'சொர்க்கம்'&'நரகம் குறித்த இந்து&இஸ்லாம் மதங்களின் கொள்கைகளை ஒப்பிட்டு ஒரு கருத்துரையாளரால் பதிவு செய்யப்பட்டவை இவை.
சொர்க்கம், நரகம் ஆகியவை குறித்த இந்த விவாதத்தை விமர்சிப்பது நம் நோக்கமல்ல; இந்து&இஸ்லாம் மதங்களின் இவை பற்றிய வர்ணிப்பு என்னை வெகுவாகக் கவர்ந்ததால் அதை உங்களுடன் பகிர்கிறேன்.
* * *
சொர்க்கம்:
சுவனத்தில்[சொர்க்கம்] வெண்ணெய் வழிந்தோடும் ஓடைகளும் சேமித்து வைக்கப்பட்ட தேனும் இன்னும் பழ ரசங்கள் பால் தயிர் நீர் எல்லாம் கைக்கெட்டும் தூரத்தில் கிடைக்கும் வகையில் சதா சிற்றாறுகளாய் ஓடிக் கொண்டிருக்கும். அவைகள் உன்னுடைய மகிழ்ச்சியை அதிகப்படுத்தும். ஏரியில் நிரம்பிக் கிடக்கும் தாமரை மலர்கள் உன்னுடைய ஆத்மாவை வலிமைப் படுத்தும்.[4 : 34 : 6 – அதர்வண வேதம்]
இறைவனை அஞ்சுவோருக்கு, வாக்களிக்கப்பட்ட சொர்க்கம் தரப்படும். அதில் மாற்றமடையாத தண்ணீரைக்கொண்ட ஆறுகளும், சுவை கெட்டுப் போகாத பாலாறுகளும், அருந்துபவருக்கு இன்பம் தரும் மது ஆறுகளும், தூய்மையான தேன் ஆறுகளும் இருக்கும். அங்கே அவர்களுக்கு எல்லா வகையான கனிகளும் தமது இறைவனிடத்திலிருந்து மன்னிப்பும் உண்டு[47 : 15 – குர்ஆன்].
இன்றைய தினம் சொர்க்கச் சோலைகளே உங்களுக்குரிய நற் செய்தி. கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பீர்கள்[57 : 12 – குர்ஆன்].
நரகம்:
யார் பெரும் பாவியாக, பொய்யனாக, நம்பிக்கையற்றவனாக இருந்தானோ அவன் நரகாஸ்தனத்தில் (நரகத்தில்) இருப்பான்[4 : 5 : 5 – ரிக் வேதம்.
கெட்டவர்கள் நரகத்தில் வீழ்த்தப்படுவார்கள்[11 : 106 – குர்ஆன்.
நரகம் மிகக் கெட்ட தங்கும் இடமாகும்[67 : 6 – குர்ஆன்.
நரகத்தில் நுழைந்தவுடன் தாங்க முடியாத வேதனை துவங்கும். கை கால்கள் எரிக்கப்படும். விறகுக் கட்டுகள் அவனைச் சுற்றிக் குவித்து வைக்கப்பட்டு எரிக்கப்படும். அவனுடைய சதை அவனுக்கு உண்ணக் கொடுக்கப்படும். தன்னைத் தானே செதுக்கிக் கொள்வான் அல்லது பிறரால் வெட்டப்படுவான். குடல்கள் பிதுங்கி வெளியே தள்ளப்பட்டவனாக இருப்பான். எனினும், அவன் உயிருடனே இருப்பான். அவன் சாகாது தொடர்ந்து வேதனையை அனுபவித்துக்கொண்டே இருப்பான் -ஸ்ரீமத் பாகவத் மஹா புராணம்.
மிக முக்கியக் குறிப்பு:
தர்மவான்களாக வாழ்ந்து முடித்து, செத்த பிறகு சொர்க்கம் சேரும் தன் பக்தகோடிகளின் சுகபோகத்திற்காக, அங்கே பழ ரசங்கள், பால், தயிர் ஆகியவை கலந்த பாலாறுகளையும், கமகமக்கும் மது ஆறுகளையும், தித்திக்கும் தேனாறுகளையும் தோற்றுவித்த கடவுளின் கருணையை எண்ணி எண்ணி எண்ணி மனம் சிலிர்த்தேன்.
அதே வேளையில்.....
நரகத்தில், உயிர் பிரியாத நிலையில் பாவப்பட்ட ஜென்மங்கள் எரிக்கப்படுவதும், அவர்கள் சதையையே அவர்களுக்கு உணவாகக் கொடுப்பதும், குடல் பிதுங்கிக் கிடக்கும் வகையில் வெட்டப்படுவதுமான படு பயங்கரச் சித்திரவதைகளை நிகழ்த்த உத்தரவிட்ட அதே கருணைக் கடவுளின் செயல் என்னைக் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
யாரிந்தக் கடவுள்? எதற்காக, யாருக்காக, எப்போதிருந்து இம்மாதிரி நல்லதும் பொல்லாததுமான செயல்பாடுகளை நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்?
'விடை கண்டறிவது சாத்தியமே இல்லை' என்பது தெரிந்திருந்தும் கேள்வி கேட்பதைத் தவிர்க்க இயலவில்லை!
வருகைக்கு நன்றி!
==========================================================================https://puthu.thinnai.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE/