ஞாயிறு, 27 பிப்ரவரி, 2022

ஜக்கியின் மந்திர சக்தி!!!

'கோவை ஈஷாவில் மஹாசிவராத்திரி விழா[கூத்து] வரும் மார்ச் 1ஆம் தேதி ஆதியோகி முன்பு மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது. ஆதியோகியின் அருளைப் பெறும் விதமாக, சத்குருவால் சக்தியூட்டப்பட்ட ருத்ராட்சங்கள் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளன'   -இப்படியொரு அறிவிப்பு, தொடர்ந்து ஊடகங்களில் விளம்பரம் செய்யப்படுகிறதுhttps://www.maalaimalar.com/amp/news/topnews/2022/02/24215902/3515330/Mahashivratri-Celebrations-at-Isha-on-March-1.vpf; ஜக்கி வாசுதேவ் இது குறித்த 'காணொலி'யும் வெளியிட்டுள்ளார்.

'மிஸ்டு கால்' கொடுத்தால், ருத்ராட்சத்துடன் சேர்த்துத் தியானலிங்கத்தில் வைத்துச் சக்தியூட்டப்பட்ட விபூதி, பயத்தை நீக்கி, ஒருவரின் குறிக்கோளை நிறைவேற்ற உதவும் அபய சூத்ரா, ஆதியோகியின் புகைப்படம் ஆகியவை இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்படுமாம்.

'ருத்ராட்சத்தை ஒருவர் அணிவதன் மூலம் உடல் மற்றும் மனதளவில் சமநிலை பெற முடியும். ஆரா தூய்மை பெறும்[?]. எதிர்மறைச் சக்திகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்' என்கிறார் ஜக்கி.

'மனதளவில் சமநிலை' என்கிறார். அதென்ன சமநிலை? எத்தனை பேருக்குப் புரியும்?

மனம் தூய்மை பெறுமாம். எதிர்மறைச் சக்திகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியுமாம். 

எதிர்மறைச் சக்தி என்றால் என்ன?

கெட்ட எண்ணங்களை அண்டவிடாமல் தடுக்கும் ஆற்றலா? இதையும் எளிதாகப் புரியும் வகையில் சொல்லியிருக்கலாமே?

உருத்திராட்சம்  அணிவது அப்புறம். இப்போதைய நம் கேள்வி.....

பல ஆண்டுகளாக, ஆயிரக் கணக்கில் அப்பாவி மக்களைக் கூட்டி வைத்துத் 'தியானம்' செய்யக் கற்றுக்கொடுத்தாரே ஜக்கி, அந்தத் தியானத்தால், மனம் சமநிலை பெறுவது, தூய்மை பெறுவது, தீய சக்தியை அண்டவிடாமல் தடுப்பது ஆகிய பயன்களையெல்லாம் பெற முடியவில்லையா?

"முடிந்தது" என்றால், புதிதாக இந்த உருத்திராட்ச வினியோகம் எதற்கு?

இந்த உருத்ராட்சம், விபூதி, அபய சூத்ரா[ஜக்கியின் கண்டுபிடிப்பு?] ஆகியனவெல்லாம் ஜக்கியால் சக்தி ஊட்டப்பட்டனவாம்?

இந்தச் சக்தியை இவர் எங்கிருந்து பெற்றார்?

உடல் நோய்களாலும் மனநோய்களாலும் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக அணுகி தன்னுடைய இந்தச் சக்தியைப் பயன்படுத்தி இதுவரை எத்தனை பேரைக் குணப்படுத்தியிருக்கிறார்?

குணப்படுத்தியிருந்தால், இந்த உருத்திராட்சம், விபூதி, அபய சூத்ரா எல்லாம் எதற்கு?

உருத்திராட்சம் முதலானவற்றில் மந்திர சக்தியை ஏற்றத் தெரிந்த ஜக்கி, அதே மந்திர சக்தியைக் காற்றில் கலக்கச் செய்தால் உலக மக்கள் அத்தனை பேரும் பயன் பெறுவார்களே.

செய்வாரா?

காசு வாங்கிக்கொண்டு, மக்களின் குறைகளைப் போக்குவதாகச் சொல்லித் 'தாயத்து' விற்கும் மந்திர தந்திரவாதிகளை நாம் அறிவோம். பேருந்து நிலையங்களில் 'அதிர்ஷ்ட நரிக்கொம்பு' விற்கிற நரிக்குறவர்களை நாம் அறிவோம். இவர்கள் மூடநம்பிக்கையை விற்பவர்கள்.

காசு வாங்காமல் இதே மூடநம்பிக்கையை, இலவசமாக வேறு வேறு பெயர்களில் வழங்க இருக்கிறார் ஜக்கி.

விழிப்புடன் தற்காத்துக்கொள்வதும், இவரின் தந்திரத்தில் சிக்கிச் சீரழிவதும் அவரவர் மனப் பக்குவத்தைப் பொருத்தது!

==========================================================================