ஆப்ரிக்க நாடான கென்யாவில், பிரிட்டிஷ் ராணுவத்தினர் இழைத்த வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கென்று அந்நாட்டில் ஒரு கிராமமே உருவாக்கப்பட்டதாம்.
இந்தக் கிராமத்தின் பெயர் 'உமோஜா' என்பதாகும். இது, 'சம்புரு' என்னும் மாநிலத்தில் உள்ளது. இங்குப் பெண்கள் மட்டுமே வாழ்ந்துவருகின்றனர்.
பெண்கள் முழுச் சுதந்திரத்துடன் வாழும் இந்தக் கிராமத்தில் ஆண்களுக்கு அனுமதி கிடையாது. கடந்த காலங்களில் ஆண்களின் கொடுங்கோன்மைக்கு ஆளான பெண்களும் இந்தக் கிராமத்தில் வசித்து வருகின்றனர்.
காலப்போக்கில், வீட்டு வன்முறை, பாலியல் வன்கொடுமை, குழந்தைத் திருமணம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட பெண்கள் இங்கு வாழத் தொடங்கினர்.
இவர்கள், தங்களுக்குக் கொடுமை இழைத்த ஆண்களை மட்டுமல்ல, ஆண் இனத்தையே வெறுப்பவர்கள்; பாரம்பரியமாக ஆண்களுக்கு அடிபணியும் பெண்களையும்கூட இவர்கள் பார்க்க விரும்புவதில்லையாம்.
மாட்டுச் சாணம் மற்றும் மண் கலந்து கட்டப்பட்ட குடிசைகளில் வாழும் இவர்கள், பாதுகாப்புக்காக இந்தக் குடிசைகளைச் சுற்றி முள்வேலிகளை அமைத்துள்ளார்கள்.
அங்கு ஆரம்பப் பள்ளியைப் பெண்கள் நடத்திவருகின்றனர்;
உமோஜா கிராமத்திற்குச் சென்று பார்வையிட மட்டுமே ஆண்களுக்கு அனுமதி உண்டு. சம்புருவிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த ஊருக்கு வந்துசெல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. கலாச்சார மையத்தையும் நடத்தி வருகின்றனர்.
கிராமத்தின் நலனைக் கருத்தில் கொண்டு இவர்கள் நகைகளைத் தயாரித்து விற்பனை செய்கிறார்கள். இன்றுவரை இங்கு வாழும் பெண்களின் வாழ்க்கை மிகவும் கடினமானதாக இருந்தாலும், மகிழ்ச்சியாகவே வாழ்கின்றனர். ஏனெனில், ஆண்களின் கொடுங்கோன்மையை இவர்கள் சந்திப்பதில்லை.
கிராமமாக இருந்தாலும் நகரமாக இருந்தாலும் சிறு குழுந்தை முதல் வயதான மூதாட்டிவரை பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ள இன்றையச் சூழலில், இந்தக் கிராமம் பெண்களின் சொர்க்க பூமியாகத் திகழ்கிறதாம்!
***கென்யா நாட்டின் 'உமோஜா' கிராம மக்களின் துணிவு வெகுவாகப் பாராட்டத்தக்கது.
நம் நாட்டிலும் ஆணாதிக்கத்தால் சீரழிக்கப்பட்டு, வாழும் வகை தெரியாமல் அல்லாடும் மேற்கண்ட வகையிலான பெண்கள் இருக்கவே செய்கிறார்கள். ஆனாலும்.....
இங்கே கென்யாவில் உள்ளது போல் ஒரு 'உமோஜா' உருவாவதற்கான வாய்ப்பு இல்லையென்றே சொல்லலாம். உருவாக்குவதற்குத் தேவையான அபாரத் துணிச்சலும் நம் பெண்களுக்கு இல்லை.
ஆயினும், பாதிப்புக்குள்ளான பெண்கள் பாதுகாப்பாகவும், நிம்மதியாகவும் வாழ்வதற்கு அவர்களுக்கென்று, தேவைப்படும் இடங்களில் சமத்துவபுரங்களை உருவாக்குவது சாலச் சிறந்த வழி என்று தோன்றுகிறது.
இவர்களுக்கென்று, இயன்றவரை சிறு சிறு தொழில்கூடங்களை நிறுவி வருவாய்க்கு வழிவகுக்கலாம்; பிள்ளைகள் பள்ளிக் கல்வி கற்பதற்கான வசதிகளையும் அரசு செய்யலாம். பாதுகாப்புக்குப் பெண் காவலர்களை நியமிக்கலாம். இதற்கான முயற்சிகளை அரசு மேற்கொண்டால், அது மிகுந்த வரவேற்பைப் பெற்றிடும் என்பது உறுதி.
==========================================================================https://puthusudar.lk/2021/11/05/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85/ -November 5, 2021 ]