*பாலுணர்வு இச்சையைத் தணிக்கவோ கட்டுப்படுத்தவோ வேறு வழியே இல்லாமல் தொழில்காரிகளைத் தேடிப் போகும்போது சாதி நினைவுக்கு வருவதே இல்லை[ஆந்திரத்து அழகியா, கேரளத்துக் குட்டியா என்றெல்லாம் விசாரிப்பது உண்டு].
*வன்புணர்வில் ஈடுபடும் வெறி நாய்களின் கண்களுக்குச் சாதி எந்நாளும் தட்டுப்படாது.
*லஞ்சம் வாங்கும்போது சாதி பார்க்காத உத்தம புத்திரர்கள் அவதரித்துள்ள பூமி இதுவாக்கும். 'இந்த அதிகாரி 'நம் ஆள்' இல்லை. லஞ்சம் கொடுத்துக் காரியம் சாதிக்க வேண்டாம்' என்று முடிவெடுக்கும் சாதிப் பிரியர்கள் எல்லாம் இங்கு இல்லை.
*தேர்தலில் ஓட்டுக் கேட்கும்போது வேட்பாளர்களுக்குச் சாதி தேவைப்படுவதில்லை[சாதி பார்க்காமல் எவரும் போடுவதில்லை].
*விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடும் நேரம் அல்லது புயல், சுனாமி போன்றவை தாக்கும்போது உதவுபவரிடம், "நீங்க என்னய்யா சாதி?" என்று எவரும் விசாரிப்பதில்லை.
*திருடும்போதும், கொள்ளையடிக்கும்போதும், 'இவர் நம் சாதிக்காரர்' என்று களவாணிக் கும்பல் விதிவிலக்கு அளிப்பதில்லை; அந்தத் தொழிலுக்குக் கூட்டாளிகளைச் சேர்க்கும்போதும் அதே... அதே... அதே.
*நடுத்தர வயதைக் கடந்தும் திருமணத்துக்கு வரன் கிடைக்காத போது இனம், மொழி, மாநிலம், நாடு என்று எல்லாம் கடந்து வரன் தேடுகிறார்கள். சாதி பார்த்தால் கட்டைப் பிரமச்சாரிகளாகக் காலம் தள்ள நேரிடும்.
*குடியேறிய அயல் ஊர்களில் தன் ஜாதிக்காரர்களே இல்லாதபோது... "இப்போ எல்லாம் யாருங்க சாதி பார்க்குறாங்க?" என்று சமத்துவம் போற்றும் சந்தர்ப்பவாதிகளை ஈன்றெடுத்த மண் இது.
8.எந்தவொரு கடைக்காரரும், "உன் சாதி என்ன?" என்று கேட்டுப் பொருள் விற்பனை செய்வதில்லை.
9.பிச்சை எடுப்பவர்கள், போடுபவர்களிடம் சாதி அடையாளம் தேடுவதில்லை.
மேற்கண்ட சந்தர்ப்பங்களிலெல்லாம் சாதி வேறுபட்டைத் தவிர்ப்பவர்கள், அவரவர் சாதியாருடன் பெரும்பான்மையினராகச் சேர்ந்து வாழும் இடங்களிலும், வழிபடும் கோயில்களிலும், மணம் நிகழ் இடங்களிலும் ஏன், பிணம் சுடும் மயானங்களிலும்கூட சாதியைக் கட்டிப்பிடித்து ஒப்பாரி வைப்பது ஏன்?
மனப்பூர்வமாய்ச் சிந்தித்தால் இந்த அவலத்திலிருந்து எளிதாக விடுபட முடியும். நம்மில் பெரும்பாலோர் சிந்திக்கத் தயாராக இல்லை என்பது விடுபட இயலாத பெரும் துயரம்!
==========================================================================