ஜப்பானியர் நாகரிகம்:
பொது இடங்களைத் தூய்மையாக வைத்துக்கொள்வது; அவ்விடங்களில், பிறரை இடிக்காமலும் தள்ளாமலும் நடந்து செல்வது; வரிசையில் நிற்கும்போது அமைதி காப்பது முதலானவை ஜப்பானியரிடமிருந்து இந்தியா போன்ற நாடுகளில் வாழ்பவர்கள் அவசியம் கற்றுக்கொள்ள வேண்டிய உயர் நாகரிகமாகும்.
பற்று:
இவர்கள் தம் மொழியின் மீதும் நாட்டின் மீதும் கொண்டுள்ள பற்று பெரிதும் போற்றுதற்குரியது. ஆங்கில நூல்களை வாசிக்கிறார்கள் எனினும், ஜப்பானிலுள்ள நூலகங்களில் மிக அதிக எண்ணிக்கையில் இடம்பிடித்திருப்பவை ஜப்பான் மொழியில் அச்சிடப்பட்ட புத்தகங்கள்தான்.
துணிவு:
எரிமலைகளுக்கு மிக அருகில் வாழ்ந்திட நேர்ந்தும் அச்சத்திற்கு இடம் தராமல் வாழ்கிறார்கள்; நாள்தோறும் தமக்கான பணிகளுக்குச் செல்லும்போதெல்லாம் அவற்றின் அழகை ரசித்தபடி செல்வது இவர்களின் அஞ்சாமைக்கு எடுத்துக்காட்டாகும்.
மனக்கட்டுப்பாடு:
இவர்களின் இரவு நேர உல்லாசப் பொழுதுபோக்குகளில் மதுவுக்கும் இசைக்கும் முக்கிய இடமுண்டு என்றாலும், மிகையாகக் குடித்துவிட்டு உளறித் திரியும் போக்கு இங்கு இல்லை.
பெண்மை போற்றுதல்:
பெண்களிடம் வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபடுதல், ஆபாசமாகப் பேசுதல் போன்ற இழிசெயல்களை இவர்கள் செய்வதே இல்லை.
பாலுறவுத் தூண்டல்:
தேவை கருதிப் பாலுறவு தொடர்பான 'காமசூத்ரா' போன்ற நூல்களை வாசிக்கிறார்கள். உடலுறவு சம்பந்தப்பட்ட படங்களைப் பார்க்கும் பழக்கமும் உண்டு.
நேர்மை:
ஜப்பானியரில் பலரும் வெளியிடங்களுக்குச் செல்லும்போது தத்தம் வீடுகளைப் பூட்டிக்கொண்டு செல்வதில்லை என்பது நம் போன்ற நாட்டவரை வெட்கித் தலைகுனிந்திடச் செய்யும் நிகழ்வாகும்.
சோகச் செய்தி:
சாந்தகுணமும், அன்புணர்ச்சியும் கொண்டவர்கள் வாழும் ஜப்பானில் தற்கொலை நிகழ்வுகளும் நிறையவே இடம்பெறுகின்றன என்பது வருத்தம் தரும் செய்தியாகும். ஒவ்வொரு திங்கட்கிழமையும் எவராவது ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொள்கிறாராம்.
எது எப்படியோ, மிகச் சில குறைபாடுகளையும் ஏராள நிறை குணங்களையும் கொண்ட ஜப்பான் மக்களிடமிருந்து நாம் கற்கவேண்டியவை நிறையவே உள்ளன என்பது கருத்தில் கொள்ளத்தக்கவை ஆகும்.
==========================================================================10.03.2014 'குங்குமம்' இதழில் வெளியான, பிரபல எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் கட்டுரையிலிருந்து திரட்டியத் தகவல்களின் தொகுப்பு இதுவாகும்.
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கும், குங்குமம் இதழுக்கும் என் நன்றி.