படித்து முடித்தவுடன், "இதெல்லாம் நடக்கிற கதையா?" என்று உங்களுக்குக் கேட்கத் தோன்றும். 'சந்தேகத்தின் பேரில் மனைவியை வெட்டிக் கொன்று, துண்டித்த தலையுடன் கணவன் காவல்நிலையத்தில் சரண்'; கள்ளக் காதலனுடன் சேர்ந்து, கணவனைக் கொன்று புதைத்த மனைவி' என்பன போன்ற செய்திகள் ஊடகங்களில் அவ்வப்போது[அடிக்கடி?] வெளியாவதைப் பார்க்கும்போது, இந்தக் கதையின் ஒரு நிகழ்வு, வெகு விரைவில் பல 'உண்மை நிகழ்வு'களாக ஆவதற்கு நிறையவே வாய்ப்புள்ளது என்பது என் அனுமானம்.
நன்றி!
கடந்த ஒரு மணி நேரமும் அறிவரசுக்கு ஆனந்தப் பரவசத்தில் கழிந்தது.
அவனைப் பரவசப்படுத்தியவள் மேனகா.
"மேனகா இது உன் உண்மைப் பெயரா, வாடிக்கையாளர் கேட்டா சொல்லிவைக்கிற பல பெயர்களில் இதுவும் ஒன்னா?" என்று கேட்டான் அறிவரசு.
வந்த வேலை முடிந்ததும் சிறிது நேரம் அவளைச் சீண்டி வேடிக்கை பார்த்துப்போவது அவனுக்கு வழக்கமாகிப்போன ஒன்று. அந்த அளவுக்கு இருவருக்குமிடையே ஒருவித 'நெருக்கம்' உருவாகியிருந்தது. அந்த வகையில்தான் அவன் இந்தக் கேள்வியைக் கேட்பதாக நினைத்தாள் மேனகா.
கேட்டாள்: "உங்களை மாதிரியானவங்களுக்கு நான் வேணும். என் பெயர் எதுவா இருந்தா என்ன?"
"மத்தவங்க எப்படியோ, இப்போ எனக்கு உன் உண்மையான பெயர் தேவைப்படுது."
"எதுக்கு?"
"உன்னை நான் கல்யாணம் கட்டிக்க விரும்புறேன். உண்மைப் பெயர் தெரியணுமில்லையா?"
அதிர்ச்சியில் உறைந்த மேனகா, கொஞ்சம் வினாடிகளுக்குப் பிறகு, "அறிவரசு, என்ன சொல்லுறீங்க? சுயநினைவோடுதான் பேசுறீங்களா?" என்றாள்.
"ஒரு கணவன் தன் மனைவியிடம் எதிர்பார்க்கிற பல நல்ல குணங்கள் உனக்கு இருக்கு. கள்ளக் காதலனோடு ஓடிப்போன என் பெண்டாட்டியை விவாகரத்துச் செய்துட்டுத் தனி மரமா நிற்பதும் நான் இந்த முடிவுக்கு வரக் காரணம்."
"நான் ஒரு வேசி."
"தொழிலால் வேசி. சூதுவாதில்லாத நல்ல மனசால் சில குடும்பப் பெண்களைவிடவும் நீ மேலானவள். எனக்கேத்த நல்ல மனைவியாவும் துணைவியாவும் நீ இருப்பேங்கிறது என் நம்பிக்கை. நாள்கணக்கில் யோசனை பண்ணித்தான் இந்த முடிவுக்கு வந்திருக்கேன்." -அழுத்தம் திருத்தமாகச் சொன்னான் அறிவரசு.
"நான் மேலானவள்னு ஒரு வாடிக்கையாளரா இதை இப்போ சொல்லுறீங்க. காலம் பூரா உங்களால இப்படிச் சொல்லிட்டிருக்க முடியாது. ஒரு வீட்டுக்குள்ள நாம சேர்ந்து வாழும்போது, என்னுடைய குறைகளும் பலவீனங்களும் ஒன்னொன்னா உங்களுக்குத் தெரிய ஆரம்பிக்கும். என்னை வெறுக்க ஆரம்பிச்சுடுவீங்க."
"குறைகளும் பலவீனங்களும் எல்லோருக்குமானது. அதெல்லாம் எனக்கு ஒரு பொருட்டல்ல."
"அதுகளை நீங்க பொருட்படுத்தாம இருக்கலாம். ஆனா, உங்க விருப்பத்துக்கு மாறா நான் நடந்துக்க நேரும்போது. நான் ஒரு முன்னாள் விபச்சாரிங்கிறது உங்க நினைவுக்கு வருவதைத் தடுக்கவே முடியாது. ஏண்டா இவளைப்போய்க் கட்டிக்கிட்டோம்னு வருத்தப்படுவீங்க."
"இப்படியெல்லாம் ஏன் கற்பனை பண்ணுறே?"
"இது கற்பனையில்ல; எதார்த்தம். நீங்க நல்ல மனிதர். உங்க மனசில் தோணுற எல்லா எண்ணங்களும் நல்லவைதான்னு சொல்ல முடியாது. இந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைங்க. நீங்க நீங்களாகவும் நான் நானாகவும் இருந்துகொண்டே தேவைப்படும்வரை சந்திச்சிச் சந்தோசத்தைப் பகிர்ந்துக்கலாம். போய் வாங்க." -கை கூப்பினாள் மேனகா.
"போறேன். அதுக்கு முன்னே ஒரு வேண்டுகோள். கல்யாணம் வேண்டாம். ஒரு முன்னாள் விலைமகளாகவும், நல்ல ஒரு தோழியாகவும் நீ என் வீட்டுக்கு வந்துடு. நீ விரும்புறவரைக்கும் நான் மட்டுமே உன்னுடைய வாடிக்கையாளனா இருப்பேன். கொஞ்சம் கொஞ்சமா உனக்கு நான் தர இருக்கும் பணத்தோடு, கவுரவமான ஒரு தொகை சேர்த்து ஒட்டு மொத்தமா உன் பேருக்கு வங்கியில் போட்டுடுறேன்.....
சேர்ந்து வாழ்வோம். பிரிஞ்சே தீரணும்னு ஒரு சந்தர்ப்பம் வந்தா பிரிஞ்சிடுவோம்....." என்று சொல்லி, மேனகாவுக்கு, சிந்தித்து ஒரு முடிவெடுக்க அவகாசம் தருவது போல் மௌனமாகச் சில நிமிடங்களைக் கழித்தான் அறிவரசு.
மேலும் சொன்னான்: "சம்மதம்னா? பாதுகாப்பா உன்னை அழைச்சிட்டுப் போறதுக்கான ஏற்பாடுகளை நான் கவனிச்சிக்கிறேன்."
மேனகா வாய் திறந்து "சரி" சொல்லவில்லை; அவளின் இரு கண்களிலும் வழிந்த கண்ணீர் அதை உறுதிபடுத்தியது.
==========================================================================