எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

திங்கள், 31 ஜனவரி, 2022

இறப்புக்குப் பிறகு 'விருது' தருவது விரும்பத்தக்கதா?

இந்த மூதாட்டி, மேற்குவங்கத்தைச் சேர்ந்த 90 வயதான பாடகி சந்தியா முகர்ஜி.
 
தனக்கு நடுவணரசு அறிவித்த 'பத்மஸ்ரீ' விருதை வாங்க மறுத்துள்ளார் இவர். 
இது குறித்து இவருடைய மகள் சவுமி சென்குப்தா கூறுகையில், "மத்திய அரசு அதிகாரி தொலைபேசியில் அழைத்து விருது குறித்துத் தெரிவித்தார். அதை ஏற்க என் தாய் சந்தியா மறுத்துவிட்டார்" என்றார். 

சந்தியா முகர்ஜியின் மகள் சவுமி சென்குப்தா கூறும் காரணம்.....

"இவரைப்போன்ற ஒரு மூத்த கலைஞருக்கு, 90 வயதிற்குப் பிறகு பத்மஸ்ரீ வழங்குவது அவமானகரமானது."

*   *   *   *   *

இந்தப் பெண்ணின் உள்ளக் குமுறலை, பரிசுக்கான தேர்வுக் குழுவினர் பரிசீலனைக்கு ஏற்பது அவசியம் என்றே தோன்றுகிறது.

என்னதான் மனதிடத்தை வளர்த்துக்கொண்டிருந்தாலும், விரைவில் அரவணைத்துக்கொள்ளக் காத்திருக்கும் மரணம் அவ்வப்போது நினைவுக்கு வரும் என்பதால், 90 விழுக்காடு பற்றற்ற மனநிலையிலேயே இருப்பார்கள் இந்த வயதுக்காரர்கள். இவர்களைப் பொருத்தவரை பாராட்டுகளும் பரிசுகளும் விருதுகளும் வெகு அற்பமானவைதான்.

உலக அளவில் பேரறிஞராகப் போற்றப்பட்ட அறிஞர் 'பெர்னார்டுஷா'வுக்கு 'நோபல்' பரிசு  அறிவிக்கப்பட்டபோது, முதுமை எய்தியிருந்த அவர் அதைப் பெற்றுக்கொள்ள மறுத்ததோடு, "வெள்ளத்தில் சிக்கிப் போராடியபோது கண்டுகொள்ளாமல், கரையேறிய பிறகு ஒருவருக்குக் கைகொடுப்பது போல இருக்கிறது இது" என்னும் பொருள்பட அவர் சொன்னதாகப் படித்தது நினைவுக்கு வருகிறது[தன் மனைவியின் வற்புறுத்தலால் அப்பரிசை ஏற்றார் என்பது கூடுதல் செய்தி].

மிகவும் வயதானவர்களுக்குப் பரிசு கொடுப்பது போலவே, இறந்துவிட்ட சாதனையாளர்களுக்குப் பத்ம விருதுகள் வழங்குவதும் இங்கே நடந்துகொண்டுதான் இருக்கிறது[இவர்களின் வாரிசுகளுக்குக் கணிசமான அளவிலான பணப்பயன் தவிர வேறு என்ன பயன் கிடைக்கிறது என்று தெரியவில்லை].

மரணமடைந்த விருதுக்காரர், தன் வாரிசு தனக்காக விருது பெறும் காட்சியை ஆன்மா உருவில் வந்திருந்து கண்டு மகிழ்வார் என்று நம்புகிறார்களோ!?

ஹி...ஹி...ஹி!!!

==========================================================================