யாரோ ஒரு X, ஏதோவொரு Y சாதிக்காரர்களை['சமுதாயம்' என்னும் மேல்பூச்சு தேவையில்லை] தன் படைப்பொன்றில்[திரைப்படமோ, கதையோ, கவிதையோ] இழிவுபடுத்திவிட்டாரென்று Y சாதிக் கட்சியினர் குற்றம் சாட்டுவதாக வைத்துக்கொள்வோம்.
Y சாதி அமைப்புகள் X மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று 'அறவழி'யைப் புறக்கணித்து ஆவேசத்துடன் போராடுகின்றன; அது நீடிக்கவும் செய்கிறது. Xஐ ஆதரித்தும் வேறு பல அமைப்புகள் அறிக்கை வெளியிடுகின்றன; ஆதரவுக் குரல்களும் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கின்றன.
இத்தகையதொரு சூழலில், தனக்கான சாதக பாதகங்களை ஆராய்ந்து சம்பந்தப்பட்ட சாதி அமைப்புகளிடம் மன்னிப்புக் கேட்கிறார் X.
விளைவு என்ன, அல்லது, என்னவெல்லாம்?
*போராட்டத்தில் வெற்றி பெற்ற சாதிக் கட்சியினரை இழிவுபடுத்திட, அல்லது அவ்வகையிலான காட்சி அமைத்திட இனி வேறு எந்தவொரு படைப்பாளியும் துணியமாட்டான்.
*இவர்கள்[Y] பின்னொரு நாளில், தங்களின் கோரிக்கை நிறைவேறிடப் போராடத் தலைப்பட்டால், அரசு இவர்களின் போராட்டத்தை அடக்கி ஒடுக்கிட அஞ்சும். இவர்களின் கோரிக்கையை ஏற்பது பற்றிப் பரிசீலிக்கும்.
*இந்தச் சாதிக் கட்சித் தலைவர்களின் செல்வாக்கு சம்பந்தப்பட்ட சாதியாரிடம் அதிகரிக்கும்.
*இந்தச் சாதிக் கட்சி அமைப்புகளின் பலம் பெருகவும் வாய்ப்புள்ளது.
இவை போன்ற இன்னும் பல அனுகூலங்களை இந்தக் கட்சி அமைப்புகளும் தலைவர்களும் பெறுவதற்கான சூழல் உருவாகும்.
இவ்வாறான, ஒரு சாதிக் கட்சிகளின் 'போராட்டமும் அதன் விளைவுகளும்' குறித்த கணிப்புக்கிடையே நம் உள்மனதில் எழும் சந்தேகம் ஒன்றையும் இங்கே குறிப்பிட விரும்புகிறோம்.
நீண்டதொரு கடுமையான போராட்டத்திற்கிடையே 'வெற்றிக்கனி' பறித்திட்ட இந்தச் சாதி அமைப்புகளின் 'செயல்பாடுகள்' குறித்துப் பிற சாதியார் ஏற்கனவே ஒரு 'அபிப்ராயம்'[நல்லதோ கெட்டதோ] கொண்டிருப்பார்களே, அந்த அபிப்ராயம் மாறுமா, அல்லது அது அவர்களின் மனங்களில் இன்னும் ஆழமாகப் பதியுமா?
குறிப்பிட்ட சாதிக் கட்சியாருடனான ஒட்டுறவால் ஒருவர் பெற்ற அனுபவங்களைப் பொருத்தது இதற்கான பதில்!
==========================================================================