவை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டது; மன்னிப்புக் கேட்பதோடு அவர் தொடர்பான காட்சிகளையும் நீக்க வேண்டும்' என்கிறார்கள்.

காடுவெட்டி குரு மிகவும் நல்லவராம்; மாவீரனாம். இருக்கட்டும். மகிழ்ச்சி!

அந்த நல்லவருக்குரிய இயல்பான உருவ அமைப்பு, வாழ்விடம் போன்றவற்றின் பின்னணியில் அவரைப் படத்தில் நடமாடவிட்டு, பின்னர் அவரை வில்லனாக உருவகப்படுத்தியிருந்தால் வன்னியர் சங்கங்களின் குற்றச்சாட்டில் நியாயம் இருப்பதாக நம்பலாம்.

காடுவெட்டி குரு முழுக்க முழுக்க நல்லவர். 'ஜெய் பீம்' குரு முழுக்க முழுக்கக் கெட்டவர்[வில்லன்].

எந்த அடிப்படையில், இறந்துவிட்ட அந்தக் குருவும் படத்தில் வருகிற வில்லன் குருவும் ஒருவர்தான் என்று சாதிக்கிறார்கள்? 'குரு' என்னும் பெயருக்குக் 'காப்பிரைட்' உரிமையை இவர்கள் பெற்றிருக்கிறார்களா என்ன? 

காடுவெட்டி குரு நல்லவர் என்பதில் இவர்களுக்கே நம்பிக்கை இல்லையா?!

இவர்கள் பெரும்பான்மையாக வாழும் ஊர்கள் மட்டுமல்லாமல், மிகச் சிறுபான்மையராக வாழும் ஊர்களில்கூட, சாலைச் சந்திப்புகளிலும் தெருக்களிலும் ஜாதிக்கொடி நட்டும், தலைவர்களின் படத்துடன் பெயர் பொறித்தும் தங்களைப் பெரும்பான்மையினராகக் காட்டிக்கொள்வது இவர்களின் வழக்கம்.

இது தொடர் நிகழ்வாக இருக்கும்போது, இவர்களின் கொடியோ தலைவர்களின் படங்களோ இடம்பெறாமல் திரைப்படப் படப்பிடிப்பை நடத்துவது எப்படிச் சாத்தியமாகும்? சிந்தித்தார்களா?

இம்மாதிரியான நடவடிக்கைகளைக்கூட அலட்சியப்படுத்திவிடலாம். ஆனால்.....

ஏற்கனவே ஒரு நபர் 'சூர்யாவை எட்டி உதைத்தால் லட்சம் ரூபாய் பரிசளிப்பேன்' என்று அடாவடித்தனமாகப் பேசிய நிலையில், காடுவெட்டி குருமூர்த்தியின் மகன், 'துப்பாக்கிப் போலீஸ் காவலுக்கிருந்தாலும் சூர்யாவைக் காப்பாற்ற முடியாது" என்று பேசியிருக்கிறார்.

'பொதுவெளியில் நடமாட அனுமதிக்க மாட்டோம்' என்று வன்னிய சங்கத்தவர் சிலர் எச்சரித்த நிலையில், யாரோ ஒரு படையாச்சியாம், 'சூர்யா வீட்டில் காவலுக்கிருக்கும் போலீசில் ஒருவர் வன்னியராக இருந்தால்.....' என்று கேள்வி எழுப்பி, 'இருந்தால் சூர்யாவை அவர் சுட்டுத்தள்ளுவார்' என்று கொலை வெறியைத் தூண்டும் விதமாகப் பேசியிருக்கிறார்.

ஊடகங்களில் சூர்யாவை ஆபாசமாகத் திட்டி அவர் மீதான தங்களின் தாக்குதல் வெறியைத் தணித்துக்கொண்டிருக்கிறார்கள் வன்னிய சங்கத்தவர்கள்.

'லட்சம் பரிசு' என்று அறிவித்தவர் மீது மட்டும் காவல்துறை வழக்குப்பதிவு செய்திருக்கிறது. மேற்கொண்டு நடவடிக்கை ஏதுமில்லை.

சூர்யாவைத் தாக்கத் தூண்டும் இவர்களின் அப்பட்டமானதும் மிகவும் ஆபத்தானதுமான பேச்சுகளைக் கேட்டும் கேட்காதது போல மௌனம் சுமந்து நிற்கிறது தமிழ்நாடு அரசு. இந்நிலையில், நம் மனதில் தோன்றும் ஒரு கேள்வி.....

"இது தமிழ்நாடா, வன்னியர் நாடா?!?!" 

                                               *  *  *

'ஜெய் பீம்' திரைப்படத்துக்கு எதிராக வன்னியர் சங்கங்கள் நடத்திவரும் போராட்டம் குறித்து, பேராசிரியர் சுந்தரவல்லி அவர்கள் 'நக்கீரன்' தளத்துக்கு அளித்த பேட்டியின் 'காணொலி" கீழே[அண்மையில் வெளியானது]:

https://youtu.be/WezqaSi1e4U

==========================================================================