வியாழன், 16 டிசம்பர், 2021

கின்னஸ் கடவுள்கள்!!!

கணபதி, கணேசன், விநாயகன், பிள்ளையார், கயமுகன், ஒற்றைக்கொம்பன், சித்திபுத்தி விநாயகன், அங்குசபாணி, ஆனைமுகத்தோன், மகா கணபதி, விக்கினேஸ்வரன், தும்பிக்கை ஆழ்வார், சக்தி கணபதி, லட்சுமி கணபதி, ஊர்த்துவ கணபதி, ஐங்கரன், இரட்டைப் பிள்ளையார் என்றிப்படி ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெயர்கள் விநாயகனுக்கு மட்டும் உள்ளன.

இவரின் இளவலான முருகக் கடவுளும், வேல் முருகன், அருள் முருகன், பழனி முருகன், கந்தன், குமரன், வேலன், சரவணன், ஆறுமுகன், விசாகன், குருநாதன் என்று பெரும் எண்ணிக்கையிலான பெயர்களில் அழைக்கப்படுகிறார்.

இவர்களின் தந்தையான பரமசிவனும், பரமேஸ்வரன், ஈஸ்வரன், அர்த்தநாரி ஈஸ்வரன், மாதொருபாகன், கபாலீஸ்வரன், சுந்தரேசன், காசி விஸ்வநாதன், காளத்தியப்பன், குற்றால நாதன், பட்டீஸ்வரன், சொக்கநாதன் என்றிவ்வாறு ஆயிரத்துக்கும் மேலான பெயர்களைப் பெற்றுள்ளார்.

பரமனின் துணைவியான ஈஸ்வரியும், பரமேஸ்வரி, பார்வதி, உமையாள், அம்பாள், காமாட்சி, சங்கரி, சுந்தராம்பாள், மீனாட்சி என்று ஏராளமான பெயர்களால் குறிப்பிடப்படுகிறார்.

இன்னும், திருமால், பிரம்மன், இந்திரன், வருணன், வாயுபகவான், அக்கினி தேவன், ஐயப்பன், மெய்யப்பன் முதலான கணக்கு வழக்கற்ற கடவுள்களும் பல்வேறு பெயர்களால் சுட்டப்படுவது யாவரும் அறிந்ததே.

உருவ வழிபாடு நிகழ்த்தும் மிகப் பல மதங்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட 'இந்து'மதத்தில் உள்ள கடவுள்களை எண்ணி முடிப்பது சாத்தியம் எனினும், இவர்கள் அத்தனை பேருக்குமான பெயர்களை எண்ணிப் பட்டியலிடுவது எளிதான செயலல்ல.

இவற்றை நூலாக அச்சிட முனைந்தால் அது மிக மிக மிகப் பக்கங்களாக நீளும் என்பது மறுக்க இயலாத உண்மையாகும்.

உலகில் கடவுள்களை வழிபடும் மதங்கள் உள்ளன.

எந்தவொரு மதம் சார்ந்த மக்களும் இந்து மதம் சார்ந்த மக்களைப் போல் தங்களின் கடவுள்களுக்கு இந்த அளவுக்குப் பெயர்கள் சூட்டி வழிபடுவதாகத் தெரியவில்லை.

இது ஒரு சாதனை என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

இந்தச் சாதனையைக் குறிப்பிட்டு இந்துமதத்தவர், உரிய முறையில் ஒரு கோரிக்கையை முன்வைத்தால், இது 'கின்னஸ்' உலகச் சாதனைப் புத்தகத்தில் இடம்பெறும் என்பது உறுதி... உறுதி... உறுதி.

கோரிக்கை வைப்பார்களா?!?!

==========================================================================