வியாழன், 4 நவம்பர், 2021

தீபாவளி... வலி!... வழி?


தீபாவளி வருவதற்குச் சில நாட்கள் முன்னதாகவே அது சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சினையும் தவறாமல் வந்து எங்கள் வீட்டுக் கதவைத் தட்ட ஆரம்பித்துவிடும்.

அது என்ன பிரச்சினை என்பதை என்னையும் என் இல்லக்கிழத்தியைப் பற்றியும் அறிந்தவர்கள் மிக எளிதாக யூகித்துவிடுவார்கள்.

"நரகாசுரன்' வதை பற்றிய கதை 100% கற்பனையில் தோன்றியது. அதை வைத்து உருவாக்கப்பட்ட இந்தத் தீபாவளியைக் கொண்டாடுவது முட்டாள்தனம்" என்று வழக்கம்போல நான் சொன்னால், அடுத்த நொடியே, "முட்டாள்தனமோ மூடத்தனமோ காலங்காலமா எல்லாரும் கொண்டாடுறாங்க. அதுல ஒரு சந்தோசம். அந்தச் சந்தோசம் தேவையில்லைன்னு சொல்ல வர்றீங்க. அப்புறம் எதுக்கு அதைப் பத்திப் பேசணும்?" என்று என் மனைவி முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு  நகர்ந்துவிடுவது வழக்கமான ஒன்றுதான்.

அவள் தூண்டிவிடுவாளோ என்னவோ, என் மகன்களும் பேரப்புள்ளைகளும்கூட முகம் கொடுத்துப் பேசமாட்டார்கள். இந்தப் புறக்கணிப்பைச் சகித்துக்கொள்ள முடியாமல், தீபாவளிக்கு இரண்டு நாள் முன்பே அதைக் கொண்டாடுவதற்கு நான் அனுமதி வழங்கிவிடுவேன்; கூடவே, "இவர் பெத்த பெரிய பகுத்தறிவுவாதியாம்; ஊருக்கெல்லாம் உபதேசம் பண்ணுவாராம். இவர் வீட்டுக்கு மட்டும் விதிவிலக்காம்" என்று அக்கம்பக்கத்தார் வாரியிறைக்கும் வசுவுகளைக் கண்டும் காணாமலும் இருந்துவிடுவதும் எனக்குப் பழக்கமாகிவிட்ட ஒன்றுதான்.

கொஞ்சம் நாட்களாக மிகத் தீவிரமாகச் சிந்தித்ததில், இந்த இக்கட்டிலிருந்து விடுபடுவதற்கான ஒரு வழி தென்பட்டது.

'தீபாவளிக்கு முதல் நாளே பெண்டாட்டி பிள்ளைகளையும் பேரக் குழ்ந்தைளையும் அழைத்துக்கொண்டு சுற்றுலா செல்வது' என்பதே அந்த வழி.

"சுற்றுலாவில் கிடைக்கிற ரொம்பப் பெரிய சந்தோசம், பத்தோடு பதினொன்னா வீட்டொடு இருந்து பட்டாசு வெடிக்கிறதால கிடக்கிற சந்தோசத்தை அற்பமானதா ஆக்கிடும். இந்தத் தீபாவளிக்குக் கொடைக்கானல் போறோம்" என்று சொன்னதும் குடும்ப உறுப்பினர்கள் எல்லோருமே சந்தோசப்பட்டார்கள்; சந்தோசத்தில் மிதந்தார்கள் என்றே சொல்லலாம்.

இனிப்புக்கும் பலகாரங்களுக்கு மட்டும் மனைவி ஏற்பாடு செய்தாள். பட்டாசு வாங்கும் எண்ணம் அவர்களுக்கு இருந்ததாகத் தெரியவில்லை.

கொடைக்கானல் சென்று, மிகவும் ரசிக்கத்தக்க இடங்கள் சிலவற்றைச் சுற்றிப் பார்த்துவிட்டு, இரவில் ஒரு விடுதியில் தங்கினோம்.

பகலில் சிறிது நேரமாவது உறங்கிப் பழக்கப்பட்ட நான், அதற்கான வாய்ப்பு அன்று இல்லாததால் நன்றாகத் தூங்கி, விடிந்து சிறிது நேரம் கழித்துத்தான் கண் விழித்தேன். அறையில் அப்போது நான் மட்டுமே இருந்தேன்.

"எல்லாரும் எங்கே போனாங்க?" -முணுமுணுத்துக்கொண்டே சன்னல் வழியாக  விடுதியின் முகப்பு வாசலை நோக்கினேன்.

தந்தை தாய்மார்களின் மேற்பார்வையில் என் பேரப்பிள்ளைகள் வெகு உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் பட்டாசு வெடித்துக்கொண்டிருந்தார்கள். 

"சுற்றுலாவில் கிடைக்கிற ரொம்பப் பெரிய சந்தோசம் பட்டாசு வெடிக்கிறதால கிடக்கிற சந்தோசத்தை அற்பமானதா ஆக்கிடும்" என்று ஒரு வாரம் முன்பு அவர்களிடம் நான் சொன்ன அந்த வாசகம் நினைவுக்கு வர.....

ஹி... ஹி... ஹி!!!

==========================================================================