திங்கள், 31 ஜனவரி, 2022

'இ.வலையில்' விழும் கணவர்களும், 'சைபர் விதவை'களாகும் மனைவிகளும்!!!

"ஒரு பெண்ணால் எதை வேண்டுமானாலும் தாங்கிக்கொள்ள முடியும். ஆனால், கணவர் பேசாமலே புறக்கணிப்பதைத் தாங்கிக்கொள்ளவே இயலாது" என்று கண்ணீர் விடுகிறார்  ஒரு பெண்[பெயரும் ஊரும் தவிர்க்கப்படுகின்றன].

சமீபத்தில் மனநல நிபுணரிடம் ஆலோசனை பெற்று வந்திருக்கும் சென்னையைச் சேர்ந்த ஒரு பெண்மணி, ‘‘எனது கணவர் இன்டர்நெட்டுக்கு அடிமையாகி விட்டார். எத்தனையோ விதங்களில் எடுத்துச் சொல்லியும் அவர் கேட்பதாக இல்லை. கணவருடன் ஒரே வீட்டிற்குள் வசித்தாலும், (இணையத்தால்)நான் விதவையைப் போன்று வாழ்ந்துகொண்டிருக்கிறேன்’’ என்று கண்கலங்கிக் கண்ணீர் வடிக்கிறார்.

"வீட்டிற்கு வந்தால் இரண்டொரு வார்த்தைகள் பேசுகிறார். பின்பு இன்டர்நெட்டில் மூழ்கிவிடுகிறார். பேஸ்புக்கில் அவரது புரோபைலுக்கு நானும் ரெக்வெஸ்ட் அனுப்பினேன். அப்படியாவது கணவரோடு பேச்சுத் தொடர்பில் இருக்கலாம் என்று நினைத்தேன். ஆனால், அவரைக் கண்காணிக்க நான் அப்படிச் செய்வதாகக் கூறி நிராகரித்துவிட்டார்" என்று புலம்புகிறார்  நிறையப் படித்துப் பட்டங்கள் பெற்ற ஒரு நடுத்தர நகர்ப்புறப் பெண்.

"கணவரிடம் இருந்து எனக்கு மனோரீதியான பங்களிப்போ, உடல்ரீதியான பங்களிப்போ கிடைப்பதில்லை; கிடைத்தாலும் சில நேரங்களில் அது பெயரளவுக்கே கிடைக்கிறது" என்கிறார் தன்னவரைக் காதலித்துக் கல்யாணம் செய்த  ஒரு குடும்பத் தலைவி.

"ஓரு நாள் இரவு அவர் லேப்டாப்புடன் இருந்த அறைக்குள் நான் திடீரென்று சென்றுவிட்டேன். அங்கு நான் பார்த்த காட்சி என்னை அதிரவைத்துவிட்டது. அவர் ஹெட்செட் மாட்டியிருந்தார். மைக்ரோபோனில் மிக மெல்லிய குரலில் யாருடனோ பேசிக்கொண்டிருந்தார். வீடியோ சாட்டிங்கில் இருக்கிறார் என்பது தெரிந்தது. ஸ்கிரீனில் ஒரு பெண் நிர்வாணமாக நின்றிருந்தாள். அவர்கள் இருவரும் பரஸ்பரம் பார்த்துக்கொண்டு ஏதேதோ செய்துகொண்டிருந்தார்கள். நான் பின்னால் நிற்பதைப் பார்த்ததும் அவர் திடுக்கிட்டு, லேப்டாப்பை மூடிவைத்துவிட்டு உடலைத் துணியால் போர்த்துக்கொண்டு குதித்து எழுந்தார். நடந்ததை எல்லாம் நினைத்துப் பார்த்தபோது இந்த உலகமே நொறுங்கி என் தலையில் விழுவதுபோல் இருந்தது" என்று சொல்லிக் குமுறிக் குமுறி அழுதார்  நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணொருத்தி. 

இவர்களைப் போன்று குமுறும் பெண்கள் இன்றளவில் நிறைய நிறைய நிறையவே இருக்கிறார்களாம்.

இந்த எண்ணிக்கை கிடு கிடு கிடுவென அதிகரிக்கவும் செய்கிறதாம்.

ஒரே வீட்டில் வாழ்ந்துகொண்டிருந்தும், கணவர்களால் 'அது விசயத்தில் முற்றிலுமாய்ப் புறக்கணிக்கப்பட்ட அபலைகளாக, விதவைகளைப் போல் வாழும் பரிதாபத்துக்குரிய பெண்களைத்தான், 'சைபர் விதவைகள்' என்று குறிப்பிட்டு, விரிவானதொரு கட்டுரையை வெளியிட்டிருக்கிறது 'தினத்தந்தி'.

'கடந்த ஐந்தாண்டுகளில் நடந்த விவாகரத்துகளைக் கணக்கிட்டால், அவற்றில் 30 சதவீதத்திற்கு, ஆண்கள் இன்டர்நெட்டில் மூழ்கிக்கிடப்பது காரணமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இது வழக்குத் தொடுத்த பெண்களின் எண்ணிக்கை மட்டுமே. சகித்துக்கொண்டு கணவரின் வீட்டிலேயே தனிமரமாக வசிக்கும் பெண்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இரண்டையும் சேர்த்தால் சதவீதக் கணக்கு மளமளவென உயர்ந்துவிடும்.....

'இன்றைய நடுத்தர வயதுக்காரர்களின் இரவு உலகம் வித்தியாசமானதாக இருக்கிறது. பழைய பள்ளி, கல்லூரித் தோழமையோ, பேருந்து, ரெயிலில் கிடைக்கும் தோழமையோ சமூகவலைத்தளங்கள் வழியாகப் பலரது இரவு நேரத்தை அபகரித்துக்கொள்கிறது. அதில் சிக்கிக்கொள்ளும் ஆண்கள் அருகில் இருக்கும் தங்கள் மனைவிகளின் தனிமையையோ, ஏக்கத்தையோ, எதிர்பார்ப்புகளையோ நினைத்துப்பார்ப்பதே இல்லை.....

'அடுத்தவர்களோடு ஆன்லைன் இரவு உலகத்தில் வலம் வருகிறவர்களால் திருமணத்திற்குப் பிந்தைய முரண்பாடான உறவுகள் தோன்றிவிடுகின்றன. போட்டோ வழியாக ஒரு லைக்கிலும், கமெண்ட்டிலும் உருவாகும் பந்தங்கள் மெல்ல மெல்ல போன் தொடர்புகளுக்கும், போன் செக்ஸூக்கும் துணைபுரிகின்றன. தடம்மாறிச் செல்லும் இத்தகைய ஆண்களைச் சகித்துக்கொண்டு பிள்ளைகளுக்காகவும், சமூகத்திற்காகவும் பல பெண்கள் பொருந்திப்போய்க் கொண்டிருக்கிறார்கள்; வீட்டில் நான்கு சுவர்களுக்குள் கண்ணீரோடு தனித்தீவில் இருப்பதுபோல் ஏராளமான 'சைபர் விதவைகள்' வாழ்ந்து வருகிறார்கள்.....'

என்றிவ்வாறெல்லாம், குடும்பப் பெண்களின் அவல நிலை குறித்து வெகுவாகக் கவலைப்பட்டு மனம் குமுறியிருக்கிறது தினத்தந்தி.

விரிவடைதலைத் தவிர்க்க இத்துடன் நிறைவு செய்யப்படுகிறது இந்தப் பதிவு. தந்தியின் முழுக் கட்டுரையையும் வாசிக்க விரும்புவோர் கீழ்க்காணும் முகவரியைச் சொடுக்கலாம்.


=========================================================================

*தினத்தந்தி இதழுக்கு நம் நன்றி. வருகைபுரிந்து, பதிவை முழுமையாகப் படித்துமுடித்த உங்களுக்கும்தான்!

நன்றி... நன்றி!