பிறந்த நாள் கொண்டாட்டத்தைத்தான் 'ஜெயந்தி விழா' என்கிறார்கள்.
'காந்தி ஜெயந்தி' அனைவராலும் அறியப்பட்ட ஒன்று. காந்தியடிகள் மறைந்த பிறகு தொடர்ந்து ஆண்டுதோறும் இவ்விழா கொண்டாடப்படுகிறது.
இன்று நாடெங்கும் 'அநுமன் ஜெயந்தி' கோலாகலமாகக் கொண்டாடப்படுவதை ஊடகங்கள் தலைப்புச் செய்தியாக வெயியிட்டுள்ளன. ஆண்டுதோறும் 'கிருஷ்ண ஜெயந்தி' கொண்டாடுவதும் வழக்கத்தில் உள்ளது.
காந்தி, ஒரு மனிதர். அனுமனும்[குரங்கைக் கடவுளாக்கியது நம் ஆன்மிகவாதிகள் நிகழ்த்திய உலகமகா சாதனை!] கிருஷ்ணனும் கடவுள்கள்.
இவர்கள் கடவுள்களேயாயினும், 'தற்காலிகக் கடவுளர்' இனத்தில்தான் இவர்களைச் சேர்க்க முடியும். காரணம்.....
கடவுள் எனப்படுபவர் ஆதியும் அந்தமும்[தோற்றமும் மறைவும் அல்லது பிறப்பும் இறப்பும்] இல்லாதவர் என்று ஆன்மிக முன்னோடிகள் சொல்லியிருக்கிறார்கள்.
அவ்வாறு சொல்லாமல், 'இந்தக் காலக்கட்டத்தில் இப்படியாகக் கடவுள் தோன்றினார்' என்று சொல்லியிருந்தால், தோன்றிய அவர் பின்னொரு காலக் கட்டத்தில் மறைந்துபோவார் என்று கருதுவதற்கு வாய்ப்புண்டு.
'தோன்றுகிற எந்தவொன்றும் மறைந்துபோவது இயற்கை விதி' என்பதால்.....
'அந்த விதியை வகுத்தவரே நாம் தொழுகிற கடவுள்தான். அவரைப் பொருத்தவரை அந்த விதி செல்லுபடி ஆகாது' என்றெல்லாம் விரிவானதும் தெளிவானதுமான விளக்கங்களையும் தந்திருக்கிறார்கள் அவர்கள்.
ஆக, பிறப்பும் இறப்பும் இல்லாத கடவுளே 'நிரந்தரக் கடவுள்' ஆவர் என்பது இங்கு உய்த்துணரத்தக்கது. இவ்வாறன்றி, இன்ன நாளில், இன்ன வகையில் தோன்றினார் என்று சொல்லப்படும் கடவுளரைத் 'தற்காலிகக் கடவுள்கள்' என்று சொல்வதே ஏற்புடையதாகும்..
தற்காலிகக் கடவுள்களான கிருஷ்ணரும் அனுமனும் இம்மண்ணில் பிறந்தவர்கள், அல்லது பிறப்பிக்கப்பட்டவர்கள்[வெகு சுவாரசியமான கதைகள் உள்ளன]
தற்காலிகக் கடவுள்களான இவர்கள் வெகு காலத்திற்கு முன்னரே பிறந்தார்கள் என்கின்றன இவர்களைப் பற்றியக் கதைகள். கதைகள் எல்லாம் உண்மை நிகழ்ச்சிகள் என்பதாக நம்ப வைத்து, அவர்கள் பிறந்ததாகச் சொல்லப்படுகிற நாட்களில் 'ஜெயந்தி விழா' கொண்டாடி வருகிறார்கள்.
கொண்டாடட்டும். வரவேற்போம்.
பிறந்த நாள் விழா கொண்டாடுகிறவர்கள், ஏன் இவர்களின் இறந்த நாட்களை[பிறந்த எதுவும் இறந்தே ஆகவேண்டும் என்பது இயற்கை விதி] 'நினைவேந்தல்' நிகழ்வுகளாகக் கொண்டாடுவதில்லை என்னும் கேள்வி நீண்ட நெடு நாட்களாக நம் மனதை அரித்தெடுத்தவாறுள்ளது.
இவர்களின் இறந்த நாட்கள் பற்றி எவரும் கதைகள் எழுதி வைக்காததால், அந்நாட்கள் பற்றி அறிந்துகொள்ள இயலவில்லையா?
"ஆம்" என்றால், புதிதாகக் கதைகள் எழுதி, 'இவை பழம்பெரும் புராணங்களில் இடம்பெற்றுள்ளன; அண்மையில்தான் ஆன்மிக அறிஞர்கள் கண்டறிந்து சொன்னார்கள்' என்று பரப்புரை செய்துவிடலாம்.
ஆண்டுதோறும் ஜெயந்தி விழாக்களை நடத்தி, ஆன்மிகப் பணி புரிகிற பெருந்தகைகள் இதைச் செய்வார்கள் என்று நம்புகிறோம்.