செவ்வாய், 4 ஜனவரி, 2022

பாம்புகளுக்கும் நன்றியுணர்ச்சி இல்லை!!!

மனிதர்களில் மிகப் பலருக்கு நன்றியுணர்ச்சி இல்லை என்பது போல், பாம்புகளுக்கும் அது இல்லை என்பது வேதனைப்படத் தக்க விசயமாக உள்ளது.

பாம்பினத்தைக் கடவுளினத்துக்குச் சமமாக நம் முன்னோர்கள் கருதி வழிபட்டார்கள் என்பதற்கு ஏராள எடுத்துக்காட்டுகள் உள்ளன. 

சிலவற்றிற்கு மட்டுமான பட்டியல்:

*உலக அளவில் வகை வகையான கடவுளர்கள் இருப்பினும், முழுமுதல் கடவுள் என்று சொல்லப்படும் சிவபெருமானின் திருச்சடையில் பாம்பு வாசம் செய்வதாகச் சொல்லி நம் மூதாதையர் வழிபட்டனர்.

*பாம்பைப் பெண் தெய்வமாக்கி, 'நாகாத்தா'[நாகம்+ஆத்தா] என்று பெயர் சூட்டி, கோயிலும் கட்டி, பொங்கல் வைத்துப் பாலாபிஷேகம் செய்வதை வழக்கப்படுத்தியிருக்கிறார்கள்.

*கரையான் புற்றுதானே என்று அலட்சியப்படுத்தாமல், அங்குக் குடிகொண்டிருக்கும் பாம்புக் கடவுளுக்காகப் பலாபிஷேகம், முட்டை அபிஷேகம்[முட்டையை உடைத்துப் புற்றில் ஊற்றுதல்] எல்லாம் செய்து வழிபடுகிறார்கள்.

*வாயில் முள் குத்தியதால் சொல்லொணாத வேதனைக்கு உள்ளான ஒரு பாம்பின் வாயிலிருந்த அந்த முள்ளை, நம் முன்னோர்களில் ஒருவர் பிடுங்கியெறிந்து உதவியதாகச் சொல்லப்படும் 'அதிசய' வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

*'பாம்பின் பல்லில் இருக்கும் நஞ்சு ஒரு காலக்கட்டதில் ரத்தினக் கற்களாக மாறும்' என்பன போன்ற கதைகளைப் படைத்துக் காலங்காலமாக அவற்றைப் பரப்புரையும் செய்து, அந்த இனத்திற்குப் பெருமை சேர்த்தார்கள்... சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

*பாம்பானது, உடல் வேறாகவும் தலை வேறாகவும் துண்டிக்கப்பட்டாலும், காலையில் உதயமான சூரியன் மாலையில் மறையும்வரை காத்திருந்து அதற்கு மரியாதை செலுத்திய பின்னரே அது உயிர் துறக்கும் என்பதாகச் சக மனிதர்களை நம்பவைத்துப் பாம்பினத்திற்கு மரியாதை செலுத்தியிருக்கிறார்கள்.

*தவறுதலாக ஒரு பாம்பைக் கொன்றுவிட நேர்ந்தால், கொல்லப்பட்ட பாம்பை மண்ணில் புதைத்துப் பாலூற்றி வழிபடும் சடங்கினை இன்றளவும் தொடர்ந்து செய்கிறார்கள்.

*பாம்பினத்தில், ஐந்து தலை நாகம், ஏழு தலை நாகம் எல்லாம் இருப்பதாக[கதைத்து]ச் சொல்லி, வேறெந்த உயிரினத்தைக் காட்டிலும் பாம்பினம் மிக உயர்ந்ததாக்கும் என்று உலகத்தார்க்கு எடுத்துரைத்திருக்கிறார்கள்.

இப்படியாக, இன்னும் எப்படியாகவெல்லாமோ பம்பினத்தைப் பெருமைப்படுத்தியதோடு, 'பாம்பைத் தெய்வமாக வழிபடுபவர்களை அது ஒருபோதும் கடிப்பதில்லை' என்று உறுதிபடச் சொல்லியும் இருக்கிறார்கள் நம்மவர்கள்.

ஆனால்.....

இவர்களின் உறுதிமொழிக்கு மாறாக, இன்றளவும் வாய்ப்பு அமையும்போதெல்லாம், பாம்புகள் மனிதர்களைக் கடித்துக்கொண்டுதான் இருக்கின்றன. மனிதர்கள் உயிரிழப்பதும் நிகழ்ந்துகொண்டுதான் உள்ளது.

இது குறித்துச் சிந்திக்கும்போது, மனிதர்களில் பலரைப் போல் பாம்புகளும் செய்நன்றி மறந்தனவோ என்று எண்ணத் தோன்றுகிறது! ஹ... ஹ... ஹ!!!

==========================================================================