புதன், 1 டிசம்பர், 2021

'பெண்குறியை இழிவுபடுத்தும் இழிதகையோர்' -டாக்டர் 'சாலினி'யின் சாடல்!

//சிவனைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால் மன்மதன் வந்தான், சிவனுக்கு மோகம் வந்தது. அப்போது சிவனின் மூன்றாவது கண் திறந்தது. சிவனுடைய நெற்றியிலிருந்து வெளியேறிய  தீப்பொறியை அக்னிப்பகவான் வாங்கி அதைத் தண்ணீரில் போட்டபோது அது குழந்தையாக உருவானது; அதுதான் முருகன் என்று சொல்லுகிறார்கள். 

மூன்றாவது கண் என்று சொல்வது  ஆண்குறியைத்தான். அதற்கும் கண்ணைப் போன்ற ஒரு அமைப்பு உள்ளது. 

அதேபோல், பெருமாள் நெற்றியில் வரைந்திருக்கும் நாமம் பெண்குறியின் சின்னம். 

பெண்ணுறுப்பில் இருந்து மட்டுமே பிள்ளை பிறக்காது, ஆண்களின் நெற்றியில் இருந்தும் தொடையில் இருந்தும் பிள்ளை பெற்றெடுக்க முடியும் என்று காட்டுவதற்காக இப்படியான கதைகளை உலவவிட்டிருக்கிறார்கள் புராணங்களின் மூலம்.

புராணத்தில் ஒன்று சொல்லப்பட்டால் அது நிஜமாக நடந்ததாகவும், அதுதான் வரலாறு என்றும், அதைத் தூக்கி வைத்துப் பேசும் மனநிலை இங்கு உள்ளது. 

புராணம் என்பது முழுக்க முழுக்கக் கற்பனைக் கதைதான், 

ஒரு ஆணின் விந்துவில் இருந்து மட்டும் குழந்தை உருவாகாது. இதற்கு ஒரு பெண்ணின் கர்பப்பைக் கருமுட்டை தேவை. 

இந்தப் புராணங்கள் எல்லாமே பெண்ணின் கர்பப்பை மற்றும் கருத்தரிப்புக்கு எதிராக உள்ளன. இந்தியப் புராணங்கள் மட்டும் இப்படி அல்ல, கிரேக்கப் புராணங்களிலும் இதுபோன்ற கதைகள் உண்டு. கிரேக்கர்களின் தலைமைக்  கடவுள் ஜீயஸ். அவரின் தொடையிலிருந்து ஒரு குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைதான் டயனசஸ்.  அவன்தான் போதைகளுக்கெல்லாம் ராஜா என்றும் சொல்லப்படுகிறது. 

இவை அனைத்துமே பெண்ணின் உடலிலிருந்து குழந்தை வரவில்லை என்பதை  உறுதிப்படுத்துவதற்கான முயற்சிதான். சூரியனில் இருந்து வந்தோம்; சிவனுடைய நெற்றியில் இருந்து வந்தோம் என்று கூறுவதெல்லாம் இந்த அடிப்படையில்தான். கர்ணன் சூரிய பகவானுக்குப் பிறந்தவன் என்று சொல்லப்படுகிறது. இதே போல எகிப்திலும் ஒரு கட்டுக் கதை உள்ளது.

இவை போல் பல கதைகள் உள்ளன.

பிராமணர்கள் மற்றும் தமிழ்ச் சமணர்கள் பூணூல் போடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அதாவது, பெண்ணிடமிருந்து பிறந்த குழந்தை தீட்டு என்றும், அந்தச் தீட்டைக் கழிப்பதற்காக பூணூல் போடுவதாகவும் கூறுகின்றனர். 

குழந்தை பிறந்துவிட்டதே என அதைக் கொண்டாட மாட்டார்கள்; தீட்டு என்றுதான் சொல்வார்கள். பிறகு அந்தத் தீட்டைக் கழித்துதான்  கோவிலுக்குக் கொண்டுவருவார்கள். ஒரு குழந்தையின் பிறப்பையே தீட்டு என்று சொல்லுகிற வழக்கம் உண்டு என்றால் இந்தக் கலாச்சாரத்தில் ஒரு பிறப்பு எப்படிப் பார்க்கப்படுகிறது என்பதை யோசிக்க வேண்டும். 

மற்றவர்களைப் போல சாமானியராகப் பெண்ணின் யோனியிலிருந்து பிறக்கவில்லை; நாங்கள் உயர்ந்தவர்கள் என்பதைக் காட்டுவதற்காகவே இப்படிப் போதிக்கப்பட்டு இருக்கிறது. நேராகக் சூரியனிலிருந்து வந்தாய், குண்டத்தில் இருந்து வந்தாய், அக்னிச் சட்டியில் இருந்து வந்தாய் என்று கற்பிக்கப்பட்டிருக்கிறது. மனிதப் பிறப்பு என்பதை மறைத்துத் தாங்கள் ஆன்மீகரீதியாகவும், தேவத்துவமாகவும் பிறந்தவர்கள் என்பதைச் சொல்வதற்காக இப்படியெல்லாம் போதிக்கப்பட்டுள்ளது.

அதே போல் கிறித்தவ மதத்திலும், உடலுறவு இல்லாமல் குழந்தை பிறந்தது என்று சொல்வதும், அதைப் பாவமற்ற குழந்தை என்று போற்றுவதும், தேவகுமாரன் என்று பெருமிதப்படுவதும் பெண்ணை அசிங்கப் படுத்துகின்ற வேலைதான். 

மொத்தத்தில் 'பெண்குறி' என்பது அசிங்கமானது என்பதைக் கற்பிதம் செய்வதற்காக இப்படியெல்லாம் பேசப்பட்டுள்ளது. பெண்கள் இல்லாமல் இருக்க முடியாது என்பது இயற்கையின் நீதி. ஆனால், ஆண் சமூகம் பெண்களை அசிங்கப்படுத்திக்கொண்டே இருப்பதன் வெளிப்பாடுதான் இவையெல்லாம்//

                                                    *  *  *

மேற்கண்ட அறிவியல்பூர்வமான கருத்துகள் டாக்டர் சாலினி அவர்களால் ஒரு பேட்டியில் சொல்லப்பட்டவை.

டாக்டர் சாலின் ஓர் உளவியல் மருத்துவர் மட்டுமல்ல, மிகச் சிறந்த பகுத்தறிவுச் சிந்தனையாளரும்கூட. அவரை உரிய வகையிலெல்லாம் பாராட்டுவதும், அவர்தம் கருத்துகளை மக்களிடையே விரைந்து பரப்புவதும் நம் அனைவருக்குமான தவிர்க்கக் கூடாத கடமை ஆகும்.

==========================================================================

https://tamil.asianetnews.com/politics/the-mark-on-the-forehead-is-a-symbol-of-the-genitals-dr-shalini-terrible-interpretation--r3dkng     -Nov 30, 2021, 1:24 PM IST