'பெற்றெடுத்த பிள்ளைகளைத் தவிக்கவிட்டுக் கள்ளக் காதலனுடன் பெண் ஓட்டம்'; 'கள்ள உறவுக்குக்கு இடையூறாக இருந்த மனைவியைக் கொன்று சிறை சென்று, குழந்தைகளை அனாதை ஆக்கிய கணவன்' என்றிவை போன்ற குற்றச் செய்திகள் ஊடகங்களில் கால இடைவெளி இல்லாமல் வெளியாவதைக் காண முடிகிறது.
இந்தத் தகாத செயல்களால் இவர்களில் பலர் கொலை செய்யப்படுதலும், தற்கொலை புரிதலும் தவிர்க்க இயலாதவையாகும். எனினும், இவர்களைப் பற்றிக் கவலைப்படுவார் எவருமில்லை.
ஆனால்,
ஆதரிப்பார் எவருமில்லாத நிலையிருப்பின், அனாதைகளாகும் குழந்தைகளில் பலர் தாதாக்கள், ரவுடிகள் போன்றோரால் அடிமைகள் ஆக்கப்பட்டு, பிச்சையெடுத்தல், திருடுதல் போன்ற தொழில்களில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்; பிள்ளைகள் வளர்ந்து ஆளாகும் நிலையில், போதைப் பொருள் கடத்தலிலும், கொலை கொள்ளை போன்ற கொடூரமான குற்றச் செயல்களிலும் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
அவர்களிடமிருந்து இவர்கள் மீட்டெடுக்கப்படுதல் என்பது சாத்தியப்படுவதே இல்லை. இப்படிச் சிறாராயிருந்து பெரும் குற்றச் செயல் புரிவோரின் எண்ணிக்கை நாளும் பெருகிக்கொண்டே இருக்கிறது.
இவர்களைக் குற்றச் செயல்களில் பழக்கப்படுத்திய தாதாக்களும் ரவுடிகளும் தண்டிக்கப்படவேண்டிய குற்றவாளிகள். எனினும், பெற்ற பிள்ளைகள் மீதான பாசத்தைத் துறந்து அவர்களை அனாதைகள் ஆக்கிய, அதீதப் பாலியல் வெறியர்களான பெற்றோர்களும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் ஆவார்கள். எனவே.....
'ஈன்றெடுத்தக் குழந்தைகளை அனாதைகள் ஆக்கிவிட்டுக் கள்ள உறவுக்காக ஓடிப்போவது தண்டனைக்குரிய குற்றச் செயல்' என்று உரிய முறையில் அரசு ஆணை பிறப்பிப்பது அவசியமானதும் அவசரமானதுமான தேவையாகும்.
பிள்ளைப் பாசத்தைத் துடைத்தெறிந்துவிட்டு காம சுகம் துய்க்க 'ஓடிப்போதல்' செய்வோரைத் தேடிக் கைது செய்து, வழக்குத் தொடுத்து அதிகபட்சத் தண்டனை பெற்றுத்தருவது மட்டுமே, சிறார்ப் பருவக் குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்காமல் தடுப்பதற்குரிய அரிய வழியாகும்.
==========================================================================