1879, மார்ச் 14ஆம் தேதி பிறந்த இவர், 1955 ஏப்ரல் 18இல் உலகில் இருந்து விடைபெற்றார்; ஸ்டீஃபன் ஹாக்கிங்கைப் போலவே, 76 வயதில் மறைந்தார்.
அறிவியல் துறையில் மாபெரும் சாதனை நிகழ்த்திய இந்தப் பேரறிஞரின் குடும்ப வாழ்க்கை, "ஏன் இப்படி?" என்று கேள்வி எழுப்பி மனம் சோர்வடையக் காரணமாக இருந்துள்ளது.
சொல்லப்போனால், 'வாழ்நாளெல்லாம் இவரின் குடும்ப வாழ்க்கை முற்றுப்பெறாத போராட்டம் நிறைந்ததாகவே இருந்துள்ளது' என்கிறார் 'வால்டர் இசாக்சன்' என்பவர்[2012ஆம் ஆண்டில் இவர் எழுதிய, ஐன்ஸ்டைன்: அவரது வாழ்க்கை மற்றும் பிரபஞ்சம் (Einstein: His Life and the Universe) என்ற புத்தகத்தில் இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்].
விஞ்ஞானியான 'மிலேவா மாரிக்' உடன் காதல் மணம் புரிந்தார் ஐன்ஸ்டைன். திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாகக் கடுமையான அம்சங்களைக் உள்ளடக்கிய கோரிக்கைப் பட்டியலைக் கொடுத்து, அதைக் கடைப்பிடிக்கவேண்டும் என்று மனைவியிடம் சொன்னதோடு, அது விசயத்தில் மிகவும் கண்டிப்புடன் நடந்துகொண்டாராம்.
அவருடைய இந்தச் செயலை 'மிலேவா மாரிக்' விரும்பாததால்.....
பெர்லினில் இருந்து[ஐன்ஸ்டைன் வாழ்ந்த இடம்] வெளியேறிய மாரிக், ஜ்யூரிக் சென்று அங்கு தனது மகன்களுடன் வசித்ததோடு, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, 1919இல் விவாகரத்துக்காக விண்ணப்பித்து, ஐன்ஸ்டைனுடனான திருமணப் பந்தத்தில் இருந்து விலகவும் செய்தாராம்.
இத்தகவலையும், இதுபோல இன்னும் பலவற்றையும் தம் நூலில் குறிப்பிட்டிருக்கும் 'வால்டர் இசாக்சன்', அதில் தந்திருக்கும் கீழ்க்காணும் தகவல்கள் ஐன்ஸ்டைனைப் பெரிதும் மதித்துப் போற்றும் அன்பர்களைச் சற்றே அதிர்ச்சிக்கு உள்ளாக்குவதாக அமைந்துள்ளது:
#ஐன்ஸ்டைனுக்கு பல பெண் தோழிகள் இருந்தனர். மேலும் 1912 ஆம் ஆண்டு முதல் இல்ஸா என்ற பெண்ணுடன் ஐன்ஸ்டைனுக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது. அந்தச் சமயத்தில் மாரிக்குடன் அவர் வாழ்ந்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாரிக்கை விவாகரத்துச் செய்த பிறகு 1919இல் ஐன்ஸ்டைன் இல்ஸாவைத் திருமணம் செய்துகொண்டார். ஆனால் அதற்குப் பிறகு, தனது செயலாளரின் மகள் 'நியூமன்' உடன் நெருங்கிய உறவுகொண்டிருந்தார்.#
பொதுவாக, 'அறிவுஜீவிகளாக இருப்போரில் பலரும் 'பாலுணர்வு' விசயத்தில் பலவீனமானர்களாக இருப்பார்கள்' என்று சொல்லப்படுவதுண்டு. 'பிபிசி'இல் இடம்பெற்றிருந்த இந்தக் கட்டுரையை வாசித்ததில் ஐன்ஸ்டைனும் இந்தச் சொல் வழக்குக்கு விதிவிலக்கானவர் அல்ல என்று எண்ணத் தோன்றுகிறது.
முக்கியக் குறிப்பு:
பழைய என் பதிவு ஒன்றில், எனக்கு நானே 'அறிவுஜீவி'ப் பட்டம் சூட்டிக்கொண்டதாக நினைவு. அது 'ஒரு பிழையான தகவல்' என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். ஹி... ஹி... ஹி!!!
==========================================================================