அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வெள்ளி, 28 ஜனவரி, 2022

'அது'வே மனித குலத்தின் பொற்காலம்!!!

முன்னெச்சரிக்கை! 'பொறுமை கடலினும் பெரிது' என்னும் முன்னோர் மொழியை மனதில் இருத்தி வாசிப்பைத் தொடருங்கள்.

னிதன் 100% விலங்காக வாழ்ந்தவரை அவனுக்குக் கடவுள் குறித்தான சிந்தனை எல்லாம் இல்லை.

உணவும் உடலுறவும் மட்டுமே அவனுடைய முக்கியத் தேவைகளாக இருந்தன. இந்த இரண்டிற்காகவும் சக மனிதர்களுடன் போராட வேண்டியிருந்தது.

அந்தப் போராட்டத்தில் பலவீனமானவன் பலசாலியிடம் பொருளும் பெண்ணுமாகிய தனக்குரிய உடைமைகளை இழந்ததோடு, தன் உயிரையும் இழக்கும் நிலை உருவாகும்போது, அவனின் தாள் பணிந்து தன் மீதான தாக்குதலைக் கைவிடும்படிக் கெஞ்சினான்[மொழி தோன்றாதபோது சைகையில்]சிந்திக்கும் அறிவைப் பெற்ற பின்னரும் இந்நிலை தொடர்ந்தது.

பலசாலி, சில நேரங்களில் மனம் இரங்கி அவனை உயிர் பிழைத்திருக்க அனுமதித்திருப்பான்; கொல்லவும் செய்திருப்பான்.

இவ்வகையில், பலசாலிகளிடம் பலவீனமானவர்கள் பணிவு காட்டியும் துதிபாடியும் வாழும் நிலை உருவானது.

காலப்போக்கில், சிந்திக்கும் திறன் படிப்படியாக அதிகரித்துவந்த நிலையில், இடிமின்னல், கடும் மழை, புயல் போன்றவற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டபோது, அவற்றிடமும் கெஞ்சிக் கூத்தாடினால் பலன் கிடைக்கும் என்று மனிதர்கள் நம்பினார்கள்; செயல்படுத்தினார்கள்.

முன்னெச்சரிக்கையாக, அவற்றால் தீங்கு விளையாத நேரங்களிலும் அவற்றிற்கு, வருண பகவான், அக்கினி தேவன், வாயு பகவான் என்றெல்லாம் பெயர்கள் சூட்டிக் கடவுள்களாக்கி வழிபடுவதை வழக்கமாக்கினார்கள். அதாவது, கடவுள் வழிபாடு நிரந்தரமான ஒரு சமூகச் சடங்காகிப்போனது.

சிந்திக்கும் ஆற்றல் அதிகரித்துவந்த நிலையில், இவையெல்லாம் தங்களுக்கு நன்மை பயப்பதோடு, தீங்கும் இழைப்பவை என்று எண்ணினார்கள் மனிதர்கள்;  அனைத்திற்கும் மேலான ஒரு 'சக்தி' இருப்பதாகவும் நினைத்தார்கள்.

அதை ஒரு 'சக்தி' என்று சொல்வதில் திருப்தி அடையாமல் அதற்குச் சிந்திக்கும் திறனும், அனைத்தையும் படைத்து இயக்குகிற பேரறிவும் இருப்பதாகக் கருதிக் 'கடவுள்' என்று பெயர் சூட்டினார்கள்.

படைப்பில் நல்லவையும் கெட்டவையும் கலந்திருப்பதால், மேம்பட்ட சக்தியாகிய அந்தக் கடவுளும் இவ்விரண்டின் 'இருப்பிடமாக' இருத்தல் வேண்டும் என்று ஆராய்ந்து கண்டறியத் தவறியதால், கடவுள் கருணை வடிவானவர் என்ற ஒரு 'முடிவை' மட்டுமே தேர்வு செய்தார்கள்.

அவருக்குக் கோயில்கள் எழுப்பி விழாக்கள் நடத்தி மகிழ்விப்பதன் மூலம்  தங்களுக்கான பாதுகாப்பை மேம்படுத்திக்கொள்ள முடியும் என்று முழுமையாக நம்பினார்கள்.

இந்த நம்பிக்கை உலகின்  பலதரப்பட்ட மக்கள் குழுக்களிடமும் பரவியிருந்தது. தாம் நம்பிய கடவுள்களுக்குத் தத்தம் விருப்பத்திற்கிணங்க பெயர் சூட்டிக்கொண்டன அக்குழுக்கள்.

குழுக்கள் அனைத்தும் தத்தம் கடவுளையும், அவரை வழிபடும் நெறிமுறைகளையும் பிற குழுக்களுக்கும் பரப்புவதில் ஆர்வம் கொண்டன[அது வெறியாகவும் மாறியதுண்டு]; அதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டன. 

இதற்கு மதங்கள் பயன்பட்டன[தனி மனிதர்களின் கடவுள் அல்லது படைப்பு குறித்த கொள்கைகளே காலப்போக்கில் மதங்களாக உருவெடுத்தன].

மேற்கண்ட உண்மைகளை உலகோர் அனைவரும் உணர்ந்து சிந்திக்கும் காலம் வரும்போது, அனைத்து மதங்களும் மறைந்துபோகும். அனைத்துக் கடவுள்களும் காணாமல் போவார்கள்; அல்லது, தேவையற்றவர்களாக ஆவார்கள்.

அத்தகையதொரு காலம் வருமா?

வரும். 

வரும்போது, கடவுள்களையும் மதங்களையும்[இவற்றால் மக்கள் பெற்ற தீமைகளோடு ஒப்பிட்டால் நன்மைகள் மிகவும் குறைவு] நம்பியதால், ஏராள மூடநம்பிக்கைகளைச் சுமந்து வாழும் நிலை முற்றிலுமாய் அழிந்தொழிந்து, மனிதர்கள் மனிதர்களுக்காகவும் பிற உயிரினங்களின் நலன்களுக்காகவும் மட்டுமே தங்களின் ஆறறிவைப் பயன்படுத்துவார்கள். 

அதுவே மனித குலத்தின் பொற்காலம் ஆகும்!

==========================================================================