வெள்ளி, 17 டிசம்பர், 2021

போலி 'அறிவியல்வாதி' ஜக்கி வாசுதேவ்!!!

'கோலம் என்பது அலங்காரத்துக்காக போடப்படுவதில்லை. இது ஒருவித வடிவம். சரியான முறையில் உருவங்கள் ஒன்றிணைந்தால் அது யந்திரம். நமது கலாச்சாரத்தை பொறுத்தவரை, கோலத்தையும் ஒரு குறிப்பிட்ட வகையான யந்திரமாகத்தான் உருவாக்கினர்.'

இதைச் சொல்லியிருப்பவர் 'ஈஷா அறக்கட்டளை அதிபரும், கடவுள்களுக்கெல்லாம் குரு[சத்குரு]வுமான ஜக்கி வாசுதேவ் ஆவார்https://m.dinamalar.com/detail.php?id=2914843  -டிச 16,2021 09:05]. 

'யந்திரம்' என்றால் என்னவென்று நாம் அறிவோம். அதன் வடிவமைப்புக்கேற்ப, முடுக்கிவிட்டால், தானாக இயங்கக்கூடியது. கோலத்தை யந்திரம் என்கிறாரே இந்த ஆன்மிகப் பேரொளி, கோலம் இயங்குமா? எத்தனை நேரம் இயங்கும்? இயங்குவதற்கான உந்து சக்தி[பெற்றோல், டீசல், மின்சாரம் போல] எது? 

இவற்றில் எந்தவொரு கேள்விக்கும் அறிவியல் அறிவுடன் இவரால் விடை சொல்ல இயலாது.

வாசலில் போடப்படும் கோலத்தை இயந்திரம் ஆக்கியதோடு இவர் நிற்கவில்லை.

மார்கழி மாதத்திலான சூரிய ஓட்டத்தில் நிகழும் மாற்றங்களான தட்சிணாயனம், உத்தராயனம் பற்றியும், அவற்றின் விளைவுகள் பற்றியும் பத்தாம் வகுப்பில் படித்த செய்திகளைப் பகிர்ந்துகொண்டுவிட்டு, 

'குறிப்பிட்ட விதத்தில் கோலம் இடுவதால் அந்தரத்தில் இடம்பெற்றிருக்கும் அந்தச் சக்தியை நம் வீட்டிற்குள் கிரகித்துக்கொள்ள முடியும். இதை நீங்கள் விஞ்ஞானப்பூர்வமாகச் செய்தால்[?], உங்களுக்கு நிச்சயம் பலன் கிடைக்கும்' என்றும் கயிறு திரித்திருக்கிறார் ஒட்டுமொத்தக் கடவுள்களுக்குமான[சத்>பரம்பொருள்] இந்தக் குரு.

கோலம் என்பது, வெள்ளை நிறக் 'கல் பொடி'யாலும், அரிசி மாவாலும்[வேறு எதையும் பயன்படுத்துகிறார்களா?] போடப்படுவது.

இவற்றிற்கு விண்ணில் பரவிக் கிடக்கும் சக்தியைக் கிரகிக்கும் ஆற்றல் உள்ளது என்பதற்கு அறிவியல் ஆதாரம் எதையும் தரவில்லை ஜக்கி; மனம்போன போக்கில் புளுகியிருக்கிறார்.

இந்த மனிதர் போலி ஆன்மிகவாதி மட்டுமல்ல, போலி அறிவியல்வாதி என்பதையும் மக்கள் புரிந்துகொள்ளுதல் வேண்டும்.

தவறினால்.....

இம்மாதிரிப் போலிகளின் எண்ணிக்கை நாளும் அதிகரித்து மக்களின் சிந்திக்கும் அறிவு முற்றிலுமாகச் சிதைக்கப்படும் என்பது உறுதி.

==========================================================================