அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

செவ்வாய், 1 பிப்ரவரி, 2022

ஜக்கி வாசுதேவின் 'கிடு கிடு' வளர்ச்சியும் 'சிறு சிறு' சரிவும்!!!

கர்நாடக மாநிலத்தில் தெலுங்குக் குடும்பம் ஒன்றில் பிறந்தவர் ஜக்கி என்ற ஜெகதீஷ். இவரது அம்மா சுசீலா. அப்பா பெயர் வாசுதேவ். பின்னாட்களில் தனது பெயரான ஜெகதீஷைத்தான் சுருக்கி 'ஜக்கி' என்றும், தன் தந்தையின் பெயரான வாசுதேவை அதோடு சேர்த்து  'ஜக்கி வாசுதேவ்' என்றும் வைத்துக் கொண்டார்.

சிறுவயதில் ஸ்ரீராகவேந்திராவின் யோக முறைகள் சிலவற்றைக் கற்றுக்கொண்ட ஜக்கி, அதைத் தீவிரமாகப் பயிற்சி செய்ய ஆரம்பித்ததுடன், அவருடைய நண்பர்களுக்கும் கற்றுக் கொடுத்தார். 

கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்தவர் ஜக்கி, 

சிறிது காலம், படிப்பிற்குத் தொடர்பில்லாத, செங்கல் சூளை நடத்துவது, கோழிப் பண்ணைகளை நடத்துவது போன்ற தொழில்களைச் செய்தார். 

கர்நாடகாவில் தன் சொந்த ஊரிலேயே சிறிய அளவில் ஒரு யோகா பயிற்சி மையத்தை நிறுவி, அனைவருக்கும் யோகா கற்றுக்கொடுத்தார். அதன் தொடர்ச்சியாக, கோவை வெள்ளியங்கிரி மலைப் பகுதியில் நிலங்களைக் குறைந்த விலைக்கு வாங்கி ஆசிரமம் தொடங்கினார். யோகா கற்றுத்தருவது தொடர்ந்தது.

நிறைய ஐ.டி துறைப் பொறியாளர்கள், அதிகப் பணிச் சுமையால் உண்டான மன அழுத்தத்தைப் போக்க ஜக்கியிடம் வந்து யோகா கற்றுச் சென்றனர். அவர்களுள் 'இன்ஃபோசிஸ்' ஊழியர்களும் அடக்கம்.

ஒரு கட்டத்தில், இன்போசிஸ் 'நாராயண மூர்த்தி'யும் ஜக்கியிடம் வந்து யோகா கற்றுக்கொண்டு, அந்த நிறுவனத்தில் உள்ள பிரச்னைகள் பற்றிய சில ஆலோசனைகளையும் பெற்றுச் சென்றார். 

அடுத்து, ஜக்கியின் வாழ்வில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது, ஆனந்த விகடன் பத்திரிகையில் அவரின் கட்டுரைத் தொடர் வெளியானதுதான்.   

‘அத்தனைக்கும் ஆசைப்படு’ என்ற பெயரில் அந்தத் தொடர் வெளியானது. அதற்காக எடுக்கப்பட்ட புகைப்படங்களில், ஜக்கி கோல்ப் விளையாடுவது, பாம்புகளைக் கையில் பிடித்திருப்பது, விலையுயர்ந்த வெளிநாட்டு கார்கள் மற்றும் பைக்குகளை ஓட்டுவது, ஹெலிகாப்டரில் பறப்பது என்றெல்லாம் போஸ் கொடுத்திருந்தார். 

ஆன்மிகம் குறித்த அவரின் வித்தியாசமான அணுகுமுறை அவரைப் பொதுமக்கள் மத்தியில் பிரபலம் ஆக்கியது.

பிரபலமான தொழிலதிபர்கள் நன்கொடை வழங்கினார்கள். சிறார்க்கான பள்ளி நடத்தியதிலும் நிறையப் பணம் சேர்ந்தது.

வெள்ளியங்கிரி மலைப் பகுதியில் 5 லட்சம் சதுர அடிகளைக் கொஞ்சம் கொஞ்சமாக வளைத்துப்போட்டார் ஜக்கி. ஈஷாவிற்குள் புதிய புதிய கட்டிடங்கள் எழுந்தன; பள்ளிக்கூடங்கள் கட்டப்பட்டன. இவற்றிற்கெல்லாம், அனுமதி வாங்குவதைப் பற்றி அவர் கவலைப்பட்டதில்லை.

எந்தவொரு கட்டுப்பாடும் இல்லாமல் 'ஆட்டம் பாட்டம்' என்று நவராத்திரிக் கொண்டாட்டம் நடத்தியதும், ஆண் பெண் வேறுபாடு இல்லாமல் வெளிநாட்டவர் அங்கே தங்கியிருந்ததும் கடுமையான விமர்சனத்துக்கு வழிவகுத்தன. இந்தவொரு நெருக்கடியான நிலையில்.....

அன்றைய முதலமைச்சர் கருணாநிதியைச் சந்தித்து, கோபாலபுரம் இல்லத்தில் இரண்டு மரக்கன்றுகளை நட்டார். அதன் விளைவாக, அவ்வப்போது தணிக்கை செய்ய வந்த அதிகாரிகள் 'கப்சிப்' ஆனார்கள்.

பின்னர் வந்த ஜெயலலிதாவும் பெரிதாக ஜக்கியைக் கண்டுகொள்ளவில்லை. இத்தனைக்கும் ஜெயலலிதா ஆட்சி நடந்தபோது, “ஜக்கி எங்கள் பிள்ளைகளை மூளைச்சலவை செய்து சாமியார்களாக மாற்றிவிட்டார்; அவர்களைப் பார்க்கவும் எங்களை அனுமதிக்க மறுக்கிறார்” என இரண்டு குழந்தைகளின் பெற்றோர், ஈஷா வாசலில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அது பரபரப்பாக அப்போது பேசப்பட்டாலும், அவை உட்பட எல்லா விவகாரங்களும், வெள்ளியங்கிரி மலைக்குள்ளே அடங்கிப்போயின.

அதன்பிறகு, ஆதியோகி என்ற பெயரில் சிவபெருமான் சிலை ஒன்றை 112 அடியில் நிறுவினார். 2017ஆம் ஆண்டு நடைபெற்ற சிவராத்திரியில் கலந்து கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி அந்தச் சிலையைத் திறந்து வைத்தார். அதோடு அந்த விழாவில், அன்றைய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி, அவரது ஒட்டுமொத்த அமைச்சரவையும் ஈஷா யோகா மைய விழாவில் கலந்துகொண்டது. ஜக்கியின் நடன ஆவர்த்தனத்துக்கு முன்னால், தமிழகத்தின் அமைச்சர்கள் கையைக் கட்டிக்கொண்டு பக்தி பரவசத்தோடு, அமைதியாக உட்கார்ந்திருந்தனர். சென்னை உயர் நீதிமன்றத்திலும், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையிலும் நீதிபதிகளாக அப்போது இருந்தவர்களும்கூட அந்த விழாவில் பங்கெடுத்தனர்.

ஜக்கியின் ஈஷா மையம் தொண்டாமுத்தூரில் உள்ளது. தொண்டாமுத்தூர் தொகுதியில் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றவரான, முன்னாள் அமைச்சர் வேலுமணி அவர்களும், ஜக்கியும் நெருங்கிய நட்பில் இருப்பவர்கள். அதனால், நில ஆக்கிரமிப்பு, காடுகளை அழிப்பது, மின்வேலி போட்டு யானைகள் மரணத்திற்குக் காரணமாக இருப்பது என்று பல குற்றச்சாட்டுகள் எழுந்தபோதும் ஜக்கிக்கு எந்தவொரு சிக்கலும் ஏற்படவில்லை.

1990கள் தொடங்கி 2000க்குப் பின்னரும் தன்னை ஒரு முற்போக்குச் சாமியாராகவே காட்டிக்கொண்ட ஜக்கியின் கருத்துக்களில், 2014க்குப் பிறகு தடுமாற்றம் ஏற்பட்டது. அதன்பிறகு அவர் வேத இந்தியா, சமஸ்கிருதம், கோயில் தனியார்மயம் என்று பேச ஆரம்பித்தார். 

குறிப்பாக, "சிவபெருமானுக்குத் தமிழ் தெரியாது; சமஸ்கிருதம்தான் தெரியும்; அதனால், அனைவரும் சமஸ்கிருதம் கற்க வேண்டும்” என்றும், “பள்ளிக்கூடங்களை நடத்துவது அரசாங்கத்தின் வேலையல்ல; அதனால், பள்ளிக்கூடங்கள் அனைத்தையும் தனியாரிடம் கொடுக்க வேண்டும்” என்றும், ”இந்து சமய அறநிலையத்துறையின் கோயில்களை அரசாங்கம் விடுவித்து, தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும்” என்றும் பேச ஆரம்பித்தார்.

இது, தமிழக பாரதிய ஜனதாக் கட்சியின் குறிப்பாக, அந்தக் கட்சியின் முன்னாள் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவின் கோரிக்கையாகவே உள்ளது. இதையடுத்து, கோயில்களை அரசாங்கத்திடம் இருந்து மீட்டு, தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஜக்கி சொன்ன கருத்துக்கு, சைவ ஆதின மடங்கள், சிவாச்சாரியார்கள் என ஆன்மீகவாதிகளே கடும் எதிர்ப்புத் தெரிவிக்கத் தொடங்கினர்.

இங்கிருந்துதான், ஜக்கியின் வாழ்க்கையில் சற்றே 'சரிவு' ஏற்படலாயிற்று. 

தி.மு.க ஆட்சி அமைந்த பிறகு, நிதியமைச்சர் பொறுப்புக்கு வந்த பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கடுமையாக ஜக்கியை விமர்சிக்க ஆரம்பித்தார். அதையடுத்து, ஜக்கி வாசுதேவ் ‘கோயில் அடிமை நிறுத்து’ விவகாரத்தை அப்படியே விட்டுவிட்டுப் பின்வாங்கினார். அதோடு, ஒரு கட்டத்தில் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனும் அந்த விவகாரத்தை நிறுத்திக் கொண்டார். 

ஆக, இப்போதைய இந்தச் சூழல், ஜக்கியின் கிடு கிடு வளர்ச்சியில் தற்காலிகமானதொரு  தேக்க நிலையை உருவாக்கியுள்ளது.

இருந்தபோதிலும் அவர் அடங்கி ஒடுங்கி இருந்துவிடவில்லை.

ஏற்கனவே, ஏராள காணொலிகளை வெளியிட்டுள்ள அவர், அண்மைக் காலங்களில், 'பயத்திலிருந்து விடுபடுவது எப்படி?', 'மகா சமாதி அடைவது எப்படி?', '100% சரியான முடிவு எடுப்பது எப்படி?', 'காம உணர்வு வருவதற்கான காரணங்கள் எவை?', 'சுயஇன்பம் சரியா, தவறா?' என்றிவ்வாறு விதம் விதமான தலைப்புகளில் காணொலிகளை வழங்கி 'மக்கள் பணி' செய்துகொண்டிருக்கிறார்.

ஜக்கியின் இன்றளவிலான நிலை இதுவாயினும், அவரின் கடந்த கால அசுர வளர்ச்சியையும், 'மிக மிக மிக' வலுவானதொரு அரசியல் பின்புலம் வாய்க்கப்பெற்றவர் என்பதையும் கணக்கில் எடுத்தால், கணிசமான கால இடைவெளிக்குப் பின்னர், மீண்டும் 'உச்சம்' தொடுவதற்கான இவரின் பயணம் தொடரும் என்றே சொல்லத் தோன்றுகிறது.

==========================================================================

உதவி:

https://tamilnadunow.com/news/tamilnadu/jakki-to-sadhguru-controversies-around-isha-and-jaggi-vasudev/