அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

சனி, 18 டிசம்பர், 2021

இப்படியெல்லாம் பொய் சொன்னால்தான் இந்துமதம் பிழைத்திருக்குமா?!?!

இமயமலையில் உள்ள எவரெஸ்ட் சிகரங்களைக் காட்டிலும் உயரம் குறைவானதுதானாம் 'கைலாயம்'[கைலாஷ்] என்னும் சிகரம். இது சீனா நாட்டின் எல்லைக்கு உட்பட்டது.

இந்துக்களின் கடவுளான சிவபெருமான் குடும்ப சகிதம் குடியிருக்கும் சிகரம் என்பதால் இதைச் சுற்றிலும் அமானுஷ்யச் சக்தி பரவியிருப்பதாகக் காணொலிகள் மூலம் பரப்புரை செய்துகொண்டிருக்கிறார்கள் தீவிர இந்துமதப் பற்றாளர்கள்.

இந்தக் 'கைலாயம்' என்னும் சிகரத்தை ஆராய்வதற்காகச் சீன அரசாங்கம், ஜப்பான் விஞ்ஞானிகளும் சீன விஞ்ஞானிகளும் அடங்கிய குழுவை ஹெலிகாப்டரில் அனுப்பியதாம். மோசமான வானிலை, பெரும் பனிச்சரிவு போன்றவை காரணமாக, முயற்சி பலனளிக்காததோடு ஆய்வுக் குழுவினர் பரிதாபமாக மாண்டுபோனார்களாம்.  

சீனா மீண்டும் ஒரு முறை அறிவியல் அறிஞர் குழுவை அனுப்பியது.

கைலாஷை நெருங்கும்போது உயிர்க்காற்று[ஆக்ஸிஜன்] பற்றாக்குறை ஏற்பட்டதோடு ரேடார் கருவியும் பழுதானது. எரிபொருள் தீர்ந்தது. ஆய்வுக் குழுவும் நாடு திரும்பியது[உண்மையில், இவையும் அறியப்படாத வேறு காரணங்களுமே ஆய்வு முயற்சி  தோற்றதற்கான காரணங்கள் ஆகும்].

அப்போதைக்கு அந்த ஆய்வைத் தொடர்வதால் பயன் ஏதுமில்லை என்பதோ, புதிய அறிவியல் சாதனங்களுடன் அதைத் தொடர்வது ஏற்புடையது என்பதோ அதற்கான காரணங்களாகவும் இருக்கலாம்.

இது குறித்த, சம்பந்தப்பட்ட சீன ஆய்வுக் குழுவின் அதிகாரப்பூர்வ அறிக்கைகூட வெளியாகாத நிலையில்.....

'கைலாயத்தைச் சூழ்ந்திருக்கும் அமானுஷ்யச் சக்திதான், சீன ஆய்வாளர்களை மிரண்டோட வைத்தது' என்பதாகக் 'காணொலிப் பதிவுகளை வெளியிட்டு அலப்பறை செய்திருக்கிறார்கள் இந்துமதப் பரப்புரையாளர்கள்[கீழே காணொலி இணக்கப்பட்டுள்ளது].

இவர்களே பின்னர், புத்தமதத் துறவியொருவர்[2 காணொலிகள் இணைக்கப்பட்டுள்ளன] கைலாஷ் சென்று திரும்பியதாகவும், சிவபெருமானின் அருளை அவர் பெற்றிருந்ததே அவர் நிகழ்த்திய சாதனைக்குக் காரணமாக இருந்ததாகவும் விவரிக்கும் காணொலிகளையும் வெளியிட்டிருக்கிறார்கள்.

நீளம், அகலம், உயரம், சுற்றளவு என்று எந்தவொரு அளவீட்டுக்கும் கட்டுப்படாமல், அண்டவெளியெங்கும் அகன்று விரிந்து பரந்து கிடக்கும் பிரபஞ்சத்தில், கைலாயம் என்பது வெகு வெகு வெகு... அற்பமானதொரு புள்ளிக்குள் ஒடுங்கிக் கிடக்கிற சிறு புள்ளியாகும்.

இந்தப் புள்ளிக்குள்தான் தங்களின் முழுமுதல் கடவுள் எழுந்தருளியிருக்கிறார்; அதை அமானுஷ்யமானதொரு சக்தி சூழ்ந்திருக்கிறது; அதை எவராலும் அணுக இயலாது என்றெல்லாம் நம்புவதும், பிறரை நம்ப வைக்க முயற்சி செய்வதும் எள்ளி நகையாடுவதற்குரியவை.

கைலாயம் அணுகுதற்கு அரியது என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லிவிட்டு, ஒரு புத்தமதத் துறவி அங்கே சென்று திரும்பினார்[கடவுளையும் பார்த்தாராம். கடவுளின் 'தோற்றம்' குறித்து அவர் விவரித்ததைப் பக்தகோடிகள் காணொலியாக வெளியிட்டிருப்பார்கள். தேடுங்கள் கிடைக்கப்பெறும்! ஹி... ஹி... ஹி!!!] என்று ஒப்புதல் வாக்குமூலம் தருவது இவர்கள் பின்பற்றுகிற மதத்தை மட்டுமல்ல, வழிபடுகிற கடவுளையும் இழிவுபடுத்துகிற செயலாகும்.

இவர்களுக்கு நாம் அறிவுறுத்த விரும்புவது ஒன்று உண்டு. 

"முட்டாளாகவே வாழ்ந்து முடிப்பது உங்களின் விருப்பம் சார்ந்தது. பிறரையும் உங்களுடன் இணைத்துக்கொள்ள முயல்வது கடும் கண்டனத்திற்குரிய செயல் என்பதை நினைவில் கொள்ளுங்கள்."
==========================================================================