வியாழன், 2 டிசம்பர், 2021

60ஐக் கடந்த 'கிழடு'களுக்கும் 'அது' பிடிக்காதது ஏன்?!

பாலுணர்வைத் தூண்டும் பதிவுகளை எழுதுவதில் எனக்கு ஆர்வம் அதிகம். அதே வேளையில், 'படைப்பு'த் தத்துவம் குறித்த அசத்தல்[?] பதிவுகள் படைப்பதில் அதீத ஆர்வம் கொண்டவன் நான் என்பதும் உண்மையே.

வருத்தப்படத் தூண்டும் ஓர் உண்மை என்னவென்றால், பாலியல் பதிவுகளுக்குக் கிடைக்கும் வரவேற்பு தத்துவப் பதிவுகளுக்கு இல்லை என்பதுதான்.

பாலியல் பதிவுகளுக்கான 'பார்வை' எண்ணிக்கை பல 100ஐக் கடக்கின்றன என்றால்[சில நேரங்களில் சில ஆயிரங்கள்], தத்துவப் பதிவுகள் வெறும் 100ஐப் பெறுவதற்குத் திக்கித் திணறுகின்றன.

எடுத்துக்காட்டாக.....

'கோயில்களில் ஆபாசச் சிற்பங்கள் வடிக்கப்பட்டதன் உள்நோக்கம் என்ன?' என்னும் பதிவுக்கான 'பார்வை' எண்ணிக்கை 9303! 'மனிதன் கடவுளின் செல்லப்பிள்ளையா?' என்னும் பதிவுக்கு வெறும் 31[உண்மையான புள்ளிவிவரம்]!!

ஏனிந்த மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடு? இளசுகளுக்குத்தான் வறட்டுப் படைப்புத் தத்துவமும் 'வழவழ' வாழ்க்கைத் தத்துவமும் பிடிக்காது என்றால், அறுபதைக் கடந்த கிழடுகளுக்கும் பிடிக்காமல் போனது ஏன் என்று புரியவில்லை.

எத்தனை சிந்தித்தும் புரியவே இல்லை.

மிகக் குறைவான 31 'பார்வை'யைப் பெற்ற அந்தப் பரிதாபத்துக்குரிய பதிவு[கடந்த ஆகஸ்டு மாதத்தில் வெளியானது].....

//னிதன் மட்டுமல்லாது அனைத்து உயிர்களையும் தோற்றுவித்தவர் கடவுளே என்று காலங்காலமாக ஆன்மிகவாதிகள் வலியுறுத்திவருவது நாம் அறிந்ததே.

படைப்பாளன் என்ற வகையில், தம்மால் படைக்கப்பட்ட உயிர்களைப் பாதுகாத்து, மகிழ்வுடன் வாழச் செய்வது கடவுளின் கடமை. ஆனால், உயிர்கள் விசயத்தில் நடந்தது என்ன?

உயிர்கள் கடவுளால் படைக்கப்பட்டு 100 கோடி ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில்.....

ஒவோர் உயிரும், பிற உயிர்களை வதை செய்து கொன்று, தனக்கு உணவாக்கிக்கொள்வதைத் தொடர்ந்து அனுமதித்திருக்கிறார் கடவுள்.

இயற்கைச் சீற்றங்களுக்கு உயிர்கள் பலியாகும் கொடூர நிகழ்வுகளைத் தடுத்து நிறுத்தவில்லை அவர்.

பருவ மாறுதல்களின்போது உண்ண உணவின்றிப் பல்வேறு உயிர்களும் பட்டினி கிடந்து மடிந்துபோகும் பரிதாப நிகழ்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை.

உயிர்களைத் தாக்கித் துன்புறுத்தி, அவை வதைபட்டுச் சாவதற்குக் காரணமான, விதம் விதமான நோய்கள் உருவாவதையும் கண்டுகொள்ளவில்லை.

ஏறத்தாழ 100 கோடி ஆண்டுகள், தன்னால் படைக்கப்பட்ட உயிரினங்கள் துன்புற்று வாழ்ந்து மடிவதைக் கருணைக் கடல் என்று சொல்லப்படுகிற கடவுள் வேடிக்கை பார்த்திருக்கிறார்; செயலற்று முடங்கிக் கிடந்திருக்கிறார்.

100 கோடி ஆண்டுகளுக்கு முன்பே தன்னால் தோற்றுவிக்கப்பட்ட கோடி கோடி கோடியோ கோடிக்கணக்கான உயிரினங்களைக் காப்பாற்றத் தவறிய கடவுள், கோயில்கள் கட்டி, விழாக்கள் எடுத்துக் கும்மாளமடித்துத் துதிபாடினால், வெறும் 10 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் படைக்கப்பட்ட மனித இனத்தைக் காப்பாற்றுவார் என்று பேதை மனிதர்கள் நம்புகிறார்களே?

இவர்களென்ன கடவுளின் செல்லப்பிள்ளைகளா?!?!//

                                            *  *  *

தங்களின் வருகைக்கு நன்றி! அசாத்தியப் பொறுமையுடன் முழுமையாக வாசித்து முடித்தமைக்கு என் நன்றிகள்!!

==========================================================================

பரம[சிவம்] ரகசியம்:

தினம் ஒரு பதிவிடுவது என் தீராத ஆசை. இன்று கைவசம் 'சரக்கு' ஏதும் இல்லாததால், பழையதொரு பதிவுக்குப் புத்துயிரூட்டிச் சமாளித்திருக்கிறேன். ஹி... ஹி... ஹி!!!