முதுகலை இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தபோதுதான் கடவுள் என்னைக் கதாநாயகனாகக் கொண்டு அங்கே ஒரு காதல் நாடகத்தை நடத்தினார். நாயகியின் பெயர் சாந்தா.
வெறுமனே "சாந்தாவைத் தெரியுமா?" என்று கேட்டால் அசடு வழிபவர்கள், 'மியூசியம் சாந்தா....." என்று ஆரம்பித்தாலே போதும், "மியூசியம் சாந்தாவா? அந்தக் குட்டிக்கு இன்னும் கல்யாணம் ஆகலைதானே?" என்றொரு கேள்வி கேட்டு ஏக்கப் பெருமூச்சு விடுவார்கள்.
கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அந்தத் தேசத்தின் நனவுலகத் தேவதை அவள்.
கமகமக்கும் மலையாள தேசத்து மண் வாசனையை அவள் மேனியில் நுகரலாம்.
அவளை ஒரு முறை பார்த்து ரசிக்கும் வாய்ப்புக் கிடைத்தால் போதும், அந்த நாட்டு அடுக்கடுக்கான மலைகளின் செழுமையையும், அணிவகுத்துச் செல்லும் ஆறுகளின் அழகையும் கண்டு இன்புறாதவர்களின் ஏக்கத்தை அது ஈடு செய்யும்.
அவள் வேலை பார்த்தது நகரத்தின் பிரதானப் பூங்காவிலிருந்த 'மியூசியம்' அலுவலகத்தில்[சாந்தா, 'மியூசியம் சாந்தா' ஆனது எப்படி என்று இப்போது உங்களுக்குத் தெரிந்திருக்கும்].
நான் தங்கியிருந்தது பூங்காவுக்கு மிக அருகிலுள்ள ஒரு மாணவர் விடுதியில். காற்று வாங்குவது, பாடம் படிப்பது, இயற்கை அழகை ரசிப்பது, பொழுதுபோக்காகப் பெண்களை நோட்டம் விடுவது என்றிவை எல்லாவற்றிற்கும் புகலிடமாக அமைந்தது அந்தப் பூங்காதான்.
மியூசியம் சாந்தாவை முதன்முறையாக நான் பார்த்ததும், கையிலிருந்த புத்தகம் நழுவியது தெரியாமல் என்னை மறந்து, என்னைச் சுமந்திருந்த மண்ணுலகையும், அதனோடு இணைந்து சுழன்றுகொண்டிருந்த அண்டசராசரங்களையும் மறந்து நேரம் போவது தெரியாமல் பிரமித்து நின்றது அந்தப் பூங்காவில்தான்.
அது நிகழ்ந்த நாளிலிருந்து, காலையில் அவள் அலுவலகத்துக்கு வருகைபுரியும்போதும், மாலையில் வீடு திரும்பும்போது பூங்கா நுழைவாயிலில் அவளைத் தரிசிக்கத் தவம் கிடப்பது வழக்கமாகிப்போனது.
அவளிடம் பேச்சுக்கொடுத்துப் பழகி, எவ்வாறேனும் என் நண்பி ஆக்கிகொள்வது என்று முடிவெடுத்தேன்.
ஒரு நல்ல நாள் பார்த்துக் காத்திருந்து, பூங்காவில் எதிர்ப்பட்டபோது, "என்ன வேலை பார்க்கிறாய்?" என்று அவளிடம் கேட்டேன். பதிலில்லை.
"இங்கே வேலைக்குச் சேர்ந்து எவ்வளவு நாளாச்சி?" என்று வார்த்தைகளுக்கு அழுத்தம் கொடுத்துக் கேட்டேன். பலனில்லை.
"நான் பல்கலைக்கழக முதுகலை மாணவன். படிப்பு முடியப்போகிறது. பட்டம் வாங்கி அடுத்த ஆண்டே வேலைக்குப் போய்ச் சம்பாதிக்க ஆரம்பித்துவிடுவேன்" என்ற என் சுய தம்பட்டம் அர்த்தமற்றதாக ஆகிப்போனது.
அவள் என்னைக் கடந்து சென்றுவிட்டாள்.
அவளை நண்பியாக்கிக்கொள்ளும் என் ஆசை நிராசை ஆனதற்காக வருந்தினேன்.
அடுத்த சில நொடிகளில் 'அது மலையாள மண். அவளுக்குத் தமிழ் தெரிந்திருக்க வாய்ப்பில்லை' என்பது புரிந்தபோது ஆறுதலாக இருந்தது.
அதே இடத்தில், அந்தக் கணத்திலேயே 'மலையாளம் படிப்பது' என்று முடிவெடுத்ததோடு, ஓர் ஓய்வு பெற்ற மலையாள மொழி ஆசிரியரைச் சந்தித்து ஓரளவு எழுதவும் நன்றாகப் பேசவும் கற்றேன்[மலையாளம் பேசக் கற்பது மிக எளிது. எழுதக் கற்பது சறே கடினம்].
அப்புறம்?
அப்புறமென்ன, மீண்டும் பூங்கா வாயிலில் தவமிருப்பது மறுதொடக்கம் ஆனது.
இனியும் தாமதிப்பது நல்லதல்ல என்ற முடிவோடு, ஒரு புனித வெள்ளிக்கிழமை நாளில், எதிரில் சாந்தா வரும்போது தற்செயலாக நிகழ்வதுபோல் வழிமறித்து, அவள் முகம் பார்த்துப் புன்னகைத்தேன். அது அவள் முகத்திலும் பிரதிபலித்தது.
அடுத்தடுத்த நாட்களில் முட்டிக்கொள்வதுபோல் மிக நெருங்கி நின்றபோதெல்லாம் நாணம் விரவிய புன்னகையால் என்னைப் புளகாங்கிதப்படுத்தினாள்.
என் மனதில் துணிவு பிறந்தது.
மலையாள மொழியில், அடித்துத் திருத்தியும் திருத்தியதை அடித்து மீண்டும் திருத்தியும், திருத்தியதைத் திரும்பத் திரும்பப் படித்துப் பார்த்தும் எழுதிய காதல் கடிதத்துடன் அன்று சாந்தாவை எதிர்கொண்டேன்.
கடிதத்தை நீட்டினேன்.
வாங்கிக்கொண்டாள்; ஒதுங்கி நின்று வாசித்தாள். முகத்தில் மலர்ச்சி படர்வது தெரிந்தது. ஆனால், அடுத்த சில நொடிகளில் அது காணாமல் போனது.
"மலையாளத்தில் எழுதியிருக்கீங்களே....." என்று தமிழில் கேட்டாள். அது எனக்கு மகிழ்ச்சியளித்தாலும், அவளின் பேச்சில் 'ஏன்?' என்னும் கேள்வி தொக்கியிருப்பதை உணர்ந்து, "உனக்குத் தமிழ் தெரியாது என்பதால் மலையாளத்தில் எழுதினேன்" என்றேன்.
"நான் கேரளத்துப் பொண்ணுதான். மலையாளம் தெரியும். தமிழும் தெரியும். நான் சிறுமியா இருந்தபோது நாலு வருசம்போல என் அப்பா தமிழ்நாட்டில் வேலை பார்த்திருக்கார்" என்றாள் சாந்தா.
"உன்னைச் சந்திச்ச புதுசில் ஒரு தடவை தமிழில் பேசினேன். நீ பதில் சொல்லாமல் போனாய்....."
குறுக்கிட்டாள் சாந்தா. "முன்பின் அறிமுகமே இல்லாதவர் கேள்வி கேட்டா ஒரு பொண்ணு உடனே பதில் சொல்லிடுவாளா என்ன? நீங்க மலையாளத்தில் பேசியிருந்தாலும் நான் பதில் சொல்லியிருக்க மாட்டேன். தப்பாப் புரிஞ்சிட்டீங்க" என்றாள்.
"தப்புதான். உனக்காக அவசர அவசரமா ஒருத்தர்கிட்ட மலையாளம் எழுதப் படிக்கக் கத்துகிட்டேன். அதனாலதான், மலையாளத்தில் என் காதலை வெளிப்படுத்த முடிஞ்சுது. என் காதலை ஏற்றுக்கொள்வாய் இல்லையா?" என்று கேட்டு அவளின் பதிலுக்காக ஆவலுடன் காத்திருந்தேன் நான்.
வைத்த விழி வாங்காமல் சற்று நேரம் என் முகத்தையே உற்றுப்பார்த்துவிட்டு, உணர்ச்சியற்ற குரலில் பேசினாள் சாந்தா. "ஆரம்பத்தில் நீங்க யாரோ நான் யாரோன்னுதான் இருந்தேன். நீங்க கல்லூரி முதுகலை மாணவர். உங்க மதிக்கத்தக்க தோற்றமும், தினம் தினம் பூங்கா வாசலில் தவம் கிடந்து என்னோட பேசிப் பழக ஆசைப்பட்டதும் எனக்கு ரொம்பவே பிடிச்சிருந்தது. நீங்க என்னைக் காதலிக்கிறதா சொல்லப்போகும் அந்த நாளுக்காகவும் காத்திருந்தேன். ஆனா, அதைச் சொல்லுறதுக்கு ரொம்பவே அவகாசம் எடுத்துட்டீங்க. அதன் விளைவு, நான் இன்னொருத்தர் மனைவியா ஆகப்போறேன். நான்கு நாள் முன்புதான் எனக்குக் கல்யாண நிச்சயதார்த்தம் நடந்தது."
-சொல்லி முடித்தபோது சாந்தாவின் கண்கள் சற்றே கலங்கியிருப்பது தெரிந்தது.
அவள் இரு கைகூப்பி விடைபெற்று நகர்ந்தாள்.
எனக்குத் தலை சுற்றியது. சுற்றியிருந்த பூச்செடிகள், நிழல்தரும் மரங்கள், நடமாடும் மனித உருவங்கள் என்று அனைத்துமே சுழல ஆரம்பித்தன. மனம் சோர்ந்து, உடல் தளர்ந்து அருகிலிருந்த புல் தரையில் சரிந்து விழுந்தேன்!
==========================================================================